search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    இந்திய மாணவர்களை பிரான்சுக்கு ஈர்க்க புதிய விசா கொள்கை
    X

    இந்திய மாணவர்களை பிரான்சுக்கு ஈர்க்க புதிய விசா கொள்கை

    • பிரெஞ்சு நிறுவனங்களின் ஆராய்ச்சி பணிகளை பிரெஞ்சு தூதர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • புதுவையில் வாழும் பிரெஞ்சு பிரதிநிதிகள் ஆகியோரை பிரெஞ்சு தூதர் சந்தித்து பேசுகிறார்.

    புதுச்சேரி:

    இந்தியாவுக்கான பிரெஞ்சு தூதர் தியரிமாத்துஷ் 4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

    புதுவைக்கு வருகை தந்த அவருக்கு பிரெஞ்சு துணை தூதர் துஷ்தர்லிஸ் டால்போட்பரே தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று காலை புதுவை கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு போர்வீரர்கள் நினைவிடத்தில் மலர்வளையைம் வைத்து அவர் அஞ்சலி செலுத்தினார்.

    இதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியாவுடன் கல்வி கூட்டாண்மை, பல்கலைக்கழக ஒத்துழைப்பு, மாணவர் பரிமாற்ற திட்டங்களால் இருநாட்டு இளைஞர்கள் திறன் மேம்படும். இருநாட்டு மக்களிடையே உறவுகளை மேம்படுத்தும்.

    2025-ம் ஆண்டுக்குள் குறைந்தபட்சம் 20 ஆயிரம் இந்திய மாணவர்களை பிரான்சிற்கு கல்வி கற்க வரவழைக்கவும், 2030-ம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கையை 30 ஆயிரமாக உயர்த்தவும் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் இலக்கு நிர்ணயித்துள்ளார்.

    அவர்களின் கல்விக்கு விசா வழங்கும் முறைகளையும் எளிதாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இந்திய மாணவர்களை ஈர்க்கும் எளிதான விசா கொள்கையை உருவாக்கும் பணியில் பிரான்ஸ் நாட்டு அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக நேற்று புதுவையில் உள்ள பிரெஞ்சு நிறுவனங்களின் ஆராய்ச்சி பணிகளை பிரெஞ்சு தூதர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். லிசே பிரான்சே பிரெஞ்சு உயர்நிலைப்பள்ளி, அலையன்ஸ் பிரான்சிஸ் நிறுவனத்துக்கு சென்று, மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

    கல்வி, கலாச்சாரம், அறிவியல் துறைகளில் பிரெஞ்சு கல்வி நிறுவனங்கள் ஆற்றிய பணிகள் குறித்து, ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் பிரெஞ்சு ஆய்வு நிறுவனமான பிரெஞ்சு இன்ஸ்டிடியூட், எக்கோல் பிரான்சே மையத்துக்கு சென்று ஆய்வு பணிகளை கேட்டறிந்தார்.

    அங்குள்ள பழமையான ஆவணங்கள், புதுவை அரசுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் கூட்டு ஆராய்ச்சிகள் குறித்து கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து பிரெஞ்சு துணை தூதரகத்தில் நடந்த நிகழ்ச்சியில், டாக்டர் சதீஷ் நல்லாமுக்கு நேஷனல் ஆர்டர் ஆப் மெரிட் என்ற முத்திரையை வழங்கினார்.

    கலாச்சாரம், பாரம்பரியம், கல்வி தளங்களில் பிரான்ஸ்- இந்தியா இடையில் ஒத்துழைப்பு அளித்ததற்காக இந்த மதிப்புமிக்க விருது அவருக்கு வழங்கப்பட்டது. இன்று புதுவை முதலமைச்சர் ரங்கசாமி, ஆரோவில் செயலாளர் ஜெயந்திரவி, புதுவையில் வாழும் பிரெஞ்சு பிரதிநிதிகள் ஆகியோரை பிரெஞ்சு தூதர் சந்தித்து பேசுகிறார்.

    Next Story
    ×