search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மதுகுடித்து வாகனம் ஓட்டியவர்களுக்கு ரூ.1½ லட்சம் அபராதம்- போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை
    X

    மதுகுடித்து வாகனம் ஓட்டியவர்களுக்கு ரூ.1½ லட்சம் அபராதம்- போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை

    • கோரிமேடு பகுதியில் மதுகுடித்து வாகனம் ஓட்டி வந்த 3 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
    • குடித்து விட்டு வாகனம் ஒட்டுபவர்களை கண்டறிய சோதனைகளை தீவிரப்படுத்த உள்ளோம்.

    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த சில நாட்களாக விபத்துகள் நடந்து வருகின்றன. போதையில் வாகனங்களை ஓட்டுவதால் உயிர் சேதமும், பொருட்சேதமும் அதிகளவில் ஏற்பட்டு வருகிறது.

    இதைத்தொடர்ந்து போதையில் வாகனங்களை ஓட்டுபவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்கபோலீசார் முடிவு செய்தனர்.

    இதைத்தொடர்ந்து வடக்கு பகுதி போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் உத்தரவின்பேரில் புதுச்சேரி நகரப்பகுதியான புஸ்சி வீதி, அண்ணா சாலை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து போலீசார் கேமராவுடன் கூடிய, மதுகுடித்திருப்பதை கண்டறியும் நவீன கருவி மூலமாக சோதனை நடத்தினார்கள். இதில் மதுகுடித்துவிட்டு வாகனம் ஓட்டி வந்த 6 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    இது போல் கோரிமேடு பகுதியில் மதுகுடித்து வாகனம் ஓட்டி வந்த 3 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    மேலும் கிருமாம்பாக்கம் பகுதியில் மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்த 6 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. புதுச்சேரியில் நேற்று ஒரேநாளில் மதுகுடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 15 பேருக்கு ரூ.1½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இது குறித்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரிஜேந்திர குமார் யாதவ் கூறியதாவது:-

    வார இறுதி விடுமுறை நாட்களில் புதுவைக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள்வருகிறார்கள். இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. அவ்வாறு 10 இடங்களை கண்டறிந்துள்ளோம். அனைவரும் போக்குவரத்து விதிகளை மதிக்கவேண்டும்.

    நாங்கள் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள், புதுவை உள்ளூர் மக்கள் என அனைவரையும் சமமாக தான் பார்க்கிறோம். விதிமுறைகளைமீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கிறோம்.

    குடித்து விட்டு வாகனம் ஒட்டுபவர்களை கண்டறிய சோதனைகளை தீவிரப்படுத்த உள்ளோம். அவர்களுக்கு கடுமையான அபராதமும் விதிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×