search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தொழில் அதிபரை காதலில் வீழ்த்தி ரூ.50 லட்சத்தை சுருட்டிய கில்லாடி பெண் நண்பருடன் கைது
    X

    தொழில் அதிபரை காதலில் வீழ்த்தி ரூ.50 லட்சத்தை சுருட்டிய 'கில்லாடி' பெண் நண்பருடன் கைது

    • ராம் பாலாஜி, திருமணம் செய்ய போகும் பெண்தானே என நினைத்து வித்யா ஸ்ரீ கேட்கும் போதெல்லாம் பணத்தை வாரி இறைத்துள்ளார்.
    • வித்யா ஸ்ரீ -அஜித்குமார் இருவரையும் வாடிப்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

    சென்னை:

    சென்னை போரூர் முகலிவாக்கம் பகுதியில் வசித்து வருபவர் ராம் பாலாஜி. தொழில் அதிபரான இவர், ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார்.

    மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் ராம் பாலாஜி மதுரையில் திருமணம் ஒன்றில் பங்கேற்பதற்காக சென்றிருந்தார். அப்போது வித்யா ஸ்ரீ என்ற 31 வயது இளம்பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. வித்யா ஸ்ரீ தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டு இனிக்க இனிக்க பேசினார்.

    இதையடுத்து ராம் பாலாஜியின் செல்போன் எண்ணையும் அவர் வாங்கிக் கொண்டார். திருமண நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ராம்பாலாஜி சென்னை திரும்பிய பின்னர் செல்போனில் தொடர்பு கொண்டு வித்யா ஸ்ரீ பேசி வந்தார். அப்போது உங்களை எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது என்று ஆசை வார்த்தைகளை அள்ளி வீசி காதலில் வீழ்த்தினார்.

    நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று வித்யா ஸ்ரீ கூறினார். இதற்கு ராம் பாலாஜியும் சம்மதித்தார்.

    ராம் பாலாஜியிடம் பணம் இருப்பதை தெரிந்து கொண்ட வித்யா ஸ்ரீ கொஞ்சம் கொஞ்சமாக பணம் பறித்துள்ளார். தனது செலவுகளை கூறி வங்கி கணக்கையும் வித்யா ஸ்ரீ அனுப்பி வைத்துள்ளார்.

    இதையடுத்து ராம் பாலாஜி, திருமணம் செய்ய போகும் பெண்தானே என நினைத்து வித்யா ஸ்ரீ கேட்கும் போதெல்லாம் பணத்தை வாரி இறைத்துள்ளார். இப்படி ராம் பாலாஜியிடம் இருந்து வித்யா ஸ்ரீ ரூ.50 லட்சம் பணத்தை சுருட்டினார்.

    ராம் பாலாஜி திருமணம் பற்றி பேசும்போதெல்லாம் வித்யா ஸ்ரீ சாக்கு போக்கு சொல்லி காலம் தாழ்த்தி வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வித்யா ஸ்ரீயை ராம் பாலாஜியால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராம் பாலாஜி இதுபற்றி விசாரித்தார். அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மதுரை அலங்காநல்லூரை அடுத்த சிக்கந்த சாவடி பகுதியில் வசித்து வந்த வித்யா ஸ்ரீ வீட்டை காலி செய்துவிட்டு ஓட்டம் பிடித்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ராம் பாலாஜி தான் ஏமாற்றப்பட்டது குறித்து அலங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்குப் பதிவு செய்து வித்யா ஸ்ரீயை தேடி கண்டுபிடித்து கைது செய்தனர். அவரது நண்பரான அஜித்குமாரும் பிடிபட்டார். ராம்பாலாஜி இடமிருந்து ரூ.50 லட்சம் பணத்தை சுருட்டியதற்கு அஜித்குமார் உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    வித்யா ஸ்ரீ -அஜித்குமார் இருவரையும் வாடிப்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். வித்யா ஸ்ரீ இதுபோன்று வேறு யாரையும் ஏமாற்றி உள்ளாரா? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×