search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தி.நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: ரங்கநாதன் தெருவில் 3 இடங்களில் கோபுரங்கள் அமைத்து கண்காணிப்பு
    X

    தி.நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: ரங்கநாதன் தெருவில் 3 இடங்களில் கோபுரங்கள் அமைத்து கண்காணிப்பு

    • பொதுமக்கள் கூடும் முக்கிய சந்திப்புகளிலும் கூடுதலாக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன.
    • பாரிமுனை சந்திப்பு, வண்ணாரப்பேட்டை பகுதிகளிலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீசார் கண்காணிக்க உள்ளனர்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையையொட்டி புத்தாடைகள், பட்டாசுகளை வாங்குவதற்கு பொதுமக்கள் இப்போதே தயாராகி வருகிறார்கள். வருகிற 31-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதால் விடுமுறை நாட்களில் தி.நகரில் பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் கூடுவார்கள்.

    ஆயுத பூஜையையொட்டி 3 நாட்கள் விடுமுறை தினம் என்பதால் கடந்த 3 நாட்களாக ரங்கநாதன் தெருவில் மக்கள் கூட்டம் அலை மோதியது. இன்னும் 2 ஞாயிற்றுக்கிழமைகள் மட்டுமே இடையில் இருப்பதால் அடுத்த 2 வாரங்களும் வார இறுதி நாட்களில் மக்கள் அதிக அளவில் கூடுவார்கள்.

    இதனை கருத்தில் கொண்டு ரங்கநாதன் தெருவின் நடுவில் 3 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட், செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க போலீசார் ரகசிய கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகிறார் கள்.

    பழைய குற்றவாளிகளின் புகைப்படங்கள் அடங்கிய விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைத்துள்ள போலீசார் அவர்கள் கூட்டத்துக்குள் ஊடுருவினால் கண்டுபிடித்து கொடுக்கும் வசதியையும் ஏற்படுத்தி அதன் மூலமாக கண்காணிக்கிறார்கள்.

    ரங்கநாதன் தெரு மட்டுமின்றி தி.நகர் மற்றும் பாண்டி பஜாரின் மற்ற பகுதிகளிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையையொட்டி, தி.நகரில் போலீஸ் கமிஷனர் நேரில் சென்று விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்வார். இந்த ஆண்டும் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த வாரம் போலீஸ் கமிஷனர் அருண் நேரில் சென்று தீபாவளி சிறப்பு கட்டுப்பாட்டு அறையை திறந்து வைக்கிறார்.

    ரங்கநாதன் தெருவில் அமைக்கப்பட்டுள்ளது போன்று பொதுமக்கள் கூடும் முக்கிய சந்திப்புகளிலும் கூடுதலாக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன.

    பாரிமுனை, வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். புரசைவாக்கத்தில் டாணா தெரு சந்திப்பில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட உள்ளது.

    பாரிமுனை சந்திப்பு, வண்ணாரப்பேட்டை பகுதிகளிலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீசார் கண்காணிக்க உள்ளனர்.

    Next Story
    ×