search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மோடி ஆட்சி குறை பிரசவம்தான்- நாராயணசாமி கணிப்பு
    X

    மோடி ஆட்சி குறை பிரசவம்தான்- நாராயணசாமி கணிப்பு

    • மாநில கட்சிகளை சமரசம் செய்து மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார்.
    • இந்தியா கூட்டணி ஒருங்கிணைந்து சட்டமன்ற தேர்தலை சந்தித்து ஆட்சி அமைக்கும்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    எதிர்கட்சிகளை மதிக்காத தன்மை, ஆணவப் போக்கு, தொழிலதிபர்களை மிரட்டுவது, சி.பி.ஐ, அமலாக்கத்துறை ஆகியவற்றை பயன்படுத்துவது, குடியுரிமை சட்டம், நீட் உட்பட மக்கள் விரும்பாத சட்டங்களை நிறைவேற்றியது ஆகியவற்றுக்கு பாஜகவுக்கும், பிரதமர் மோடிக்கும் இந்திய மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

    400 தொகுதிகளை பெறுவோம் என மார்தட்டிய பாஜனதா 240 தொகுதிகளில் மட்டும்தான் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு தார்மீக பொறுப்பேற்று பிரதமர் ராஜினாமா செய்திருக்க வேண்டும். மாநில கட்சிகளை சமரசம் செய்து மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார்.

    பாஜகவுக்கும், மோடிக்கும் இது அவமானம். சிறந்த அரசியல்வாதி என்றால் பிரதமராக மோடி பதவி ஏற்கக்கூடாது. நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோர் நீண்ட அனுபவம் உள்ள அரசியல் தலைவர்கள். அவர்கள் மோடியின் சர்வாதிகாரத்தை ஏற்க மாட்டார்கள்.

    கூட்டணி கட்சிகளால் பாஜக ஆட்சி கவிழும். 5 ஆண்டு இந்த ஆட்சி நீடிக்காது. குறை பிரசவம்தான்.

    புதுவை மக்கள் காங்கிரசுக்கு பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றியை தந்துள்ளனர். பண பலம், அதிகார மீறல் ஆகியவற்றை தாண்டி தீர்ப்பை புதுவை மக்கள் வழங்கியுள்ளனர். முதலமைச்சர், அமைச்சர்கள், 22 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் 28 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் கூடுதல் வாக்குகள் பெற்றுள்ளார்.

    முதலமைச்சர், அமைச்சர்கள் தங்கள் தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர். அமைச்சர்கள் நமச்சிவாயமும், லட்சுமிநாராயணனும் தாங்கள் வசிக்கும் இடத்திலேயே வாக்குகள் குறைவாக பெற்றுள்ளனர்.

    என்.ஆர்.காங்கிரஸ், பாஜக ஆட்சியில் ஊழல் மலிந்துள்ளது. மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. மக்கள் எதிர்ப்பை மீறி ரெஸ்டோ பார்கள் திறக்கப்பட்டுள்ளது என தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வந்தோம். கார்களில் அமைச்சர்கள் வீதியுலா வந்தாலும், பொது மக்களை சந்திப்பது இல்லை.

    கிராமங்களுக்கும், பிற பிராந்தியங்களுக்கும் செல்வதில்லை. 2011-ல் கட்சி ஆரம்பிக்கும்போது கூறிய மாநில அந்தஸ்தை 300-க்கும் மேற்பட்ட முறை கூறினாலும், அதை பெறவில்லை. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் மக்கள் காங்கிரசுக்கு வாக்களித்துள்ளனர்.

    இதற்கு பிறகும் ஆட்சியில் ரங்கசாமி நீடிக்க தார்மீக உரிமை இல்லை. ஆனால் அவர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டார்.

    இந்தியா கூட்டணி ஒருங்கிணைந்து சட்டமன்ற தேர்தலை சந்தித்து ஆட்சி அமைக்கும்.

    மத்தியில் சில மாநிலங்களில் நாங்கள் கணித்த வெற்றி கிடைக்கவில்லை. உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா, தமிழகத்தில் வெற்றி கிடைத்துள்ளது. இனி இந்தியா கூட்டணி கட்சிகளின் காலம்தான்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×