search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    நாளை தீபாவளி- தீ விபத்து நேர்ந்தால் அணைக்க 10 நிமிடத்துக்குள் வண்டி வரும்
    X

    நாளை தீபாவளி- தீ விபத்து நேர்ந்தால் அணைக்க 10 நிமிடத்துக்குள் வண்டி வரும்

    • கடந்த ஆண்டு அதிகமான தீவிபத்து ஏற்பட்ட இடங்கள், மக்கள் நெரிசல் மிகுந்த பகுதிகளில் புற தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
    • இந்த ஆண்டு ஜீப் வடிவிலான அதி விரைவு வாகனம் முதல்முறையாக பயன்படுத்தப்படுகிறது.

    சென்னை:

    தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடும்போது பட்டாசுகளை கவனமாக வெடிக்கும்படி விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இருப்பினும் எதிர்பாராத வகையில் தீ விபத்துகள் நேர்ந்தால் உடனடியாக தீயை அணைக்கவும், மீட்கவும் தீயணைப்புதுறை விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.

    தீ விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் நகர்ப்புறங்களில் 10 நிமிடங்களிலும், கிராமப்புறங்களில் 20 நிமிடங்களிலும் தீயணைப்பு வாகனங்கள் செல்லும்படி தயார்படுத்தப்பட்டு உள்ளது.

    சென்னையில் 49 தீயணைப்பு நிலையங்களுடன் கூடுதலாக 26 இடங்களில் புற தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    கடந்த ஆண்டு அதிகமான தீவிபத்து ஏற்பட்ட இடங்கள், மக்கள் நெரிசல் மிகுந்த பகுதிகளில் புற தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தீயணைப்பு வாகனத்துக்கும் 15 தீயணைப்பு வீரர்கள் 24 மணி நேரமும் தயாராக இருப்பார்கள்.

    தண்ணீர் தேவைக்காக மெட்ரோ வாட்டர் நிலையங்களில் 50 லாரிகள் எப்போதும் தயார் நிலையில் இருக்கும். சென்னையில் 1000 தீயணைப்பு வீரர்கள் இருக்கிறார்கள். கூடுதலாக 200 பேர் வெளி மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளார்கள்.

    இந்த ஆண்டு ஜீப் வடிவிலான அதி விரைவு வாகனம் முதல்முறையாக பயன்படுத்தப்படுகிறது.

    இந்த வாகனத்தில் டேங்கரில் ரசாயன கலவையுடன் கூடிய தண்ணீர் 500 லிட்டர் இருக்கும். வாகனத்தில் உள்ள தண்ணீரை உமிழும் மோட்டார், தண்ணீரை மழைத்தூறல் போல பீய்ச்சி அடிக்கும்.

    இதனால் தீயின் பரவலை வேகமாக கட்டுப்படுத்தி, விரைந்து அணைக்க முடியும், என தீயணைப்புத்துறை அதிகாரிகள் கூறினர். மேலும் தண்ணீரோடு கலக்கப்பட்டிருக்கும் ரசாயனம், தீயை வேகமாக அணைக்கும் தன்மை கொண்டது. இதனால் தீயை குறைந்தளவு தண்ணீரால் அணைத்து விட முடியும் எனவும் அவர்கள் கூறினர்.

    குறுகியப் பகுதிகளில் ஏற்படும் தீயையும், சிறிய நடுத்தர விபத்துக்களில் ஏற்படும் தீயையும் அணைக்கும் வகையில் இந்த வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது.

    இதேபோல் தீக்காயங்களுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காக கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி, ராஜீவ் காந்தி ஆஸ்பத்திரிகளில் தீக்காய வார்டுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×