search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம்: வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
    X

    அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம்: வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு

    • கட்சியில் இருந்து நீக்கம் செய்ய பொதுக்குழுவுக்கு கட்சி விதிகள் அதிகாரம் ஏதும் வழங்கவில்லை.
    • கட்சியில் இருந்து நீக்கும் முன் குற்றச்சாட்டு அறிக்கை வழங்கியிருக்க வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்தது. இதில் ஒருங்கிணைப்பாளர், இைண ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டன.

    பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது என்றும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்தும், ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் அணி எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் மனுதாக்கல் செய்தார்.

    அந்த மனுவில், "இந்த வழக்கை தொடர்ந்துள்ள மனோஜ் பாண்டியன் தற்போது கட்சி உறுப்பினரே கிடையாது. அ.தி.மு.க. பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக என்னை பொதுக்குழு உறுப்பினர்கள் முறைப்படி தேர்வு செய்தனர்.

    ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

    கலைக்கப்பட்ட பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வந்து ஒற்றை தலைமையை அ.தி.மு.க.வில் ஏற்படுத்துவது என்பது தொண்டர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களின் விருப்பம்.

    பொதுக்குழு தீர்மானங்கள் அமலுக்கு வந்து 8 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் மனுதாரர் தொடர்ந்துள்ள இந்த வழக்கு செல்லாததாகி விட்டது. எனவே இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று கூறி இருந்தார்.

    இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி குமரேஷ்பாபு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வைத்தியலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன் கூறியதாவது:-

    கட்சி சட்ட விதிகளை பின்பற்றாமல், மனுதாரர்களை நீக்கம் செய்துள்ளனர். மனுதாரர்கள் விதிகளின்படி தங்கள் தரப்பு விளக்கம் கேட்கவில்லை. எடப்பாடி தரப்பு சர்வாதிகார போக்குடன் செயல்பட்டுள்ளது.

    இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற பின் எதற்காக சட்டமன்றத்தில் கட்சி சாராத உறுப்பினராக ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இருக்க வேண்டும்.

    கட்சியில் இருந்து நீக்கம் செய்ய பொதுக்குழுவுக்கு கட்சி விதிகள் அதிகாரம் ஏதும் வழங்கவில்லை. கட்சியில் இருந்து நீக்கும் முன் குற்றச்சாட்டு அறிக்கை வழங்கியிருக்க வேண்டும்.

    நோட்டீஸ் கொடுக்கும் முன் சஸ்பெண்ட் தான் செய்ய முடியும். நேரடியாக கட்சியில் இருந்து நீக்க முடியாது. மேலும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் பரிந்துரை தான் செய்ய முடியும்.

    2022 ஜூலை 11-க்கு முந்தைய நிலை நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும். வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் பொதுச்செயலாளர் தேர்தல் நடவடிக்கைகளை எதிர்த்து நீதிமன்றத்தை நாட அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து மனோஜ் பாண்டியன் தரப்பு வக்கீல் சலீம் வாதாடுகையில் கூறியதாவது:-

    இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடியை இன்னும் அங்கீகரிக்கவில்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீடிக்கின்றன. அப்படி இருக்கும் போது இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பதவியின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி பதில்மனு தாக்கல் செய்ய முடியாது.

    சட்டமன்ற கூட்டத்தொடர் 20-ந்தேதி கூடுகிறது. இதுசம்பந்தமாக சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியும் பதில் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அ.தி.மு.க. தரப்பில் மூத்த வக்கீல் வைத்தியநாதன் ஆஜரானார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அ.தி.மு.க. மற்றும் எடப்பாடி பழனிசாமி 2 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    மேலும் விசாரணையை வருகிற ஏப்ரல் 11-ந் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    Next Story
    ×