search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தீ விபத்தில் ஒர்க்ஷாப்பில் நிறுத்தியிருந்த 14 வாகனங்கள் எரிந்து நாசம்
    X

    தீ விபத்தில் ஒர்க்ஷாப்பில் நிறுத்தியிருந்த 14 வாகனங்கள் எரிந்து நாசம்

    • தீயணைப்பு வீரர்கள் 10-க்கும் மேற்பட்டோர் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
    • விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    விருதுநகர்:

    விருதுநகர் கச்சேரி ரோட்டில் செய்யது அகமது என்பவருக்கு சொந்தமான இருசக்கர வாகன மெக்கானிக் ஒர்க்ஷாப் அமைந்துள்ளது. இந்த ஒர்க்ஷாப் முன்பு பழுது நீக்குவதற்காக வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட 14 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

    மேலும் அங்கு 5 ஜெனரேட்டர்கள், 5 பேவர் பிளாக்கல் பதிக்கும் மெஷின்கள், 4 வாட்டர் பம்புகள், 3 கரும்புச் சாறு எடுக்கும் எந்திரங்கள், ஒரு களை வெட்டும் கருவி உள்ளிட்டவைகளும் வைக்கப்பட்டு இருந்தன.

    இந்தநிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் திடீரென அங்கு நின்று கொண்டிருந்த ஒரு வாகனத்தில் தீப்பிடித்தது. அந்த பகுதியில் காற்று பலமாக வீசியதால் அடுத்தடுத்த வாகனங்களிலும் தீயானது பரவி பற்றி எரியத்தொடங்கியது.

    உடனே சாலையில் சென்றவர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் விருதுநகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் 10-க்கும் மேற்பட்டோர் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் அனைத்து இரு சக்கர வாகனங்கள், பழுது நீக்க வைக்கப்பட்டிருந்த எந்திரங்கள் முழுவதும் தீயில் எரிந்தது.

    இதுகுறித்து விருதுநகர் மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மின்கசிவின் காரணமாக தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×