search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    2026 தேர்தலிலும் தனித்து போட்டியிட்டு ஆட்சி அமைப்போம்- சீமான்
    X

    2026 தேர்தலிலும் தனித்து போட்டியிட்டு ஆட்சி அமைப்போம்- சீமான்

    • எங்கள் கட்சியில் உள்ளவர்கள் எக்காரணம் கொண்டும் வெளியேற மாட்டார்கள்.
    • விஜயுடன் இருக்கும் ரசிகர்கள் பாதிக்கு மேல் எனக்குதான் வாக்களிப்பார்கள்.

    தேனி:

    தேனி அருகே மதுராபுரியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கடந்த 4 முக்கிய தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி தனித்தே சந்தித்துள்ளது. இந்த தேர்தல்களில் தோல்வியை சந்தித்தாலும் வாக்கு சதவீதம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    எனவே வருகிற 2026 சட்டமன்ற தேர்தலிலும் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் தனித்தே போட்டியிட்டு ஆட்சியை பிடிப்போம். அடுத்து வரும் தேர்தல்களிலும் எங்கள் நிலைப்பாடு மாறாது. தி.மு.க. இதுவரை கூட்டணி இல்லாமல் தேர்தலில் போட்டியிட்டதே கிடையாது.

    கல்வியை மாநில உரிமையில் இருந்து எடுத்தது காங்கிரஸ் கட்சி, ஜி.எஸ்.டி. வரி, நீட், என்.ஐ.ஏ. ஆகியவற்றைக் கொண்டு வந்தது காங்கிரஸ். அதனை ஊட்டமாக வளர்த்தது மோடி. எனவே எங்கள் பார்வையில் காங்கிரஸ் தமிழ் இனத்தின் எதிரி. பாரதிய ஜனதா கட்சி மானுட குலத்தின் எதிரி.

    ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க முயன்ற போதும் விஜயகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கட்சி ஆரம்பித்தபோதும் ரசிகர்கள் கூட்டம் கூடினார்கள். அதே போல்தான் தற்போது விஜய் கட்சி ஆரம்பித்தபோதும் கூட்டம் கூடியுள்ளது.

    நடிகர்கள் ரசிகர்களை தொண்டர்களாக மாற்றினார். நான் ரசிகர்களை தொண்டர்களாக மாற்றவில்லை. விஜய்யை ரசிக்கும் வாக்காளர்கள் என்னுடைய வாக்காளர்கள் இல்லை. விஜயின் கட்சிக்கு தலைவர் அவர்தான். ஆனால் என்னுடைய கட்சிக்கு தலைவர் பிரபாகரன்.

    எனவே எங்கள் கட்சியில் உள்ளவர்கள் எக்காரணம் கொண்டும் வெளியேற மாட்டார்கள். விஜயுடன் இருக்கும் ரசிகர்கள் பாதிக்கு மேல் எனக்குதான் வாக்களிப்பார்கள்.

    கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பதாக விஜய் குண்டு போட்டுள்ளார். இதனை நான் வரவேற்கிறேன. அந்த அறிவிப்பை ஏற்று அவரோடு கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களது கொள்கை எந்த காலத்திலும் மாறாது.

    ஜனாதிபதியை மக்கள் வாக்களித்து தேர்வு செய்யும் நிலையை உருவாக்க வேண்டும். வறட்சி வரும் போது புரட்சி வெடிக்கும். இனி வாழவே முடியாது என்ற நிலை வரும் போது மக்கள் புரட்சி செய்வார்கள். இலங்கையிலும், பங்களாதேசத்திலும் அதுதான் நடந்தது. அது போன்ற ஒரு நிலை இந்தியாவிலும் ஒரு நாள் நடக்கும்.

    சாதிய ஏற்றத்தாழ்வை ஒழிக்க கடைசி கருவி சாதிவாரி கணக்கெடுப்புதான். வகுப்பு வாத பிரதிநிதிதுவம் கொடுத்து விட்டால் எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து விடும். ஆனால் சாதி வாரி கணக்கெடுப்பை தி.மு.க. எடுக்கவே எடுக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×