search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் டி.ஆர்.பாலு எம்.பி. மீண்டும் போட்டியிடுவாரா?
    X

    ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் டி.ஆர்.பாலு எம்.பி. மீண்டும் போட்டியிடுவாரா?

    • 83 வயதாகும் டி.ஆர்.பாலு எம்.பி. இப்போதும் சுறுசுறுப்புடன் கட்சி பணியாற்றி வருகிறார்.
    • ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் டி.ஆர்.பாலு எம்.பி. மீண்டும் போட்டியிட்டால் அவருக்காக கடுமையாக உழைக்கக்கூடியவர்

    சென்னை:

    தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி எம்.பி.யாக இருந்து வருகிறார். இவர் 1996-ம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக 5 முறை எம்.பி.யாக உள்ளார்.

    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியை அண்ணன் என்று உரிமையோடு அழைப்பார்.

    தி.மு.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவராக செயல்படும் டி.ஆர்.பாலு எம்.பி.க்கு டெல்லி அரசியல் அத்துபடி என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு அகில இந்திய தலைவர்கள்-மத்திய மந்திரிகளுக்கு பரிச்சயம் ஆனவர்.

    83 வயதாகும் டி.ஆர்.பாலு எம்.பி. இப்போதும் சுறுசுறுப்புடன் கட்சி பணியாற்றி வருகிறார். டெல்லி அரசியல் நகர்வு முழுவதையும் அவரே பார்த்துக் கொள்கிறார்.

    இந்த நிலையில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட அவர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.

    ஸ்ரீபெரும்புதூர் தொகுதி நிகழ்ச்சிகளிலும் அடிக்கடி கலந்து கொண்டு தொகுதியை தக்க வைத்து வருகிறார்.

    இந்த நிலையில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர்களுக்கு இந்த தேர்தலில் அதிக வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அடிக்கடி வலியுறுத்தி வருகிறார்.

    அந்த வகையில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் ஏராளமான புதுமுகங்கள் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கட்சியில் 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வேறு பதவிகள் வழங்கிவிட்டு அந்த இடங்களில் புதுமுகங்களை நிறுத்தலாமா? என்று ஆலோசனை நடந்து வருவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

    இந்த வகையில் 83 வயதாகும் டி.ஆர்.பாலு எம்.பி. ராஜ்யசபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படலாம் என்றும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    அவ்வாறு ஒரு சூழல் அமைந்தால் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு மாற்று ஏற்பாடாக காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன் முன் நிறுத்தப்படுவார் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

    கட்சியில் ஒன்றிய செயலாளராக பணியாற்றி வரும் படப்பை மனோகரன் தி.மு.க.வில் ஆரம்ப காலம் முதல் கடுமையாக உழைப்பவர் என்று பெயர் எடுத்தவர். அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவர்.

    கட்சி நடத்தும் அனைத்து பொதுக்கூட்டங்களையும் நிகழ்ச்சிகளையும் இரவு-பகல் பாராமல் முன்னின்று நடத்துபவர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மாவட்ட அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோரின் அன்பை பெற்றவர்.

    பொதுமக்கள் மத்தியிலும் நன்மதிப்பும், செல்வாக்கும் பெற்றவர். ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் டி.ஆர்.பாலு எம்.பி. மீண்டும் போட்டியிட்டால் அவருக்காக கடுமையாக உழைக்கக்கூடியவர். படப்பை மனோகரனை முன் நிறுத்த வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

    Next Story
    ×