search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பா.ஜனதா வேட்பாளர் தேர்வில் திடீர் திருப்பம்- ரங்கசாமி பரிந்துரையால் பரபரப்பு
    X

    பா.ஜனதா வேட்பாளர் தேர்வில் திடீர் திருப்பம்- ரங்கசாமி பரிந்துரையால் பரபரப்பு

    • பாஜனதா தேர்தல் பொறுப்பாளராக நிர்மல்குமார் சுரானா நியமிக்கப்பட்டுள்ளார்.
    • முதலமைச்சர் ரங்கசாமியின் முடிவால் புதுச்சேரி அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜனதா தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    அமைச்சரவையில் என்.ஆர்.காங்கிரசில் முதலமைச்சர் ரங்கசாமி அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார் உள்ளனர்.

    பா.ஜனதாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணன்குமார் உள்ளனர்.

    இதற்கிடையே புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணியில் பா.ஜனதா போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.


    பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை ஓராண்டுக்கு முன்பே பா.ஜனதா தொடங்கிவிட்டது. தொகுதிதோறும் மக்கள் சந்திப்பு, நிர்வாகிகள் சந்திப்பை மத்திய மந்திரி எல்.முருகன் நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் பாஜனதா தேர்தல் பொறுப்பாளராக நிர்மல்குமார் சுரானா நியமிக்கப்பட்டுள்ளார். அவரும் கட்சி நிர்வாகிளை தொடர்ந்து சந்தித்து வருகிறார்.

    இருப்பினும் பா.ஜனதா வேட்பாளர் யார்? என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வருகிறது. யூனியன் பிரதேசமான புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் என 4 பிராந்தியமாக உள்ளது. 4 பிராந்தியங்களிலும் அறிமுகமான வேட்பாளரை நிறுத்தினால்தான் வெற்றிக்கு வழி வகுக்கும். அத்தகைய வேட்பாளரை போட்டியிட செய்ய வேண்டும் என பா.ஜனதாவினர் வற்புறுத்தி வருகின்றனர்.

    இதனிடையே மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், கவர்னர் தமிழிசை ஆகியோர் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியானது.

    இதற்கு உள்ளூர் பா.ஜனதா தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பிற மாநிலங்களைப்போல இல்லாமல், புதுச்சேரி ஒரு தொகுதிதான். அதையும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்குவதா? என கேள்வி எழுப்பிவருகின்றனர். மேலும் வெளி மாநிலத்தினரை புதுவை மக்கள் ஆதரிப்பார்களா? என்ற தயக்கமும் பா.ஜனதாவுக்கு உள்ளது.


    இந்த நிலையில் பா.ஜனதா வேட்பாளர் தேர்வில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி தலைவரும், முதலமைச்சருமான ரங்கசாமி, பா.ஜனதா வேட்பாளருக்காக ஒரு பெயரை பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    என்ஆர்.காங்கிரஸ் தலைவர் முதலமைச்சர் ரங்கசாமி தயவு இல்லாமல் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது சிரமமான காரியமாகும்.

    அதோடு அவர் பரிந்துரைக்கும் வேட்பாளர் என்றால் தேர்தல் பணியில் எந்தவித சுணக்கமும் இன்றி ரங்கசாமி தீவிர பிரசாரம் செய்வார்.

    இது பா.ஜனதாவின் வெற்றி மேலும் பிரகாசமாகும். ஏற்கனவே ராஜ்யசபா பதவியை பா.ஜனதாவுக்கு தர முதலமைச்சர் ரங்கசாமி முன்வந்தார். அப்போது 3 பேர் கொண்ட பட்டியலை பா.ஜனதா தலைமை அளித்து அதில் ஒருவரை எம்.பி.யாக தேர்வு செய்ய பரிந்துரைக்கும்படி கேட்டது. அதனடிப்படையில்தான் தற்போதைய பா.ஜனதா மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.


    2011-ல் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வுக்கு ராஜ்யசபா எம்.பி.யை முதலமைச்சர் ரங்கசாமி விட்டுக் கொடுத்தார். அப்போதும் அவருக்கு நெருக்கமான கோகுல கிருஷ்ணனை அ.தி.மு.க. ராஜ்யசபா எம்.பி. யாக்கினார்.

    இதேபோல தற்போதும் பாஜனதா வேட்பாளராக பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவரின் பெயரை முதலமைச்சர் ரங்கசாமி பரிந்துரை செய்துள்ளார். இது பா.ஜனதா தலைமைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா தலைமை முதலமைச்சர் ரங்கசாமியின் பரிந்துரையை ஏற்றால், அவர் பா.ஜனதா வேட்பாளராககளம் இறங்குவார்.

    முதலமைச்சர் ரங்கசாமியின் முடிவால் புதுச்சேரி அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.

    Next Story
    ×