search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    உக்ரைன் மீதான போருக்கு எதிராக சிறுமி வரைந்த ஓவியத்தால் தந்தைக்கு 2 ஆண்டு ஜெயில்
    X

    உக்ரைன் மீதான போருக்கு எதிராக சிறுமி வரைந்த ஓவியத்தால் தந்தைக்கு 2 ஆண்டு ஜெயில்

    • உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலை விமர்சித்து சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்த அலெக்சிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
    • வீட்டு காவலில் இருந்த அலெக்சி அங்கிருந்து தப்பி சென்று விட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது. இப்போருக்கு எதிராக ரஷியாவிலும் போராட்டங்கள் நடந்தன.

    இதையடுத்து போருக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    கடந்த ஆண்டு அலெக்சி மொஸ்கலியோவ் என்பவரின் மகள் மரியா, தனது பள்ளியில் ஒரு ஓவியத்தை வரைந்தாள். அதில் உக்ரேனிய கொடியுடன் நிற்கும் ஒரு பெண்ணையும், குழந்தையையும் நோக்கி ரஷிய கொடி அருகே ஏவுகணைகள் செல்லும் ஓவியத்தை வரைந்தாள்.

    இது தொடர்பாக அப்பள்ளி தலைமை ஆசிரியர், போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து சிறுமியின் தந்தை குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் சமூக வலைதளங்களில் ரஷியாவின் போர் தாக்குதலை விமர்சிக்கும் கருத்துகளை தெரிவித்து இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது ரஷிய ராணுவத்தை இழிவுபடுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

    மேலும் அவரிடம் இருந்து 13 வயது மகள் பிரிக்கப்பட்டு சிறுவர்கள் காப்பகத்தில் வைக்கப்பட்டாள். அலெக்சி மொஸ்கலியோவை வீட்டு காவலில் வைத்தனர்.

    அவர் மீதான வழக்கு, மாஸ்கோவின் தெற்கே யெப்ரேமோவ் நகரில் உள்ள கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் இவ்வழக்கில் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அதில், உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலை விமர்சித்து சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்த அலெக்சிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    இதற்கிடையே வீட்டு காவலில் இருந்த அலெக்சி அங்கிருந்து தப்பி சென்று விட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×