search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ரூ.1000 பொங்கல் பரிசு தொகுப்பு அடுத்த வாரம் கிடைக்குமா?
    X

    ரூ.1000 பொங்கல் பரிசு தொகுப்பு அடுத்த வாரம் கிடைக்குமா?

    • நிவாரண பணம் கிடைக்காத பொதுமக்கள் ரேசன் கடைகளில் ரூ.6 ஆயிரம் கேட்டு விண்ணப்பம் எழுதி கொடுத்துள்ளனர்.
    • புத்தாண்டு பிறந்த ஓரிரு நாட்களில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

    சென்னை:

    புத்தாண்டு நாளை பிறப்பதையொட்டி தமிழக மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை எதிர் நோக்க தொடங்கி உள்ளனர்.

    ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடுவதற்காக தமிழக அரசானது ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் முழு கரும்பு, ரொக்கப் பணம் தருவது வழக்கம்.

    அந்த வகையில் இந்த பொங்கல் பண்டிகைக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ரொக்கப்பணம் ரூ.1000, ஒரு முழு கரும்பு ஆகியவற்றை வழங்க திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.

    ஆனாலும் இன்னும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பரிசுத் தொகுப்பு எப்போது கிடைக்கும்? என எதிர்பார்க்க தொடங்கிவிட்டனர்.

    இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் ரேசனில் பொங்கல் பண்டிகைக்கு என்னென்ன பொருட்கள் வழங்குவது என்பது குறித்து டிசம்பர் மாதமே முடிவு செய்து பொங்கல் பரிசுத் தொகுப்பும் தொடங்கி வைக்கப்பட்டு விடும்.

    ஆனால் இந்த டிசம்பர் மாதத்தில் 'மிச்சா' புயல் வந்த காரணத்தால் சென்னை உள்பட 4 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்தது. அதன் பிறகு தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் தூத்துக்குடி-திருநெல்வேலி மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.

    இந்த மாவட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண பணிகள் வழங்கும் பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. நிவாரண பணம் கிடைக்காத பொதுமக்கள் ரேசன் கடைகளில் ரூ.6 ஆயிரம் கேட்டு விண்ணப்பம் எழுதி கொடுத்துள்ளனர்.

    அவர்களின் வங்கிக் கணக்கிற்கு இன்னும் பணம் போய் சேரவில்லை. நாளை அல்லது நாளை மறுநாள் தான் பணம் அனுப்பப்படும் என தெரிகிறது.

    இந்த சூழலில் வெள்ளம் பாதிக்காத மாவட்டங்களில் உள்ள மக்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பை ஆவலுடன் எதிர்பார்ப்பது அரசின் கவனத்துக்கு வந்துள்ளது.


    ஆனாலும் அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பை மிக விரைவில் அறிவிக்கும். வெள்ள நிவாரணத்தால்தான் இந்த அறிவிப்பு தாமதமாகி உள்ளது.

    புத்தாண்டு பிறந்த ஓரிரு நாட்களில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன் ஏற்கனவே ஆலோசனை நடத்தி உள்ளார். எனவே விரைவில் அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×