search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கியது சர்வாதிகாரத்தின் உச்சம்- திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கியது சர்வாதிகாரத்தின் உச்சம்- திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு

    • அ.தி.மு.க.வை எப்படியாவது அழித்து விடலாம் என்று தி.மு.க. தொடர்ந்து பல சூழ்ச்சிகளை செய்து வருகிறது.
    • தமிழகத்தில் சிறப்பான முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டார்.

    திண்டுக்கல்:

    முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் திண்டுக்கல் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் என்.ஜி.ஓ. காலனியில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் கட்சியின் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    அ.தி.மு.க.வை எப்படியாவது அழித்து விடலாம் என்று தி.மு.க. தொடர்ந்து பல சூழ்ச்சிகளை செய்து வருகிறது. ஆனால் இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. தமிழகத்தில் சிறப்பான முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டார்.

    அதன்பிறகு இடைக்கால பொதுச் செயலாளராக கட்சியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். இந்த இயக்கத்தை அழிக்க தி.மு.க. மட்டுமின்றி சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோரும் முயன்று வருகின்றனர். ஆனால் இந்த இயக்கம் மீண்டும் வலுவாக உருவாகி வருகிறது. தி.மு.க. ஆட்சி அமைய முக்கிய காரணமாக இருந்தவர்கள் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும்தான். ஆனால் தற்போது அவர்கள் தங்கள் கோரிக்கைக்காக போராட்டம் நடத்தி வருகின்றனர். 20 மாத தி.மு.க. ஆட்சி மக்களுக்கு நன்மை செய்துள்ளதா? இல்லையா என்பதை மக்களே புரிந்து கொள்வார்கள்.

    தி.மு.க.வை கருணாநிதியின் குடும்ப சொத்தாக மாற்றி விட்டனர். கோட்டையில் ஸ்டாலின் குடும்பத்தினர் நிழல் முதல்வர்கள் போல வலம் வருகின்றனர். உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கி 10-வது இடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்துள்ளார்.

    தன்னை யாரும் கேள்வி எழுப்ப முடியாது என்ற தைரியத்தில் சர்வாதிகாரத்தின் உச்சமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு இடைத்தேர்தல் மட்டுமின்றி இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன், தலைமை கழக பேச்சாளர்கள் குமுதா பெருமாள், மின்னல் மீனாட்சி சுந்தரம் பேசினர். மாவட்ட அவைத்தலைவர் சங்கரநாராயணன், ஒன்றிய இணைச் செயலாளர் காளியம்மாள், துணைச் செயலாளர் லதா தர்மராஜ், முன்னாள் அரசு வக்கீல் மனோகரன், மாவட்ட பிரதிநிதி சின்னகோபால், எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்கள் முத்துச்சாமி, வேலுச்சாமி, செல்வராஜ், பேரவை பொருளாளர் சிவபாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் ராஜமோகன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சின்ராஜ், பேரவை செயலாளர் ராஜா, இளைஞர் அணி செயலாளர் வேல்முருகன், மீனவரணி செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவில் ஒன்றிய அவைத்தலைவர் நந்தகோபால் நன்றி கூறினார்.

    Next Story
    ×