search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்கா அறிவிப்பு"

    பயங்கரவாதத்தை ஒடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், பாகிஸ்தானுக்கு ரூ.11 ஆயிரத்து 950 கோடி நிதி உதவியை அமெரிக்கா நிறுத்தி விட்டது. #Pakistan #DonaldTrump
    வாஷிங்டன்:

    உலகளாவிய பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவின் கூட்டாளியாக பாகிஸ்தான் உள்ளது. இதற்காக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆண்டு தோறும் நிதி உதவி அளித்து வந்தது.

    ஆனால் அந்த நிதியை பாகிஸ்தான் பெற்றுக்கொண்டு, தன் சொந்த நாட்டில் உள்ள தலீபான், லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது, ஹக்கானி நெட்வொர்க் அமைப்பினர், அல்கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை பாரபட்சமின்றி ஒடுக்கத்தவறி விட்டது என்பது அமெரிக்காவின் கருத்தாக உள்ளது.

    இது தொடர்பாக பாகிஸ்தான் அரசை பல முறை அமெரிக்கா வலியுறுத்தியும் கூட, அந்த நாடு நடவடிக்கை எடுப்பதில்லை என்பதில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் கடும் அதிருப்தியில் உள்ளது.

    இது பற்றி டிரம்ப், வாஷிங்டனில் நேற்று முன்தினம் பேட்டி அளித்தார். அப்போது அவர், “ பயங்கரவாத ஒழிப்பில் பாகிஸ்தான் நமக்கு உதவ வேண்டும் என்று விரும்புகிறேன். இதற்காக பாகிஸ்தானுக்கு இனி நிதி உதவி அளிக்க முடியாது. அவர்கள் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு எதுவும் செய்வதில்லை என்பதால்தான் நிதி உதவி அளிக்க முடியாது” என கூறினார்.

    இது மட்டுமின்றி பாக்ஸ் நியூஸ் டெலிவிஷன் சேனலுக்கு ஒரு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் அவர், “சர்வதேச பயங்கரவாதியான பின்லேடன், பாகிஸ்தானில் அப்போட்டாபாத் நகரத்தில் உள்ள பங்களாவில் பதுங்கி இருந்ததை பாகிஸ்தான் மக்கள் அனைவரும் அறிந்திருந்தார்கள். ஆனால் அதை அவர்கள் எங்களுக்கு சொல்லவில்லை. மாறாக நாங்கள் வழங்கி வந்த நிதியை மட்டும் பெற்றுக்கொண்டனர். அதனால்தான் பாகிஸ்தானுக்கு அளித்து வந்த நிதியை நிறுத்திவிட வேண்டும் என்று நீண்ட காலத்துக்கு முன்பே முடிவு செய்தேன்” என குறிப்பிட்டார்.

    ஆனால் டிரம்ப் கருத்தை அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் முன்னாள் தூதர் உசேன் ஹக்கானி நிராகரித்துள்ளார்.

    இதுபற்றி அவர் கருத்து தெரிவிக்கையில், “ அமெரிக்காவுக்காக பாகிஸ்தான் எதுவும் செய்யவில்லை என்று டிரம்ப் கூறுவது சரியல்ல. அமெரிக்காவின் சில கொள்கை நோக்கங்கள் நிறைவேறுவதற்கு பாகிஸ்தான் உதவி இருக்கிறது” என கூறினார்.

    இந்த நிலையில் பாகிஸ்தானுக்கான 1.66 பில்லியன் டாலர் நிதி உதவி (சுமார் ரூ. 11 ஆயிரத்து 950 கோடி) நிறுத்தப்படுவதாக அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் அறிவித்துள்ளது.

    இதுகுறித்து அமெரிக்க ராணுவத்துறை செய்தி தொடர்பாளர் கர்னல் ராப் மேனிங், நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு இ-மெயில் வழியாக பதில் அளித்தார்.

