search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரி சட்டசபையில் ரூ.4,634 கோடிக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல்- தி.மு.க., காங்கிரஸ் வெளிநடப்பு
    X

    புதுச்சேரி சட்டசபையில் ரூ.4,634 கோடிக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல்- தி.மு.க., காங்கிரஸ் வெளிநடப்பு

    • புதுவை மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு கழகத்தின் ஆண்டறிக்கை நகலை வேளாண் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் சபையில் சமர்பித்தார்.
    • பட்ஜெட்டுக்கு குரல் வாக்கெடுப்பு நடத்தி, அனுமதி வழங்கப்பட்டதாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அறிவித்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

    யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கலுக்கு மத்திய நிதித்துறை, உள்துறையிடம் அனுமதி பெற வேண்டும். பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வர உள்ளதால் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மார்ச் மாதம் தாக்கல் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய புதுச்சேரி சட்டப்பேரவை இன்று காலை 9.45 மணிக்கு கூடியது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கினார்.

    சபையில் முதல் நிகழ்வாக, மறைந்த முன்னாள் அமைச்சர் ப.கண்ணனுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

    இதைத்தொடர்ந்து நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான மறைந்த விஜயகாந்த், விவசாய விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மற்றும் மார்க்சிஸ்டு மூத்த தலைவர் சங்கரய்யா ஆகியோருக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டு, மறைந்த தலைவர்களுக்காக, சபை உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.

    தொடர்ந்து புதுவை மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு கழகத்தின் ஆண்டறிக்கை நகலை வேளாண் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் சபையில் சமர்பித்தார்.

    தொடர்ந்து சட்ட முன்வரைவுகளுக்கு உறுப்பினர்கள் ஒப்புதல் பெறப்பட்டது. சட்டசபை குழு அறிக்கை, கூடுதல் செலவின அறிக்கை, பேரவை முன் வைக்கப்பட்டது.

    தொடர்ந்து அரசின் செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி சபையில் தாக்கல் செய்தார்.

    ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரையிலான 5 மாத அரசு செலவினங்களுக்கு ரூ.4 ஆயிரத்து 634 கோடியே 29 லட்சத்து 85 ஆயிரத்துக்கான இடைக்கால பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்தார்.

    இந்த பட்ஜெட்டுக்கு குரல் வாக்கெடுப்பு நடத்தி, அனுமதி வழங்கப்பட்டதாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அறிவித்தார்.

    இந்த நிலையில் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யாததை கண்டித்து எதிர்கட்சிகளான தி.மு.க., காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    காலை 9.45 மணிக்கு தொடங்கிய சட்டசபை கூட்டம் 10.45 மணிக்கு முடிவடைந்தது. இதையடுத்து சபையை காலவரையின்றி ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அறிவித்தார்.

    Next Story
    ×