search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை எம்.பி. தொகுதியை குறிவைக்கும் பா.ஜனதா: தி.மு.க.-காங்கிரசிலும் பலத்த போட்டி
    X

    புதுவை எம்.பி. தொகுதியை குறிவைக்கும் பா.ஜனதா: தி.மு.க.-காங்கிரசிலும் பலத்த போட்டி

    • வரும் காலத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் புதுவை திமுகவினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
    • பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் 4 பிராந்தியங்களிலும் கட்சியை கொண்டு சேர்க்கும் என கருதுகின்றனர்.

    புதுச்சேரி:

    அடுத்த ஆண்டு 2024 மே மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு அனேகமாக அடுத்த ஆண்டு (ஜனவரி) இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுவை மாநிலத்தில் ஒரே ஒரு பாராளுமன்ற தொகுதி மட்டுமே உள்ளது.

    புதுவையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர். காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கிறது. கூட்டணியில் அ.தி.மு.க. இடம் பெற்றிருந்தாலும், சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் இல்லை. புதுவை எம்.பி. தொகுதியை பெறுவதில் ஆளும் கூட்டணியான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா, அ.தி.மு.க. இடையே போட்டி நிலவுகிறது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் டாக்டர் நாராயணசாமி போட்டியிட்டு தோல்வியடைந்தார். வரும் பாராளுமன்ற தேர்தலிலும் என்ஆர்.காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என என்.ஆர். காங்கிரஸ் தலைவரும், முதல்-அமைச்சருமான ரங்கசாமி விரும்புவதாக தெரிகிறது.

    கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலும் இது எதிரொலித்தது. பட்ஜெட்டில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.ஆயிரம், கியாஸ் மானியம் ரூ.300, அரசு தினக்கூலி ஊழியர்களின் சம்பளம் ரூ.18 ஆயிரமாக உயர்வு என்பது உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

    இந்த அறிவிப்புகளை செயல்வடிவம் கொடுப்பதிலும் ரங்கசாமி முனைப்பாக உள்ளார். இதன்மூலம் பாராளுமன்ற தேர்தலில் மக்களை எளிதில் கவர முடியும் என ரங்கசாமி நினைக்கிறார்.

    அதேநேரத்தில் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜனதா கடந்த ஆண்டே பாராளுமன்ற தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது. மத்திய மந்திரி எல்.முருகன் புதுவை பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தொடர்ந்து புதுவைக்கு வந்து பல்வேறு தரப்பினரை சந்தித்து பேசி, ஆதரவு திரட்டி வருகிறார்.

    எம்.பி. தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் கட்சியை மாநிலத்தின் 4 பிராந்தியங்களிலும் வேரூன்ற செய்ய முடியும் என்று பா.ஜனதாவினர் எண்ணுகின்றனர். இதனால் அவர்களும் கூட்டணியில் தொகுதியை பெறுவதில் முனைப்புடன் உள்ளனர்.

    இதனிடையே கடந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணியில் 5 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை அதிமுக இழந்தது. இதனால் வரும் பாராளுமன்ற தேர்தலில் எம்.பி. தொகுதியை பெற்று போட்டியிடுவதன் மூலம் சரிந்த அ.தி.மு.க. செல்வாக்கை நிலைநிறுத்த முடியும் என புதுவை அ.தி.மு.க.வினர் எண்ணுகின்றனர். இதனால் கட்சி தலைமையை அணுகி கூட்டணியில் அ.தி.மு.க.வுக்கு தொகுதியை பெற வலியுறுத்தி வருகின்றனர்.

    இதேபோல எதிர்கட்சியான தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியிலும் எம்.பி. தொகுதியை பெறுவதில் போட்டி உருவாகியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் 15 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 2 தொகுதியில் மட்டும்தான் வெற்றி பெற்றது. இதனால் எதிர்கட்சி என்ற அந்தஸ்தை இழந்தது.

    புதுவை காங்கிரசின் கோட்டை என நீண்டகாலமாக கருதப்பட்டு வருகிறது. அதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் எம்.பி. தொகுதியில் போட்டியிட விரும்புகிறது. இதற்கான காய்களை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நகர்த்த தொடங்கியுள்ளார்.

    அதே கூட்டணியில் இடம் பெற்றுள்ள தி.மு.க. சட்டமன்ற தேர்தலில் 6 எம்.எல்.ஏ.க்களை பெற்று எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. வரும்காலத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் புதுவை திமுகவினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். அதற்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் 4 பிராந்தியங்களிலும் கட்சியை கொண்டு சேர்க்கும் என கருதுகின்றனர்.

    இதனால் கூட்டணியில் தொகுதியை பெறுவதில் தி.மு.க.வினரும் முனைப்பாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் பாராளுமன்ற தேர்தலுக்கு ஓராண்டே உள்ள நிலையில் புதுவையில் ஆளும், எதிர்கட்சி கூட்டணி கட்சிகளிடையே எம்.பி. தொகுதியை பெறுவதில் போட்டா போட்டி ஏற்பட்டு உள்ளது.

    Next Story
    ×