search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரிப்பு: தக்காளி கிலோ ரூ.100-க்கு கீழ் குறைந்தது
    X

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரிப்பு: தக்காளி கிலோ ரூ.100-க்கு கீழ் குறைந்தது

    • கோயம்பேடு சந்தைக்கு இன்று 35 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது.
    • கோயம்பேடு மார்க்கெட்டில் பீன்ஸ் விலை மட்டும் சற்று அதிகமாக உள்ளது.

    போரூர்:

    தமிழகத்தில் தக்காளி விலை கடந்த ஒரு மாதமாக உச்சத்தில் இருந்து வந்தது. கிலோ ரூ.200 வரை விற்கப்பட்டது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக 60 லாரிகள் வரை தக்காளி விற்பனைக்கு வரும். ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் 'திடீர்' மழை மற்றும் வடமாநிலங்களில் பெய்த கனமழையால் தக்காளி வரத்து பாதிக்கும் கீழ் குறைந்தால் இந்த விலை உயர்வு என்று கூறப்பட்டது.

    தக்காளி விலையை கட்டுப்படுத்த ரேசன் கடைகளில் தக்காளி விற்பனையை அரசு தொடங்கியது. அங்கு கிலோ ரூ.60-க்கு விற்கப்பட்டதால் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளியின் வரத்து கடந்த சில நாட்களாக மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த 3 நாட்களாக தினசரி 30 லாரிகளுக்கும் மேல் தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளன. இதனால் தக்காளி விலை ரூ.100-க்கு கீழ் சரியத் தொடங்கி உள்ளது.

    கோயம்பேடு சந்தைக்கு இன்று 35 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது. மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.80-க்கும், மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.100-க்கும் விற்கப்படுகிறது.

    கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை ரூ.100-க்கு கீழ் குறைந்து உள்ளதால் வெளிமார்க்கெட்டில் உள்ள கடைகளிலும் தக்காளி விலை குறையத்தொடங்கி உள்ளன. இதனால் பொதுமக்களும், இல்லத்தரசிகளும் நிம்மதி அடைந்து உள்ளனர்.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, கடந்த வாரத்தில் தக்காளி விலை இரட்டை சதம் அடித்து இருந்தது. கடந்த சில நாட்களாக கோயம்பேடு மார்கெட்டுக்கு வரும் தக்காளியின் வரத்து சற்று அதிகரித்து வருகிறது. இதனால் தக்காளி விலை குறையத்தொடங்கி விட்டன. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் மழை பாதிப்பு குறைந்து உற்பத்தி சீராக நடந்து வருகிறது. எனவே இனி வரும் நாட்களில் தக்காளியின் வரத்து மேலும் அதிகரித்து விலை படிப்படியாக குறையவே வாய்ப்பு உள்ளது. இன்னும் 15 நாட்களுக்குள் தக்காளியின் விலை பழைய நிலைக்கு திரும்பிவிடும் என்றார்.

    கோயம்பேடு மார்க்கெட்டில் பீன்ஸ் விலை மட்டும் சற்று அதிகமாக உள்ளது. மொத்த மார்க்கெட்டில் கிலோ ரூ.80-க்கு விற்பனை ஆகிறது. மற்ற பச்சை காய்கறிகள் அனைத்தும் கிலோ ரூ.50-க்கு கீழ் விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×