search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசியல் கட்சி"

    விரைவில் புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளதாக நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

    பெங்களூர்:

    நடிகர் பிரகாஷ்ராஜ் சமீப காலமாக பிரதமர் மோடியை விமர்சனம் செய்து வந்தார். இந்த நிலையில் அவர் பாராளுமன்ற தேர்தலில் பெங்களூர் மத்திய தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார்.

    இந்த தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் பி.சி. மோகன் வெற்றிபெற்றார். நடிகர் பிரகாஷ்ராஜ் 28 ஆயிரத்து 906 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.

    தேர்தல் தோல்வி குறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்ட கருத்தில், ‘‘தனது கன்னத்தில் பலமான அறை விழுந்துள்ளது’’ என்று கூறி இருந்தார்.

    இந்தநிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் பெங்களூர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 6 மாதமாக பெங்களூர் முழுவதும் பயணம் செய்து மக்களை சந்தித்து அவர்களின் வாழ்வாதார பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்தேன். போலி தேசபக்தியையும், வெறுப்பையும், ஊட்டிய அரசியல் தலைவர்களை எதிர்த்தேன். ஆனால் மக்கள் பா.ஜனதாவுக்கு வாக்களித்து அமோக வெற்றி பெறச்செய்துள்ளனர். மக்களின் முடிவை நான் ஏற்கிறேன்.

    நான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக தொடர்ந்து போராடுவேன். பெங்களூர் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன். சுயேச்சை வேட்பாளராக இருப்பதால் மக்களுக்கும் எனக்கும் இடைவெளி நிலவுவதாக சொல்கிறார்கள். எனவே விரைவில் புதிய அரசியல் கட்சியை தொடங்க திட்டமிட்டுள்ளேன்.

    இன்னும் 1 வருடத்தில் பெங்களூர் மாநகராட்சி தேர்தல் வருகிறது. அதில் எங்களது வேட்பாளர்களை களம் இறக்கி சிறிய அளவில் இருந்து ஆதரவை பெருக்கப் போகிறேன். சினிமா எனது தொழில் என்பதால் தொடர்ந்து நடிக்கவும் இருக்கிறேன். அரசியல் கட்சி நடத்த பணம் தேவைப்படுவதால் படங்களில் நடிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்க ரூ.5,029 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மும்பை:

    தேர்தலின்போது அரசியல் கட்சிகளுக்கு முன்பு பணமாக வழங்கப்பட்டது. இதில் கருப்பு பணம் புழங்குவதாக புகார் எழுந்ததால் இதனை தடுக்க தேர்தல் பத்திரங்களாக வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. பதிவு பெற்ற அரசியல் கட்சிகளும், நாடாளுமன்ற, சட்டமன்ற பொதுத்தேர்தல்களில் குறைந்தபட்சம் 1 சதவீதம் ஓட்டு வாங்கிய கட்சிகளும் இந்த தேர்தல் பத்திரங்களை பெறமுடியும்.

    இந்தியாவை சேர்ந்த தனிநபரோ அல்லது நிறுவனங்களோ இந்த தேர்தல் பத்திரத்தை வாங்கி தாங்கள் விரும்பும் அரசியல் கட்சிக்கு நன்கொடையாக கொடுக்கலாம். அவர்கள் வங்கி கணக்கு மூலம் அந்த பத்திரத்தை பணமாக மாற்றிக்கொள்ளலாம். இந்த தேர்தல் பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கி மட்டுமே வழங்கும். இந்த நடைமுறை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வந்தது.

    இந்நிலையில், மும்பையை சேர்ந்த தகவல் அறியும் உரிமை ஆர்வலர் மனோரஞ்சன் ராய் என்பவர், இதுவரை எத்தனை தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது, அதன் மதிப்பு எவ்வளவு? வழங்கிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் பெயர் என்ன? என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்டிருந்தார்.

    இதற்கு பாரத ஸ்டேட் வங்கியின் உதவி பொது மேலாளர் நரேஷ்குமார் ரஹேஜா பதில் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    மே 4-ந் தேதி வரை மொத்தம் ரூ.5,029 கோடி மதிப்புள்ள 10,494 தேர்தல் பத்திரங்கள் 9 கட்டங்களாக வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் பத்திரங்கள் வாங்கிய தனிநபர் அல்லது நிறுவனங்கள் பெயரை வெளியிட தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் அதனை தெரிவிக்க முடியாது. வெளியிட்ட 10,494 தேர்தல் பத்திரங்களில் 10,388 பத்திரங்கள் பணமாக மாற்றப்பட்டுவிட்டது. அதன் மதிப்பு மட்டும் ரூ.5,011 கோடி.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த தகவல் பற்றி கருத்து தெரிவித்த மனுதாரர் மனோரஞ்சன் ராய் கூறியதாவது:-

