search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    30 தமிழறிஞர்களுக்கு வி.ஜி.பி. இலக்கிய விருது- சபாநாயகர் அப்பாவு வழங்கினார்
    X

    30 தமிழறிஞர்களுக்கு வி.ஜி.பி. இலக்கிய விருது- சபாநாயகர் அப்பாவு வழங்கினார்

    • சி.பா.ஆதித்தனார், அவரது புதல்வர்கள் எல்லோருமே எடுத்துக்காட்டாக விளங்குகிறார்கள்.
    • வி.ஜி. சந்தோசம் உலகத் தமிழ்ச் சங்கம் அமைத்து உலகம் முழுவதும் 155 இடங்களில் திருவள்ளுவர் சிலையை நிறுவியுள்ளார்.

    சென்னை:

    வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் 30-வது ஆண்டு விழா சென்னையில் நடந் தது. விழாவுக்கு வி.ஜி.பி. உலக தமிழ்ச் சங்கத் தலைவர் வி.ஜி.சந்தோசம் தலைமை தாங்கி தலைமை உரை நிகழ்த்தினார். வி.ஜி.பி. ரவிதாஸ் வரவேற்றார்.

    வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் 30-வது ஆண்டு விழா மலர் மற்றும் வி.ஜி.பி. ராஜாதாஸ் எழுதிய 'என் தந்தையாரின் அறிவுச் சிந்தனைகள்' என்ற நூலை சபா நாயகர் அப்பாவு வெளியிட்டார். மார்கிரெட் பாஸ்டின் எழுதிய சிலம்பு என்னும் இசை நாட்டியக் களஞ்சியம் நூலை, அமைச்சர் செஞ்சி மஸ்தான் வெளியிட்டார். முத்துக்குமாரசாமி எழுதிய வ.உ.சிதம்பரனார் நூலை வி.ஐ.டி. வேந்தர் விசுவநாதன் வெளியிட்டார்.

    விழாவில் சிறந்த 3 தமிழ்ச் சங்கத்துக்கு விருது, அன்புபாலம் கல்யாண சுந்தரம், பாடகர் வேல் முருகன், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், ஆண்டாள் பிரியதர்ஷினி, உள்பட 30 தமிழறிஞர்களுக்கு விஜிபி இலக்கிய விருதை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.

    வி.ஜி.சந்தோசம் சென்னையை சேர்ந்தவர் என்று பலர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர் சென்னையை சேர்ந்தவர் அல்ல. நான், வி.ஜி.பன்னீர்தாஸ், வி.ஜி.சந்தோசம் எல்லோருமே நெல்லையில் பிறந்து வளர்ந்து தாமிரபரணி தண்ணீரை பருகி, அதன்பிறகு சென்னையில் அடையாளத்தை கண்டவர்கள். தினத்தந்தியை எடுத்துக்கொண்டால் சி.பா.ஆதித்தனார், அவரது புதல்வர்கள் எல்லோருமே அதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்கள். பாரதியார், வ.உ.சிதம்பரனார் எல்லோருமே நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தான்.

    வி.ஜி. சந்தோசம் உலகத் தமிழ்ச் சங்கம் அமைத்து உலகம் முழுவதும் 155 இடங்களில் திருவள்ளுவர் சிலையை நிறுவியுள்ளார். அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா, இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் திருவள்ளுவர் சிலையை அமைத்து ஒரு சாமானியனால் எதையும் சாதிக்க முடியும் என்று நிரூபித்து காட்டியுள்ளார்.

    முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை செய்து வருகிறார். அதற்காக ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படுகிறது. ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் 295 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். அதன் மூலம் சாமானிய வீட்டு பிள்ளையும் சர்வதேச தரத்துக்கு இணையான தரமான கல்வி கற்க முடியும். அதேபோல் தகுதியான அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ரூ.1000 உரிமைத் தொகையை கொடுக்க இருக்கிறார்.

    இந்தியா சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகளில் ரூ.55 லட்சம் கோடியை வெளிநாடுகளில் கடனாக வாங்கி இருந்தது. ஆனால் கடந்த 9 ஆண்டுகளில் ரூ.100 லட்சம் கோடியை கடனாக பெற்றுள்ளது. விவசாயிகள் உணவு பொருட்களை விளைவித்து நமக்கு உயிர் கொடுக்கிறார்கள். அவர்கள் உணவு கொடுக்காவிட்டால் நம்மால் வாழ முடியாது. ஆனால் மத்திய அரசு கார்ப்பரேட் கடன்களை தள்ளுபடி செய்கிறது. விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய மறுக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    வி.ஜி.சந்தோசம் பேசுகையில், 'விஜிபி தமிழ்ச்சங்கம் தொடங்கி 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. நான் தமிழனாக பிறந்தேன். எனவே தான் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பாடுபட்டு வருகிறேன். அதற்காக திருவள்ளுவரை கெட்டியாக பிடித்துக் கொண்டேன். அதன் மூலம் தமிழை வளர்த்து வருகிறேன்' என்றார்.

    விழாவில் ஓய்வு பெற்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம், அவ்வை அருள், நாஞ்சில் பீற்றர், மல்லை சத்யா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். விழாவில் வி.ஜி.சந்தோசத்துக்கு கிரீடம் அணிவித்து செங்கோல் வழங்கப்பட்டது. முடிவில் வி.ஜி.பி. ராஜாதாஸ் நன்றி கூறினார். உலகநாயகி பழனி தொகுத்து வழங்கினார்.

    Next Story
    ×