search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ரங்கசாமி
    X

    பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம்: முதல்- அமைச்சர் ரங்கசாமி திடீர் புறக்கணிப்பு

    • மத்திய அரசு பா.ஜ.க. ஆளும் மாநில முதல்- அமைச்சர்கள் மற்றும் கூட்டணி முதல்- அமைச்சர்கள் நிதி ஆயோக் கூட்டத்தில் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என விரும்பியது.
    • முதல்-அமைச்சர் ரங்கசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்ல டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் இன்று நடந்தது.

    கூட்டத்தில் மாநில முதல்-அமைச்சர்கள் தவறாது கலந்து கொள்ளும்படி நிதி ஆயோக் அழைப்பு விடுத்திருந்தது. புதுச்சேரியை பொருத்தவரை கடந்த காலங்களில் முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு பதிலாக டெல்லி கூட்டங்களில் அமைச்சர் லட்சுமி நாராயணன் பங்கேற்று வந்தார்.

    ஆனால் இந்த முறை புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி டெல்லி செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் மத்திய பட்ஜெட்டில் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை மத்திய அரசு புறக்கணித்ததாக கூறி இந்தியா கூட்டணி மாநில முதல்-அமைச்சர்கள் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தனர்.

    இதனால் மத்திய அரசு பா.ஜ.க. ஆளும் மாநில முதல்- அமைச்சர்கள் மற்றும் கூட்டணி முதல்- அமைச்சர்கள் நிதி ஆயோக் கூட்டத்தில் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என விரும்பியது.

    இந்த நிலையில் புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்ல டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது.

    மேலும் நிதி ஆயோக் கூட்டத்தில் பேச உரையும் தயாரிக்கப்பட்டிருந்தது. இதனால் நேற்று மாலை முதல்- அமைச்சர் ரங்கசாமி சென்னை சென்று அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் முதல்- அமைச்சர் ரங்கசாமி டெல்லி செல்லாமல் நிதி ஆயோக் கூட்டத்தை திடீரென புறக்கணித்துள்ளார்.

    இது பா.ஜ.க.வை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. ஏற்கனவே புதுச்சேரியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் பா.ஜ.க. அமைச்சர்களுக்கு எதிராக பா.ஜ.க மற்றும் பா.ஜ.க. வை ஆதரிக்கும் 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் போர்கொடி தூக்கி உள்ளனர்.

    முதல்- அமைச்சர் ரங்கசாமி அரசுக்கு தரும் ஆதரவை விலக்கி வெளியில் இருந்து ஆதரவு அளிக்க வேண்டும் என அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி வருகின்றனர். பா.ஜ.க. ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ. அங்காளன் ரங்கசாமி அரசில் அனைத்து துறைகளிலும் ஊழல் பெருகிவிட்டது என்றும் புரோக்கர்கள் மூலம் அரசு செயல்படுவதாகவும் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

    இது முதல்- அமைச்சர் ரங்கசாமி மற்றும் என்.ஆர்.காங்கிரசாருக்கு பா.ஜ.க. மீது அதிருப்தியை ஏற்படுத்தியது. மெஜாரிட்டிக்கு தேவையான எண்ணிக்கை எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு இருக்கும் போது எதற்காக சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை என்று என்.ஆர்.காங்கிரசார் கேள்வி எழுப்பினர்.

    அதோடு முதல்-அமைச்சர் ரங்கசாமி தரப்பில் இருந்து சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை வாபஸ் பெறுமாறு பா.ஜ.க. தலைமைக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை பா.ஜ.க. விலக்கி கொள்ளவில்லை.

    இதனாலும், பட்ஜெட் கூட்ட தொடர் கூட உள்ள நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க. தலைமை சரியாக கையாண்டு சமரசம் செய்யாததும் முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனாலேயே நிதி ஆயோக் கூட்டத்தை ரங்கசாமி புறக்கணித்துள்ளதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×