    தேர்தல் பத்திரங்கள் அதிகரித்திருப்பது அரசியல் கட்சிகளுக்கும், பெரு நிறுவனங்களுக்கும் இடையே உள்ள தூய்மையற்ற தொடர்பை சட்டபூர்வமாக்கியது தானே தவிர வேறு ஒன்றுமில்லை. இது நாட்டில் பெரிய அளவிலான ஊழலுக்கு தான் வழிவகுக்கும். தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை வழங்கிய தனிநபர் மற்றும் நிறுவனங்களின் பெயர்களை வெளியிட்டு இருந்தால் இந்த அழிவு சற்று குறையும்.

    பெரு நிறுவனங்கள் இவ்வளவு பெரிய தொகையை சமுதாய பொறுப்புள்ள திட்டங்களுக்கோ, ஏழைகள் மற்றும் தேவையுள்ள பயனாளிகளுக்கோ செலவழித்து இருக்கலாம். மற்றபடி இந்த நன்கொடை அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கு தான் பயன்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக செயல்படும் அரசு ஊழியர்களுக்கு ஜெயில் தண்டனை வழங்கப்படும் என புதுவை தேர்தல் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையம் 10-03-2019 அன்று இந்திய லோக்சபா தேர்தல் மற்றும் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அட்டவணையை வெளியிட்டுள்ளது.

    இந்த அறிவிப்பு வெளி வந்த தினத்திலிருந்து தேர்தல் நன்னடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

    தேர்தல் நெறிமுறைகளை செவ்வனே செயல்படுத்தவும், எதிர்வரும் தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்திட அனைத்து முயற்சிகளும் மாவட்ட நிர்வாகத்தால் எடுக்கப்பட்டு வருகிறது.

    கடந்த தேர்தலின் போது மாநில மத்திய அரசு ஊழியர்கள் அரசியல் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் ஆதரவாக தேர்தல் வேலைகளில் ஈடுபடுவதாக பல புகார்கள் தேர்தல் ஆணையத்திற்கு வந்துள்ளது.

    எனவே அரசு ஊழியர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றும் பொழுது நடுநிலையோடு செயல்பட வேண்டும். தேர்தல் நடக்கும் காலத்தில் ஊழியர்கள் நடுநிலையோடு செயல்படுவது மக்களுக்கு தெரிய வேண்டும். அவ்வாறு தெரிந்தால் தான் தேர்தல் நியாயமான, சுதந்திரமான ஒரு நல்ல சூழலில் நடக்கிறது என்று பொதுமக்களுக்கு உணரப்படும்.

    எந்த ஒரு அரசியல் கட்சி அல்லது வேட்பாளருக்கும் ஆதரவாக அரசு ஊழியர்கள் செயல்படக்கூடாது. மீறுவோர் மீது மத்திய அரசு பணிநடத்தை விதிகள் 1961-ல் உள்ள விதிகள் கீழ் மற்றும் அனைத்திந்திய பணியில் இருப்போருக்கான விதிகளின் கீழும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஊழியர்கள், வேட்பாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவதையும் மற்றும் ஓட்டு பதிவின் போது தங்கள் செல்வாக்கை பயன்படுத்துவதை தடை செய்யப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறுபவர்கள் 6 மாத சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தான் தண்டிக்கப்படுவார்கள்.

    இந்த சட்டத்தில் உள்ள பிரிவு 234-ன் கீழ் அரசு ஊழியர்கள் தங்கள் அலுவலக கடமைகளை மீறி செயல்படக்கூடாது.

    அவ்வாறு மீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள். தேர்தலின் போது தேர்தல் முகவர்களாக, வாக்குச்சாவடி முகவர்களாக மற்றும் எண்ணுகை முகவர்களாக செயல்பட தடை செய்யப்பட்டுள்ளது.

    அரசு ஊழியர்கள் மேற்கூறிய நடத்தை விதிகளை கடைபிடிக்க வேண்டும். மீறுவோர் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கைக்கு எடுத்து தண்டிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. #tamilnews

    இந்தியாவில் நடக்கவுள்ள 17வது பாராளுமன்ற தேர்தல் உலகிலேயே மிகப்பெரிய தேர்தல் என்ற பெருமையை பெறுகிறது. #Parliamentaryelections
    சென்னை:

    இந்திய பாராளுமன்றத்துக்கான தேர்தல் ஏப்ரல் 11-ந்தேதி தொடங்கி மே 19-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்தியாவில் 17வது பாராளுமன்ற தேர்தலான இது உலகிலேயே மிகப்பெரிய தேர்தல் என்ற பெருமையை பெறுகிறது.