    அதில் அவர், “ பாகிஸ்தானுக்கான பாதுகாப்பு நிதி உதவி 1.66 பில்லியன் டாலர் நிறுத்தி வைக்கப்படுகிறது. பாகிஸ்தானுக்கு ஏற்கனவே நிறுத்தப்பட்ட நிதி உதவி எதுவும் திரும்ப அளிக்கப்படவில்லை” என கூறினார்.

    இந்த விவகாரம் குறித்து அமெரிக்காவில் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா நிர்வாகத்தில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், மத்திய ஆசியா ஆகியவற்றுக்கான ராணுவத்துறை துணை மந்திரியாக இருந்த டேவிட் செத்னி, செய்தி நிறுவனம் ஒன்றிடம் கருத்து தெரிவித்துள்ளார்.

    அவர் இது பற்றி கூறுகையில், “பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கி வந்த ராணுவ நிதி உதவியை இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நிறுத்தி இருப்பது, அந்த நாட்டின் மீது அமெரிக்கா அடைந்துள்ள ஏமாற்றத்தின் வலுவான அடையாளம் ஆகும்” என கூறினார்.

    மேலும், “பாகிஸ்தானின் அண்டை நாடுகள் மீது பயங்கரவாத குழுக்கள் வன்முறையில் ஈடுபடுவதை, அந்த நாடு சகித்துக்கொள்வதோடு, ஊக்கமும் அளிக்கிறது என்பது அமெரிக்காவின் கவலை. ஆனால் அதை சரி செய்வதற்கு பாகிஸ்தான் எந்தவொரு தீவிர நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை” எனவும் குறிப்பிட்டார்.

    இப்போது ரூ.11 ஆயிரத்து 950 கோடி நிதி உதவியை நிறுத்தப்படுவதாக அமெரிக்கா அறிவித்து இருப்பது பாகிஸ்தானில் உள்ள இம்ரான் கான் அரசுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
    சீனாவின் 16 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 800 கோடி) மதிப்பிலான 279 பொருட்கள் மீது கூடுதல் வரி விதிப்பதாக அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.
    வாஷிங்டன்:

    உலகின் இரு பெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தக போர் ஏற்பட்டு உள்ளது.

    சீனாவில் இருந்து இறக்குமதியாகிற பொருட்கள் மீது அமெரிக்காவும், அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகிற பொருட்கள் மீது சீனாவும் மாறி மாறி கூடுதல் வரி விதித்து வருகின்றன.

    அந்த வகையில் சீனாவின் 34 பில்லியன் டாலர் (சுமார் ரூ.2 லட்சத்து 31 ஆயிரத்து 200 கோடி) மதிப்பிலான பொருட்கள் மீது அமெரிக்கா கடந்த மாதம் 6-ந் தேதி கூடுதல் வரி விதித்தது. அதே அளவுக்கு அமெரிக்க பொருட்கள் மீது சீனாவும் கூடுதல் வரி விதித்தது.

    இந்த நிலையில் சீனாவின் 16 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 800 கோடி) மதிப்பிலான 279 பொருட்கள் மீது கூடுதல் வரி விதிப்பதாக அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் நேற்று அறிவித்தது.

    25 சதவீத அளவிலான இந்த கூடுதல் வரி விதிப்பு, வரும் 23-ந் தேதி நடைமுறைக்கு வருகிறது. 
    மும்பை தாக்குதலுக்கு காரணமான லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த பாகிஸ்தானியர் 3 பேரை சர்வதேச பயங்கரவாதிகள் என அமெரிக்கா அறிவித்து நடவடிக்கை எடுத்து உள்ளது. #Pakistanis #TerroristList
    வாஷிங்டன்:

    மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதியன்று 166 பேர் சாவுக்கு காரணமான பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய இயக்கம் லஷ்கர் இ தொய்பா இயக்கம். இந்த இயக்கம் ஏற்கனவே பயங்கரவாத இயக்கமாக அமெரிக்காவால் தடை செய்யப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் இந்த இயக்கத்தை சேர்ந்த 3 பேரை சர்வதேச பயங்கரவாதிகள் என அமெரிக்கா அறிவித்து அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளது.

