search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அசாம் குடிமக்கள் பதிவேடு"

    அசாம் குடிமக்கள் பதிவேடு தொடர்பான விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. #AssamNRC
    புதுடெல்லி:

    வங்கதேசத்தில் இருந்து வந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் இறுதி வரைவு அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. மொத்தம் உள்ள 3,29,91,384 விண்ணப்பதாரர்களில் 2,89,83,677 பேர் குடிமக்களின் தேசிய பதிவேட்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். 40 லட்சம் பேர் பதிவேட்டில்  சேர்க்கப்படவில்லை. தற்போதைய நிலையில் இவர்கள் சட்டவிரோத குடிமக்களாக கருதப்படுவார்கள். எனினும், விடுபட்டவர்கள் தங்கள் பெயர்களை சேர்க்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    ஆனால், 40 லட்சம் பேர் விடுபட்டது தொடர்பாக சர்ச்சை எழுந்ததால், மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. 7 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது. இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.

    இந்த விவகாரம் இன்று பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிரொலித்தது. மாநிலங்களவை துவங்கியதும் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். காங்கிரஸ் எம்.பிக்களும் அவர்களுக்கு ஆதரவாக அமளியில் ஈடுபட்டனர். இதனால் முதலில் 12 மணி வரையிலும், அதன்பின்னர் 2 மணி வரையிலும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

    2 மணிக்கு மீண்டும் அவை கூடியபோதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அசாம் குடிமக்கள் பதிவேடு தொடர்பான பிரச்சனையை எழுப்பி முழக்கமிட்டனர். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. தொடர்ந்து அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால், அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார். #AssamNRC #NRCReleased

    அசாமில் வெளியிடப்பட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து யாரும் பீதி அடைய வேண்டாம் என உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் விளக்கம் அளித்துள்ளார். #NRCDraft #RajnathSingh #NRCAssam
    புதுடெல்லி:

    அசாம் மாநிலம் வங்கதேசத்தை ஒட்டி அமைந்துள்ளதால் அங்கு வங்கதேசத்தைச் சேர்ந்த அகதிகள் குடியேறி விடுகின்றனர். இதனால் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், யார் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. அசாம் மக்களோடு மக்களாக அவர்கள் கலந்து வசித்து வருவதால் அதிகாரிகளுக்கு அவர்களை இனம் பிரிப்பதில் சிக்கல் உள்ளது.



    இதைத் தடுப்பதற்காக அங்கு தேசிய குடிமக்கள் பதிவேட்டை அசாம் மாநில அரசு தயார் செய்து வருகிறது. அவ்வகையில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தயாரிக்கப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதி வரைவுப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அசாம் மாநிலத்தில் 3.29 கோடி பேர் வசித்து வரும் நிலையில், 2.89 கோடி மக்களின் பெயர் மட்டுமே இன்று வெளியிட்டுள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ளது. மொத்தம் 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டிருக்கிறது. இதனால், அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது. இந்த விவகாரம் இன்று பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது.

    இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், “தேசிய மக்கள் பதிவேடு பாரபட்சமற்றது, பெயர் இடம் பெறவில்லையென்று யாரும் அச்சப்பட வேண்டாம். பெயர் விடுபட்டவர்கள் தாங்கள் இந்திய குடிமக்கள் என்பதை நிரூபிக்க வாய்ப்பு அளிக்கப்படும். பெயர்கள் இடம் பெறாவிட்டாலும் எந்த கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படாது.

    ஒரு சிலர் வேண்டும் என்றே அச்ச உணர்வை உருவாக்க திட்டமிடுகின்றனர். தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது முற்றிலும் பாரபட்சம் இல்லாதது. எந்த தவறான தகவலையும் பரப்பக்கூடாது. இது ஒரு வரைவு அறிக்கை மட்டுமே இறுதிப்பட்டியல் அல்ல” என்றார்.  #NRCDraft #RajnathSingh #NRCAssam

    ×