search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிபர் வலியுறுத்தல்"

    ராஜபக்சே அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட இரு நம்பிக்கையில்லா தீர்மானங்களும் வெற்றிபெற்ற நிலையில் மூன்றாவது முறையும் வாக்கெடுப்பு நடத்த அதிபர் சிறிசேனா வலியுறுத்தியுள்ளார். #SriLankanparliament #MaithripalaSirisena #RanilWickremesinghe
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா பிரதமராக நியமித்தார்.

    ஆனால், அவருக்கு போதிய மெஜாரிட்டி எம்.பி.க்கள் இல்லை. எனவே பாராளுமன்றத்தையே அதிபர் சிறிசேனா  கலைப்பதாக அறிவித்தார். மேலும் பாராளுமன்ற தேர்தல் நடத்தவும் உத்தரவிட்டார். இதை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பாராளுமன்றத்தை கலைத்தது செல்லாது என்று கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

    அதைத்தொடர்ந்து, பாராளுமன்ற கூட்டத்தை சபாநாயகர் கருஜெயசூர்யா கூட்டினார். அதில் பிரதமர் ராஜபக்சேவுக்கு எதிராக ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது. இந்த ஓட்டெடுப்பில் ராஜபக்சே தோல்வி அடைந்தார். இதனால் அவர் பிரதமர் பதவியை இழக்க வேண்டிய நிலை உருவானது.

    இந்த நம்பிக்கை ஓட்டெடுப்பை ஏற்க அதிபர் சிறிசேனா மறுத்து விட்டார். இதனால் அரசியல் குழப்பம் உருவானது. நான்தான் தொடர்ந்து பிரதமராக இருக்கிறேன் என்று ராஜபக்சே கூறினார். நேற்று மீண்டும் பாராளுமன்ற கூட்டம் நடந்தபோது எம்.பி.க்கள் கைகலப்பில் ஈடுபட்டனர். இதனால் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

    ஏற்கனவே நடந்த ஓட்டெடுப்பு பாராளுமன்ற விதிகளின்படி நடத்தப்படவில்லை. அதை ஏற்றுக் கொள்ள முடியாது. நான் ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கிறேன். எனவே புதிய ஓட்டெடுப்பை பாராளுமன்ற விதிகளை பின்பற்றி நடத்துங்கள் என்று அதிபர் சிறிசேனா கேட்டுக்கொண்டார்.

    ஏற்கனவே கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சபையில் கொண்டு வந்து விவாதிக்கலாம். அதில் உள்ள முதலாவது ஷரத்தை நீக்கிவிட வேண்டும். ஓட்டெடுப்பின் போது ஒவ்வொரு எம்.பி.யையும் பெயர் சொல்லி அழைத்து அவர் யாருக்கு ஆதரவு அளிக்கிறார்? என்று கேட்டு பதிவு செய்து அதன்படி ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்றும் சிறிசேனா கூறினார்.

    கடந்த 16-ம் தேதி சபாநாயகர் கருஜெயசூர்யா வரலாறு காணாத அளவில் நூற்றுக்கணக்கான போலீசாரின் பாதுகாப்புடன் பாராளுமன்றத்துக்கு வந்தார். இன்றும் ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்கள் மற்றும் ரணில் விக்ரமசிங்கே ஆதரவு எம்.பி.க்களுக்கு இடையே கடும் வாக்குவாதமும் மோதலும் ஏற்பட்டது.



    இருதரப்பினரும் மிளகாய் தூள் தூவி புதுவித போர் பாணியில் சண்டையிட்டனர். நிலைமையை சமாளிக்க இயலாமல் அவை காவலர்களும், போலீசாரும் திணறினர். போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

    கடுமையான கூச்சல், குழப்பத்துக்கு இடையே பாராளுமன்றத்தை 19-ம் தேதி பிற்பகல் ஒருமணி வரை தள்ளிவைப்பதாக அறிவித்த சபாநாயகர் ஜெயசூரியா,  அன்று நடைபெற்ற குரல் வாக்கெடுப்பில் ராஜபக்சேவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதாகவும் அறிவித்தார்.

    இந்நிலையில், நேற்று மாலை அனைத்து கட்சி தலைவர்கள் அதிபர் சிறிசேனாவை மீண்டும் சந்தித்தனர். பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், இன்று அதிபரின் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் ராஜபக்சே அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின்மீது மூன்றாவது முறையாக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சிறிசேனா வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வாக்களிக்கும் எம்.பி.க்கள் தங்களது பெயர்களை கூறி ஆதரவையோ, எதிர்ப்பையோ பதிவு செய்ய வேண்டும். அல்லது, சர்வதேச அளவுக்கோலின்படி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் அவர்களின் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகுதான் நான் இதுதொடர்பாக தீர்மானிப்பேன் என அதிபர் தெரிவித்து விட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. #SriLankanparliament #MaithripalaSirisena #RanilWickremesinghe

    ×