search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் விநாயகர் சதுர்த்திக்கு 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
    X

    விநாயகர் சிலை

    சென்னையில் விநாயகர் சதுர்த்திக்கு 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

    • சென்னையில் இந்து முன்னணி, பாரத் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சிலைகளை வைத்து வழிபாடு செய்ய உள்ளனர்.
    • சென்னையில் மட்டும் ஆயிரக்கணக்கான சிலைகளை வைத்து பூஜை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னையில் இந்து முன்னணி, பாரத் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சிலைகளை வைத்து வழிபாடு செய்ய உள்ளனர்.

    சென்னையில் மட்டும் ஆயிரக்கணக்கான சிலைகளை வைத்து பூஜை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்து முன்னணி சார்பில் மட்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட உள்ளன.

    இதையடுத்து விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியாக கொண்டாடுவது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    உயர் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் இந்து முன்னணி சார்பில் மேகநாதன், தங்கராஜ், பாரத் இந்து முன்னணி சார்பில் பிரபு, டில்லிபாபு, அருண், விஸ்வ இந்து பரிசத் சார்பில் ரவிராஜ், இந்து மக்கள் கட்சி சார்பில் குமரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் போலீஸ் சார்பில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை விழா கமிட்டியினர் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

    விநாயகர் சதுர்த்தியையொட்டி, 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

    இதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை அந்தந்த பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மேற்கொண்டு வருகின்றனர். தங்களது பகுதியைச் சேர்ந்த இந்து இயக்க பிரமுகர்களை அழைத்து ஆலோசனை கூட்டங்களை நடத்தியுள்ளனர்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 10 இடங்களில் விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    31-ந்தேதி பூஜைக்காக வைக்கப்படும் விநாயகர் சிலைகளை 4-ந்தேதி ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊர்வலத்தின்போது கடைபிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகளையும் போலீசார் வகுத்துள்ளனர்.

    இதனை முழுமையாக அமல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

    விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகள் தொடர்பாக சென்னை மாநகர போலீசார் விரிவான அறிக்கையை விரைவில் வெளியிட உள்ளனர்.

    Next Story
    ×