search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கியது-  விலை குறைய வாய்ப்பு
    X

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கியது- விலை குறைய வாய்ப்பு

    • கோயம்பேடு சந்தைக்கு தினசரி 60-க்கும் மேற்பட்ட லாரிகளில் விற்பனைக்கு வரும் தக்காளியின் வரத்து கடந்த ஒரு மாதமாகவே பாதியாக குறைந்து இருந்தது.
    • வரும் நாட்களில் தக்காளி வரத்து மேலும் அதிகரித்து விலை குறைய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    போரூர்:

    தமிழகத்தில் தக்காளி விலை கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக உச்சத்தில் இருந்து வருகிறது. ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து தினசரி கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளி குறைந்ததால் இந்த விலை உயர்வு ஏற்பட்டது. வடமாநிலங்களில் பெய்த "திடீர்" மழையால் அங்குள்ள வியாபாரிகளும் தக்காளியை கொள்முதல் செய்ய ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் அதிகளவில் குவிந்ததால் கோயம்பேடு மார்கெட்டுக்கு வரும் தக்காளியின் வரத்து பாதியாக குறைந்து விலை அதிகரிக்க தொடங்கியது. இதனால் தக்காளி விலை புதிய உச்சமாக கிலோ ரூ.200 வரை விற்கப்பட்டது.

    கோயம்பேடு சந்தைக்கு தினசரி 60-க்கும் மேற்பட்ட லாரிகளில் விற்பனைக்கு வரும் தக்காளியின் வரத்து கடந்த ஒரு மாதமாகவே பாதியாக குறைந்து இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அதன் வரத்து மேலும் குறைந்து 25 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்தது. இதற்கிடையே தற்போது கோயம்பேடு மார்கெட்டுக்கு வரும் தக்காளியின் வரத்து சற்று அதிகரித்து வருகிறது. இன்று 35 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்தது. இதையடுத்து மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ130-க்கும், மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.150-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே வரும் நாட்களில் தக்காளி வரத்து மேலும் அதிகரித்து விலை குறைய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து தக்காளி மொத்த வியாபாரி ஜாபர் அலி சேட் கூறும்போது,

    ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் மழை பாதிப்பு குறைந்து உற்பத்தி சீராக நடந்து வருகிறது. இனிவரும் நாட்களில் தக்காளியின் வரத்து மேலும் அதிகரித்து விலை படிப்படியாக குறையவே வாய்ப்பு உள்ளது. 15நாட்களுக்குள் தக்காளியின் விலை பழைய நிலைக்கு திரும்பி ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.50 என்ற நிலைக்கு வந்துவிடும் என்றார்.

    Next Story
    ×