search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ரங்கசாமி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு?
    X

    ரங்கசாமி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு?

    • பாஜக மாநில தலைவர் செல்வகணபதி ராஜ்யசபா கூட்டத்தில் பங்கேற்க டெல்லியில் உள்ளார்.
    • டெல்லியில் முகாமிட்டுள்ள பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்குள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

    புதுச்சேரி:

    பாராளுமன்ற தோல்விக்கு பிறகு என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணியில் விரிசல் உருவாகியுள்ளது.

    முதலமைச்சர் ரங்கசாமிக்கு எதிராகவும், பா.ஜனதா அமைச்சர்களுக்கு எதிராகவும், பாஜக எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். அரசு மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுதான் தேர்தல் தோல்விக்கு காரணம் என அவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    அரசின் அனைத்து மட்டத்திலும் ஊழல் புரையோடியிருப்பதாகவும், புரோக்கர்கள் மூலம் ஆட்சி நடப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். இதை கட்சி மேலிடத்துக்கு தெரிவிப்பதற்காக பாஜக எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்டு, ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் அங்காளன், சிவசங்கர், கொல்லப்பள்ளி சீனிவாச அசோக் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

    நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசினார். இதனால் பாஜக தலைவர்களை சந்திக்க முடியவில்லை.

    இந்த நிலையில் இன்று ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேசுகிறார். இதனால் நேற்றைய தினம் மத்திய மந்திரியும், புதுவை பொருப்பாளருமான அர்ஜூன்ராம் மெக்வாலை மட்டும் சந்தித்து பேசினர்.

    இன்று பிற்பகலுக்கு பிறகு புதுவை பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதா தலைவர் நட்டா மற்றும் கட்சித் தலைவர்களை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர்.

    அதற்கு முன்பாக டெல்லியில் முகாமிட்டுள்ள பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்குள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

    அதில் புதுவையில் இதே நிலையில் ஆட்சி நீடித்தால், பாராளுமன்றத்தில் தோல்வியடைந்தது போல 2026 சட்டமன்ற தேர்தலிலும் பாஜக தோல்வியடையும் வாய்ப்பு உள்ளது. எனவே கட்சித்தலைமை உரிய முடிவெடுக்க வேண்டும். தேவைப்பட்டால் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு தெரிவிக்கலாம் என்ற யோசனையை முன்வைக்க ஆலோசித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதனிடைய பாஜக மாநில தலைவர் செல்வகணபதி ராஜ்யசபா கூட்டத்தில் பங்கேற்க டெல்லியில் உள்ளார். அவரும் கட்சித் தலைவரை சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×