search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தீபாவளி பண்டிகை- 3 நாட்கள் மதுக்கடைகளை மூட ராமதாஸ் வலியுறுத்தல்
    X

    தீபாவளி பண்டிகை- 3 நாட்கள் மதுக்கடைகளை மூட ராமதாஸ் வலியுறுத்தல்

    • மக்கள்தொகையை அதிகரிக்க வேண்டும் என்ற யோசனை ஆபத்தானது.
    • முதல்வர் தலையிட்டு ஊதிய உயர்வு நிலுவைத்தொகையை வழங்க வேண்டும்.

    திண்டிவனம்:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில், இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் மூடப்பட்ட மதுக்கடைகள் 500 ஆக இருந்தாலும் கடந்த 3 ½ ஆண்டுகளில் 600 மன மகிழ் மன்றங்கள் தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டுள்ளது. எப்.எல்.2 என்ற பெயரில் அரசின் உரிமம் பெற்றால் யார் வேண்டுமென்றாலும் மது விற்பனை செய்யலாம். இதற்கு தி.மு.க. அரசு பல சலுகைகள் வழங்குகிறது. மனமகிழ் மன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே மது விநியோகிக்க வேண்டும் என்ற விதி தற்போது காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. பெட்டிக்கடைகள் வைக்கக்கூட வசதி இல்லாத இடத்திலும் மனமகிழ் மன்றங்கள் திறக்கப்பட்டுள்ளது.

    முந்தையை ஆட்சியோடு சேர்த்து தற்போது 1500 மனமகிழ் மன்றங்கள் திறந்து வைத்துக்கொண்டு படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்பது ஏமாற்றுவேலை. கடந்த தீபாவளிக்கு 467 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் கூடுதலாக தற்போது கடந்த ஆண்டைவிட 20 விழுக்காடு வைக்க வேண்டும் என வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது.

    தீபாவளிக்கு முன்னும் பின்னும் 3 நாட்களுக்கு மதுக்கடைகளை மூடவேண்டும். 1500 மனமகிழ் மன்றங்களின் உரிமைகளை ரத்து செய்ய வேண்டும். மக்கள்தொகையை அதிகரிக்க வேண்டும் என்ற யோசனை ஆபத்தானது. ஆந்திராவில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 39 மக்களவை தொகுதி 31 ஆக குறைக்கப்பட உள்ளதை எதிர்த்து மத்திய அரசிடம் போராட வேண்டும். இப்போதே தரமான கல்வி, மருத்துவம் வழங்க இயலவில்லை. தமிழகத்தில் மக்கள்தொகை கட்டுப்பாட்டுப்பணிகள் இப்போது உள்ளபடியே இருக்க வேண்டும்.

    தனியார் நிறுவனங்களில் 80 சதவீத வேலைவாய்ப்பை தமிழர்களுக்கு வழங்க வேண்டும் என்ற சட்டத்தை நிறைவேற்றவேண்டும். ஓசூரில் டாடா நிறுவனத்தில் பணியாற்றிய 800 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. தி.மு.க. அளித்த 75 சதவீத வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் இச்சட்டத்தை நிறைவேற்றவேண்டும்.

    தீபாவளி உள்ளிட்ட விடுமுறை நாட்களில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுப்பது புதிய ஊழலுக்கு வழிவகுக்கும். ஒரு தனியார் பேருந்து நாளொன்றுக்கு 600 கி.மீ. இயக்கப்பட்டால் 1000 பேருந்து இயக்கப்பட்டால் ரூ 1. 14 கோடி இழப்பு ஏற்படும். மின்வாரியம் தனியாரிடம் மின்சாரம் வாங்குவதில் கமிஷன் கிடைப்பது போல தனியார் பேருந்து இயக்கப்படுவதால் மின் கட்டணம் போல பேருந்து கட்டணமும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது.

    அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டபோதிலும் 17 முதல் 30 மாதங்களுக்கு நிலுவை தொகை வழங்கப்படவில்லை. முதல்வர் தலையிட்டு ஊதிய உயர்வு நிலுவைத்தொகையை வழங்கவேண்டும். கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் தற்காலிக, பகுதி நேர, ஒப்பந்த பணியாளர்களுக்கு ஒரு வாரம் முன்பாக இன்றோ, நாளையோ முன்கூட்டியே ஊதியம் வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கு போனஸ் வழங்கப்படுவதில்லை. வெள்ளையர்களை எதிர்த்து போரிட்ட மருதுபாண்டியர்களின் 223-ம் ஆண்டு நினைவு நாளை போற்றுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்

    பேட்டியின்போது பா.ம.க. பொருளாளர் திலகபாமா, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×