என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
தமிழகத்தில் வாக்குகள் சிதறுவதால் பாதிப்பு யாருக்கு?
- தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் ஒரு அணி களம் காண்கிறது.
- பாரதிய ஜனதா கட்சியும் புதிய கூட்டணிக்கு தயாராகி வருகிறது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தீவிரப் படுத்தி உள்ளன. கூட்டணி பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் ஒரு அணி களம் காண்கிறது. இந்த கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் இந்த கூட்டணி 39 தொகுதிகளை கைப்பற்றியது. தேனி பாராளுமன்ற தொகுதியில் மட்டுமே அ.தி.மு.க. வெற்றி பெற்றது.
இதனால் தி.மு.க. தலைமையிலான இந்த அணி பலம் வாய்ந்த அணியாகவே பார்க்கப்படுகிறது. வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாகவே கணிக்கப்பட்டு வருகிறது.
மற்ற மாநிலங்களில் இந்தியா கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் அந்த கூட்டணி கட்டுக்கோப்புடனேயே உள்ளது.
இதனால் நிச்சயம் இந்தியா கூட்டணி தமிழகத்தில் வெல்லும் என்றே அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர். இப்படி பலம் வாய்ந்ததாக கருதப்படும் தி.மு.க. கூட்டணிக்கு எதிராக மெகா கூட்டணியை உருவாக்க அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியும் புதிய கூட்டணிக்கு தயாராகி வருகிறது. சீமானின் நாம் தமிழர் கட்சியும் எப்போதும் போல தனித்தே களம் காண உள்ளது. இதனால் தமிழக தேர்தல் களத்தில் 4 முனை போட்டி உருவாகியுள்ளது.
தி.மு.க. கூட்டணிக்கு எதிராக பலம் வாய்ந்த புதிய கூட்டணியை உருவாக்க அ.தி.மு.க. பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தி வருகிறார்.
பாரதிய ஜனதாவுடனான கூட்டணியை உதறிவிட்டு வெளியேறியுள்ள அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளோடு சேர்ந்து கூட்டணி அமைப்பதற்கான வேலைகளை தீவிரப்படுத்தி உள்ளது.
இதுபோன்று ஒரு கூட்டணியை ஏற்படுத்தி விட்டால் நிச்சயம் தி.மு.க. கூட்டணிக்கு கடும் போட்டியை ஏற்படுத்தி வெற்றி பெற்று விடலாம் என்று அக்கட்சி கணக்கு போட்டுள்ளது.
இந்த கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ., புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகளும் சேரும்போது நிச்சயம் அது வெற்றிக் கூட்டணியாகவே இருக்கும் என்று அ.தி.மு.க.வினர் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
பாராளுமன்ற தேர்தல் களத்தில் அரசின் சாதனைகளை எடுத்துக்கூறியும், மத்தியில் உள்ள பாரதிய ஜனதா அரசுக்கு எதிராகவும் பிரசார வியூகத்தை மேற் கொள்ள தி.மு.க. திட்டமிட்டு உள்ளது.
அதே நேரத்தில் தி.மு.க. அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வரும் அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளையும் தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டி வருகிறது.
தேர்தல் களத்தில் இதையே அ.தி.மு.க. பெரிய பிரசாரமாக மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ள எடப்பாடி பழனிசாமி சிறுபான்மை மக்களின் ஓட்டுகளை பெரும் வகையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநாட்டிலும் பங்கேற்று உள்ளார். இதனை மையப்படுத்தியும், தி.மு.க. அரசுக்கு எதிராகவும் அவர் பிரசார வியூகங்களை வகுக்க உள்ளார்.
இப்படி தேர்தல் களத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணிக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியும் புதிய கூட்டணியை அமைப்பதற்கு காய் நகர்த்தி வருகிறது.
பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய 2 கட்சிகளுக்கும் பாரதிய ஜனதா கட்சி வலை விரித்துள்ளது. ஆனால் அது எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்பது தெரியவில்லை. ஒரு வேளை இந்த முயற்சி கைகூடாவிட்டால் சிறிய கட்சிகளோடு கூட்டணி அமைத்து தங்களது பலம் என்ன? என்பதை நிரூபிக்க பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது.
இதனால் பாராளுமன்ற தேர்தல் களத்தில் பாரதிய ஜனதா கட்சி 2 திராவிட கட்சிகளுக்கும் எதிராக என்ன செய்யப் போகிறது? என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
எப்போதும் போல நாம் தமிழர் கட்சி பாராளுமன்ற தேர்தலை தனித்தே சந்திக்க உள்ளது. தமிழகம் புதுவையில் 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் 20 பெண் வேட்பாளர்களையும் அந்த கட்சி களம் இறக்குகிறது.
நாம் தமிழர் கட்சியை பொறுத்த வரையில் ஒவ்வொரு தேர்தலிலும் அந்த கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த தேர்தலில் நிச்சயம் மற்ற கட்சிகள் வியந்து பார்க்கும் அளவுக்கு இதுவரை இல்லாத வகையில் வாக்குகளை பெறுவோம் என்று நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இப்படி தமிழக தேர்தல் களத்தில் நான்கு முனை போட்டி உருவாகி இருப்பதன் மூலம் வாக்குகள் சிதறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டு உள்ளது.
தேர்தல் களத்தில் பாரதிய ஜனதா கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை பிரிக்கும் ஓட்டுகள் இரண்டு திராவிட கட்சிகளுக்குமே கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது.
இதற்கு முன்பு நாம் தமிழர் கட்சி பிரித்த ஓட்டுக்கள் பல தொகுதிகளில் தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் பாராளுமன்ற தேர்தல் களத்தில் இந்த இரண்டு கட்சிகளுக்கும் எதிராக பாரதிய ஜனதா கட்சியும் குறிப்பிடத்தக்க வகையில் வாக்குகளை பிரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி இரண்டு பிரிவுகளாக தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு எதிராக பிரியும் வாக்குகள் தேர்தல் முடிவுகளில் அதிரடி மாற்றங்களையும் ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். எனவே பாராளுமன்ற தேர்தல் களம் இந்த முறை கணிக்க முடியாத அளவுக்கு மாறி இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்