search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விடுதலை சிறுத்தை கட்சியில் மாவட்ட செயலாளர்களை மாற்றம் செய்ய முடிவு
    X

    விடுதலை சிறுத்தை கட்சியில் மாவட்ட செயலாளர்களை மாற்றம் செய்ய முடிவு

    • புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் கட்சியை மறு சீரமைப்பு செய்ய திட்டமிட்டுள்ளார்.
    • பொறுப்புக்கான பரிந்துரை குழு அறிவிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் அனுப்பப்படுவார்கள்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி 144 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு தற்போது செயல்பட்டு வருகின்றன. 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

    கட்சியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகளை அதிகளவில் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் புதிதாக மாவட்ட செயலாளர்களை நியமிக்க கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் முடிவு செய்துள்ளார்.

    புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் கட்சியை மறு சீரமைப்பு செய்ய திட்டமிட்டுள்ளார்.

    அதன்படி 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தொகுதி வாரியாக மாவட்ட செயலாளர்களை திருமாவளவன் நியமிக்க முடிவு செய்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கட்சி தொண்டர்களுக்கு முகநூல் நேரலை வழியாக பேசி அறிவிப்பை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் 234 மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகத்தை அறிவிக்க இருக்கிறோம்.

    தற்போது இயங்கும் 144 மாவட்டச் செயலாளர்கள் அதிக புகார் உள்ளவர்கள், பணி செய்யாமல் செயலற்று இருப்பவர்கள் மற்றும் எல்லை பிரச்சனைகளை கருத்தில் கொண்டு ஒரு சிலரை அப்பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டி இருக்கும்.

    புதிதாக நியமிக்கப்பட இருக்கும் 234 மாவட்டச் செயலாளரும் அந்தத் தொகுதியின் பெயரில் மாவட்டச் செயலாளர்கள் என்று அழைக்கப்படுவார்கள்.

    பொறுப்புக்கான பரிந்துரை குழு அறிவிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் அனுப்பப்படுவார்கள்.

    புதிதாக விண்ணப்பம் அளிக்க விரும்புபவர்கள் இந்த பரிந்துரை குழுவிடம் நமது தமிழ்மண் சந்தா 2000 ரூபாய் மற்றும் பொறுப்புக்கு 1000 ரூபாய் டி.டி எடுத்து விண்ணப்பம் அளிக்க வேண்டும்.

    ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட ஒன்றிய நிர்வாகத்திற்கும் மற்றும் அணிகளின் மாநில-மாவட்ட பொறுப்புகளுக்கும் இந்த பரிந்துரை குழுவிடம் விண்ணப்பம் அளிக்கலாம்.

    புதிதாக நியமிக்கப் படும் மாவட்ட நிர்வாகம்:

    மாவட்டச் செயலாளர்-1, மாவட்ட பொருளாளர்-1, மாவட்டத் துணைச் செயலாளர்கள்-5, மாவட்ட செய்தி தொடர்பாளர்-1, செயற்குழு உறுப்பினர்-1, மகளிர் அணி செயலாளர்-1, இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறையின் மாவட்ட அமைப்பாளர்-1, மேற்கண்ட மாவட்ட நிர்வாகத்தில் குறைந்தது 9 பேரும் அதிகபட்சம் 11 பேரும் இடம் பெறுவார்கள்.

    கட்சியில் பிரிக்கப்பட்ட ஒரு ஒன்றிய நிர்வாகத்திற்கு ஒரு மாவட்டத் துணைச் செயலாளர் என்ற அடிப் படையில் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.

    ஒரு சட்டமன்றத் தொகுதிக்குள் ஐந்து முதல் அதற்கு மேற்பட்ட ஒன்றிய நிர்வாகம் நம் கட்சியில் பிரிக்கப்பட்டால், அந்த பிரிக்கப்பட்ட ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் ஒரு மாவட்டத் துணைச் செய லாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

    மாவட்ட நிர்வாகத்தில் உள்ள பொறுப்புகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஒன்றிய நிர்வாகத்திலும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

    வருகிற 15-ந் தேதிக்குள் அனைத்து நிலை பொறுப்புகளுக்கும் பரிந்துரை குழுவிடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

    தமிழ்நாடு முழுவதும் வருவாய் மாவட்ட அடிப் பப்படையில் நியமிக்கப்படும் பரிந்துரை குழுக்கள் இன்றி, மேலும் ஐந்து மண்டல உயர்நிலைக் குழுவும் அமைக்கப்பட இருக்கிறது.

    வடமண்டலம், மேற்கு மண்டலம், மைய மண்டலம், டெல்டா மண்டலம், தென் மண்டலம் என்று 5 மண்டல உயர்நிலைக் குழு அமைக்கப்பட இருக்கிறது.

    தற்போது உள்ள 144 மாவட்டச் செயலாளர்களில் ஒரு சிலர் ஒரே சட்டமன்றத் தொகுதிக்குள் வருகிறார்கள். இவற்றைக் குறித்து அந்த பகுதிக்குள் வரும் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் உயர்நிலைக் குழுவுடன் பேசி ஒரு முடிவு எடுத்து அவை சரி செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.

    எந்த முடிவு ஆனாலும் என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகள் ஏற்றுக்கொண்டு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த தகவலை தலைமை செய்தி தொடர்பாளர் கு.க.பாவலன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×