search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஜித் பவார்"

    மகாராஷ்டிர முன்னாள் உள்துறை மந்திரி பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் அடுத்த அதிரடியாக அஜித் பவார் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா தலைமையில் நடைபெறும் கூட்டணி ஆட்சியில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரசும் இடம்பெற்றுள்ளது.

    சரத்பவாரின் அண்ணன் மகன் அஜித்பவார் மாநில துணை முதல்-மந்திரியாக இருந்து வருகிறார்.

    அவர் மீது ஏற்கனவே வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாக வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில், வருமானத்துக்கு அதிகமான பணம் சேர்த்து பினாமி பெயரில் அவர் சொத்துக்கள் வாங்கி குவித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இது சம்பந்தமாக வருமான வரித்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த மாதம் 7-ந்தேதி அஜித் பவாரின் நிறுவன அலுவலகங்கள், உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட 70 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    இதில் அஜித்பவார் ஏராளமான சொத்துக்களை வாங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன்படி ரூ.1050 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பினாமி பெயரில் வாங்கியிருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து பினாமி சொத்துக்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் அந்த சொத்துக்களை பறிமுதல் செய்வதாக வருமான வரித்துறையினர் அஜித்பவாருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

    மொத்தம் 5 விதமான சொத்துக்கள் தற்போது பறிமுதல் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ரூ.600 கோடி மதிப்புள்ள ஜரந்தேஸ்வர் சர்க்கரை ஆலை, தெற்கு டெல்லியில் உள்ள ரூ.20 கோடி மதிப்புள்ள குடியிருப்புகள், ரூ.25 கோடி மதிப்புள்ள பார்த்த பவார் நிர்மல் அலுவலகம், சேகோவாவில் உள்ள ரூ.250 கோடி நிலயா ரிசார்ட் ஓட்டல், மகாராஷ்டிரத்தில் 27 இடங்களில் உள்ள ரூ.500 கோடி நிலங்கள் ஆகியவை கைப்பற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    மகாராஷ்டிர முன்னாள் உள்துறை மந்திரி பண மோசடி வழக்கில் நேற்று இரவு கைது செய்யப்பட்ட நிலையில் அடுத்த அதிரடியாக அஜித்பவார் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


    ×