search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தொடர் மழையால் 63 அடியை நெருங்கும் வைகை அணை நீர்மட்டம்
    X

    தொடர் மழையால் 63 அடியை நெருங்கும் வைகை அணை நீர்மட்டம்

    • 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் மீண்டும் முழு கொள்ளளவை எட்டும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
    • முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம் 124.30 அடியாக உள்ளது. அணைக்கு 3402 கன அடி நீர் வருகிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். வைகை அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் கடந்த 2 நாட்களில் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி 62.30 அடியாக உள்ளது. நீர்வரத்து 2745 கன அடி நீர் வருகிற நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. எனவே இன்று மாலைக்குள் 63 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் மீண்டும் முழு கொள்ளளவை எட்டும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதனால் விவசாய பணிகளில் மும்முரமாக இறங்கியுள்ளனர்.

    முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம் 124.30 அடியாக உள்ளது. அணைக்கு 3402 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 3479 மி. கன அடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியில் நீடித்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் 100 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 534.70 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    ஆண்டிபட்டி 20, அரண்மனைப்புதூர் 0.4, பெரியகுளம் 52, மஞ்சளாறு 10, சோத்துப்பாறை 123.2, வைகை அணை 2.2, போடி 33.4, உத்தமபாளையம் 5.6, பெரியாறு அணை 72.8, தேக்கடி 60.4, சண்முகாநதி 10.6 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    Next Story
    ×