search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அந்தமான் தென்மேற்கு மழை"

    அந்தமான், நிக்கோபார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதையொட்டி மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. #rain #IndiaMeteorologicalDepartment

    திருவனந்தபுரம்:

    தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 1-ந்தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    கடந்த சில ஆண்டுகளாக தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாத நிலையில் இந்த ஆண்டு முன்கூட்டியே மழை தொடங்கும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

    இந்த நிலையில் தெற்கு அந்தமான், நிக்கோபார் பகுதிகளில் தீவுகளில் நேற்று தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இந்த மழை அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு அரபிக்கடல், குமரி கடல், மாலத்தீவு பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகளிலும் தொடங்கு வதற்கு சாதகமான சூழ்நிலையும் உள்ளது.

    இதனால் குமரி கடல் கேரளா, கர்நாடகா கடலோர பகுதிகள், லட்சத்தீவு கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்றும், கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. வருகிற 30-ந்தேதி வரை இந்த பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கேரளாவில் ஏற்கனவே கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை காரணமாக அங்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இன்று மிக பலத்த மழை பெய்யுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    வருகிற 28-ந்தேதி வரை கேரளாவின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யுமென்றும், சில மாவட்டங்களில் அதிக மழை பொழிவு நீடிக்குமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 21 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த மழை காரணமாக நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் மலை பகுதிகளுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டுமென்றும், சுற்றுலா பயணிகள் கடற்கரை பகுதிக்கு செல்லவோ, கடலில் குளிக்கவோ வேண்டா மென்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    கொச்சி வானிலை மையம் மழை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், பலத்த காற்று மற்றும் இடியுடன் மழை பெய்யும். திருவனந்தபுரம், கோழிக்கோடு, பத்தனம் திட்டா, மலப்புரம் உள்பட 14 மாவட்டங்களில் மிகவும் பலத்த மழை பெய்யுமென்றும் கூறப்பட்டுள்ளது.

    மழை எச்சரிக்கையை தொடர்ந்து கேரளாவில் அனைத்து மாவட்டங்களிலும் தாலுகா வாரியாக மழை கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் இந்த கட்டுப்பாட்டு அறைகள் செயல்படும் என்றும் கேரள அரசு அறிவித்துள்ளது. தீயணைப்பு படையினர், போலீசார் மற்றும் அனைத்து அரசு துறை அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டு மென்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    10 ஆண்டுகளுக்கு பிறகு பெய்யும் கனமழையாக இது இருக்கும் என்றும், 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் 30-ந்தேதி வரை கேரள மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து குளு குளு கால நிலை நிலவுகிறது. இன்றும் வானில் மேக மூட்டமாகவே காணப்பட்டது. மாவட்டத்தின் சில பகுதிகளில் மழையும் பெய்தது. #rain #IndiaMeteorologicalDepartment

    ×