search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    திருமணம் செய்வதாகக்கூறி புதுவை டாக்டரிடம் அமெரிக்க இளம்பெண் ரூ.35 லட்சம் மோசடி
    X

    திருமணம் செய்வதாகக்கூறி புதுவை டாக்டரிடம் அமெரிக்க இளம்பெண் ரூ.35 லட்சம் மோசடி

    • மருத்துவ பேராசிரியர் அமெரிக்க பெண்ணுக்கு 8 முறை மொத்தம் ரூ.35 லட்சம் அனுப்பியுள்ளார்.
    • மோசடியில் இந்தியாவில் உள்ள சில நபர்களும் வெளிநாட்டுக்காரர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக சைபர் கிரைம் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை உருளையன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் டாக்டர். தனியார் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    இவருக்கு, அவரது பெற்றோர் திருமணத்திற்காக பெண் பார்த்து வந்துள்ளனர். புதுவையில் உள்ள ஒரு தனியார் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்துள்ளனர். இந்த தகவலை அங்கிருந்து எடுத்து சமூக வலைதள மோசடிக்காரர்கள், மருத்துவ பேராசிரியரை ஒரு பெண் மூலம் தொடர்பு கொண்டனர்.

    தொடர்பு கொண்ட பெண் தான் சிரியாவில் இருப்பதாகவும் இந்தியர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறி அவருடைய அனைத்து விவரங்களையும் அனுப்பியுள்ளார். அந்த பெண் தான் அமெரிக்காவில் வசித்து வருவதாகவும் சிரியாவில் நடந்த நிலநடுக்கத்திற்காக தன்னார்வலராக வேலை செய்ய வந்துள்ளதாக தெரிவித்தார்.

    இங்கு வந்த பிறகு அமெரிக்கர் என்பதால் தன்னுடைய அனைத்து வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு விட்டதாக கூறியுள்ளார்.

    அவருடைய கணக்குகள் முடக்கப்பட்ட விவரங்கள் தங்கியிருக்கும் இடத்திற்கான லொகேஷன், அவர் பணிபுரிகின்ற மருத்துவமனை போன்றவற்றை அனுப்பியுள்ளார். நீங்கள் உதவி செய்தால் மட்டுமே நான் இங்கிருந்து வெளியேற முடியும்.

    வரி, சுங்கக்கட்டணம், டாக்குமெண்டேஷன் இன்னும் சில தேவைகள் இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். இதனை நம்பிய மருத்துவ பேராசிரியர் அவருக்கு 8 முறை மொத்தம் ரூ.35 லட்சம் அனுப்பியுள்ளார்.

    ரூ.35 லட்சம் பணத்தை பெற்ற பிறகு, அந்த பெண்ணிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. அதன்பிறகே, தான் ஏமாற்றப்பட்டதை டாக்டர் உணர்ந்தார். இதுகுறித்து அவர், இணைய வழி குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் (சைபர் கிரைம்) புகார் அளித்தார்.

    அதன்பேரில், இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த மோசடியில் இந்தியாவில் உள்ள சில நபர்களும் வெளிநாட்டுக்காரர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக சைபர் கிரைம் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×