    அவர்கள், அப்துல் ரகுமான் அல் தாகில், ஹமீத் அல் ஹசன், அப்துல் ஜப்பார் ஆவார்கள்.

    இவர்களை சர்வதேச பயங்கரவாதிகள் என அறிவித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. முன்னதாக அப்துல் ரகுமான் அல் தாகில் சர்வதேச பயங்கரவாதியாகவும், 3 பேரின் சொத்துக்கள் முடக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளி வந்தன.

    ஆனால் 3 பேருமே சர்வதேச பயங்கரவாதிகள் என அறிவித்து இப்போது அது குறித்த முறையான அறிவிப்பு, அமெரிக்க வெளியுறவுத்துறையால் வெளியிடப்பட்டு உள்ளது.

    3 பேரில் அப்துல் ரகுமான் அல் தாகில், இந்தியாவில் 1997-2001 ஆண்டுகளில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் செயல்பாட்டு தலைவர்.

    2004-ம் ஆண்டு இவரை ஈராக்கில் வைத்து இங்கிலாந்து படைகள் சிறை பிடித்தன. அதைத் தொடர்ந்து அவர் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்க காவலில் மாறி மாறி வைக்கப்பட்டார். 2014-ம் ஆண்டு அவர் பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்பட்டார்.

    பாகிஸ்தான் அவரை விடுவித்ததும், அவர் 2016-ம் ஆண்டு லஷ்கர் இ தொய்பா இயக்கத்துக்கு வந்து, அதன் ஜம்மு பிராந்திய தளபதி ஆனார்.

    இப்போது சர்வதேச பயங்கரவாதி என அறிவித்து இருப்பதால், இவரால் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்துவதற்கு நிதி ஆதாரங்கள் திரட்டுவது தடுக்கப்பட்டு உள்ளது என அமெரிக்க வெளியுறவுத்துறை ஒரு அறிக்கையில் கூறி உள்ளது.

    பிற நடவடிக்கைகளுடன், அமெரிக்க எல்லைக்குள் உள்ள இவரது சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டன. அவருடன் அமெரிக்கர்கள் யாரும் எந்த விதமான தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    மற்ற இரு பயங்கரவாதிகளான ஹமீத் அல் ஹசன், அப்துல் ஜப்பார் ஆகியோர் பயங்கரவாத குழுவுக்கு ஆதரவாகவும், அவர்களுக்கு நிதி அளிக்கவும் உதவி உள்ளனர் என அமெரிக்க நிதித்துறை மற்றும் நிதி உளவுப்பிரிவு கீழ்நிலை செயலாளர் சிகால் மண்டேல்கர் கூறினார்.  இவர்களின் சொத்துக்களும் முடக்கப்பட்டன.

    ஹமீத் அல் ஹசன், 2016-ம் ஆண்டு, லஷ்கர் இ தொய்பாவின் துணை அமைப்பான பாலாஹ் இ இன்சானியத் அறக்கட்டளைக்காக வேலை செய்து உள்ளார். லஷ்கர் இ தொய்பாவுக்காக இவர் தனது சகோதரர் முகமது இஜாஸ் சப்ராசுடன் சேர்ந்து பாகிஸ்தானுக்கு நிதி அனுப்பி வந்து இருக்கிறார்.

    அப்துல் ஜப்பாரும் லஷ்கர் இ தொய்பாவுக்கு நிதி சேகரித்து அனுப்புவதில் முக்கிய பங்கு வகித்து வந்து உள்ளார்.

    ஒரே நேரத்தில் பாகிஸ்தானியர் 3 பேரை சர்வதேச பயங்கரவாதிகள் என அமெரிக்கா அறிவித்து, அவர்களின் சொத்துக்களை முடக்கி இருப்பது, புதிய ஆட்சி அமைய உள்ள நேரத்தில் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
    ×