search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரியில் நிர்மலா சீதாராமன் போட்டி? பரபரப்பு தகவல்கள்
    X

    பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரியில் நிர்மலா சீதாராமன் போட்டி? பரபரப்பு தகவல்கள்

    • சமீபத்தில் கட்சி நிர்வாகிகளை தேர்தல் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
    • புதுவையில் பணியாற்றும் ஒரு வனத்துறை அதிகாரியின் பெயரும் அடிபடுகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

    கடந்த ஓராண்டுக்கு முன்பிருந்தே புதுச்சேரி தொகுதியில் பா.ஜனதா தேர்தல் பணிகளை தொடங்கியது. மத்திய மந்திரி எல்.முருகன் மாதம் 2 முறை புதுவைக்கு வந்து பா.ஜனதா நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து தேர்தல் பணிகளை முடுக்கி விட்டார். தொகுதி தோறும் சென்று பொதுமக்களையும் சந்தித்தார்.

    இந்த நிலையில் சமீபத்தில் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளராக நிர்மல்குமார் சுரானா நியமிக்கப்பட்டார். சட்டமன்ற தேர்தலில் இவர்தான் பொறுப்பாளராக செயல்பட்டு புதுவையில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைய திட்டம் வகுத்தார்.

    தற்போது பா.ஜனதா பொறுப்பாளராக அவர் மீண்டும் நியமிக்கப்பட்டது புதுவை பா.ஜனதாவினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அதேநேரத்தில் புதுவையில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.


    சமீபத்தில் கட்சி நிர்வாகிகளை தேர்தல் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது ஒரு சிலர் வேட்பாளர் யார்? என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், நீங்கள் ஆச்சரியப்படும் வகையில் ஒரு வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என கூறியுள்ளார். ஏற்கனவே கவர்னர் தமிழிசை, புதுவை தொகுதியில் போட்டியிட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் புதுவை தொகுதியில் களம் இறங்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

    இதுபோல் புதுவையில் பணியாற்றும் ஒரு வனத்துறை அதிகாரியின் பெயரும் அடிபடுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் பா.ஜனதாவினர் உள்ளனர்.

    Next Story
    ×