search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை குறைந்தாலும் காய்கறி கடைகளில் குறையவில்லை
    X

    கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை குறைந்தாலும் காய்கறி கடைகளில் குறையவில்லை

    • ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்து உள்ளது.
    • கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 10, 15 லாரிகளில் வந்த தக்காளி இப்போது 40 லாரிகளில் வருகிறது.

    போரூர்:

    ஏழை மக்களை 2 மாதமாக மிரட்டி வந்த தக்காளி விலை தற்போது குறையத் தொடங்கியுள்ளது.

    தமிழகத்தில் தக்காளி விளைச்சல் குறைந்தது மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் பாதித்ததால் தக்காளி வரத்து கணிசமாக குறைந்தது. இதனால் தக்காளி கிலோ ரூ.200 வரை விற்கப்பட்டது.

    கோயம்பேடு மார்க்கெட்டிற்கு குறைந்த அளவில் தக்காளி வந்ததால் சில்லரை காய்கறி கடைகளில் விலை உச்சத்தை அடைந்தது. இதனால் பொதுமக்கள் தக்காளி பயன்பாட்டை குறைத்தனர்.

    100 கிராம், 200 கிராம், கால் கிலோ என வாங்கும் அளவை குறைத்தனர். ஓட்டல்களில் தக்காளி சாதம், சட்னி போன்றவை காணாமல் போனது.

    இந்த நிலையில் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்து உள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 10, 15 லாரிகளில் வந்த தக்காளி இப்போது 40 லாரிகளில் வருகிறது. இதனால் விலையும் படிப்படியாக குறைந்து வருகிறது.

    இந்த வாரத்தின் தொடக்கத்தில் கிலோ ரூ.120, ரூ.130 வரை விற்கப்பட்ட தக்காளி தற்போது ரூ.100-க்குள் குறைந்தது. மொத்த விலையில் கிலோ ரூ.60 ஆக இருந்த தக்காளி நேற்று முன்தினம் ரூ.50 ஆக குறைந்தது.

    இன்று மேலும் 15 ரூபாய் குறைந்ததை தொடர்ந்து சில்லரையில் கிலோ ரூ.60, ரூ.70-க்கு ஒரு சில இடங்களில் விற்கப்படுகிறது.

    இன்று 40 லாரிகளில் தக்காளி வந்ததால் விலை மேலும் சரிந்துள்ளது.

    கோயம்பேடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தக்காளி விலை குறைந்த அளவிற்கு சென்னையின் மற்ற பகுதிகளில் விலை குறையவில்லை. காய்கறி கடை வியாபாரிகள் இன்றும் கிலோ ரூ.90 முதல் ரூ.100 வரை விற்கிறார்கள்.

    மொத்த மார்க்கெட்டில் குறையும் போது சில்லரை விற்பனையிலும் குறைக்க வேண்டும். ஆனால் ஒரு சில சில்லரை வியாபாரிகள் விலையை குறைக்காமல் விற்பது பொதுமக்களை பாதிக்கிறது. தக்காளியை தொடர்ந்து பிற காய்கறிகளின் விலையும் குறைந்து உள்ளது.

    Next Story
    ×