search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    வெனிசுலா நாட்டில் தங்க சுரங்கம் இடிந்து 15 பேர் பலி
    X

    வெனிசுலா நாட்டில் தங்க சுரங்கம் இடிந்து 15 பேர் பலி

    • சட்ட விரோதமாக இயங்கி வந்த திறந்தவெளி தங்கச் சுரங்கத்தில் தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர்.
    • விபத்து நடந்த தங்கச் சுரங்கத்துக்கு ஆற்றில் படகில் ஒரு மணி நேரம் பயணம் செய்த பிறகே செல்ல முடியும்.

    கராகஸ்:

    வெனிசுலா நாட்டில் சட்ட விரோதமாக தங்க சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஏராளமானோர் பணியாற்றி வருகிறார்கள்.

    இந்த நிலையில் அங்கோஸ்டுரா நகராட்சியில் புல்லா லோகா என்ற இடத்தில் சட்ட விரோதமாக இயங்கி வந்த திறந்தவெளி தங்கச் சுரங்கத்தில் தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். அப்போது தங்கச் சுரங்கத்தில் ஒரு பாதி இடிந்து விழுந்தது. அதில் பல தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். விபத்து நடந்த தங்கச் சுரங்கத்துக்கு ஆற்றில் படகில் ஒரு மணி நேரம் பயணம் செய்த பிறகே செல்ல முடியும். இதனால் மீட்புக் குழுவினர் உடனடியாக செல்ல முடியவில்லை. பின்னர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

    தங்கச் சுரங்கத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 15 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்து இருந்தனர்.அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இன்னும் சிலர் தங்கச் சுரங்கங்களில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து அரசு அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை.

    வெனிசுலாவில் கடந்த 2016-ம் ஆண்டு,புதிய வருவாய் திட்டமாக, நாட்டின் நடுப்பகுதி முழுவதும் ஒரு பெரிய சுரங்க மேம்பாட்டு மண்டலத்தை அந்நாட்டு அரசாங்கம் நிறுவியது. இதையடுத்து தங்கம், வைரங்கள், தாமிரம் மற்றும் பிற கனிமங்களுக்கான சுரங்க நடவடிக்கைகள் தொடங்கின.மேலும் அந்த மண்டலத்திற்கு வெளியே சட்டவிரோத சுரங்கங்கள் பெருகின என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×