    தேர்தலுக்காக நாடு முழுக்க அரசியல் கட்சிகள் கூட்டணிகள் அமைப்பதிலும் வேட்பாளர்கள் தேர்விலும் தீவிரமாக உள்ளனர். தொகுதிகள் ஒதுக்கீடு, வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல் அறிக்கை, பிரசாரம் என இந்தியா முழுவதும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு மிகவும் பரபரப்பாக இருக்கும்.

    வரும் தேர்தல்தான் உலகத்திலேயே மிகப்பெரிய தேர்தல் (எண்ணிக்கையின் அடிப்படையில்) என கூறப்படுகிறது. உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. 2017 ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி இங்கு 133.97 கோடி மக்கள் வசிக்கின்றனர். இதன் அடிப்படையில் வரும் தேர்தலில் அதிக மக்கள் ஓட்டுரிமை பெற்றுள்ளனர்.



    இந்த தேர்தலில் இந்தியா முழுவதும் 90 கோடி மக்கள் வாக்களிக்கும் உரிமையை பெற்றுள்ளனர். இதற்கு முன் நடைபெற்ற 2014-ம் ஆண்டு தேர்தலில் 85 கோடியே 50 லட்சம் பேர் வாக்களித்தனர். தற்போது 5 கோடியே 50 லட்சம் பேர் அதிகரித்துள்ளனர். இந்தியாவில் முதல்முறையாகத் தேர்தல் நடத்தப்பட்டபோது, 17 கோடி மக்கள் மட்டுமே வாக்களித்தனர். இந்தியாவில் மொத்தம் ஒரு கோடியே ஐம்பது லட்சம் மக்கள் 20 வயதுக்குள்ளும் மூன்றில் இரண்டு பங்கு இந்தியர்கள் 35 வயதுக்கும் கீழ் உள்ளனர்.

    38,325 மூன்றாம் பாலினத்தவர்கள் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். நாடு முழுவதும் 3,626 கட்சிகள் உள்ளன. இவற்றில் 1841 கட்சிகள் மட்டுமே தேர்தல் ஆணையத்தால் முறையாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளன. இந்த தேர்தலில் 543 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த சுமார் 10 லட்சம் வாக்குச்சாவடிகளில் 11 லட்சம் மின்னணு வாக்கு இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளன. #Parliamentaryelections
    ரஜினிகாந்த் நிலையான அரசியல் கட்சியை நடத்த முடியாது என்று எம்.ஜி.ஆர். கழக பொதுக்குழு கூட்டத்தில் ஆர்.எம்.வீரப்பன் கூறினார். #RajiniKanth
    சென்னை:

    ரஜினிகாந்த் நிலையான அரசியல் கட்சியை நடத்த முடியாது என்று ஆர்.எம்.வீரப்பன் கூறினார்.

    எம்.ஜி.ஆர். கழக பொதுக்குழு கூட்டம் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள திருமண மஹால் ஒன்றில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் நிறுவனத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் டி.ராமலிங்கம், மகளிர் அணி செயலாளர் இரா.அபிராமி, மாநில அமைப்பு செயலாளர்கள் என்.ஜி.கலைவாணன், சு.ப.தமிழ்வேள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் ஆர்.எம்.வீரப்பனின் மகன் செல்வம், மாவட்ட செயலாளர்கள் பெரம்பூர் துரைராஜ், கே.எம்.ஆறுமுகம், சங்கரலிங்கம், பெ.சிவகுமார், சேவியர், கட்சியின் வக்கீல் பிரிவு செயலாளர் வக்கீல் கருணாகரன், மயிலாப்பூர் பகுதி செயலாளர் ஆர்.பி.வெங்கடேசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணா நிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முன்னதாக ஆர்.எம்.வீரப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. என்பது, நான் எம்.ஜி.ஆருடன் இணைந்து ஆரம்பித்த இயக்கம். எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் இருந்தபோது, வீடியோ காட்சிகளை படம் எடுத்து தமிழகத்தில் பரப்பி தான் அவரை 3-வது முறை முதல்-அமைச்சராக ஆக்கினோம். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு, ஜெயலலிதா அந்த இயக்கத்தை கைப்பற்றினார். அவர் ஆட்சி செய்த போதுதான், தமிழக மக்களுக்காக பாடுபட்ட ஒரு அரசு, ஒரு இயக்கம் பணம் சம்பாதிக்கிற வியாபாரக் கூட்டமாக மாறியது. அது ஜெயலலிதா மறைந்த பிறகும் இன்றும் தொடர்கிறது.

    எம்.ஜி.ஆர். கழகம் என்பது ஒரு அரசியல் கட்சி தான். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து இப்போது எதுவும் கூற முடியாது. தேர்தலில் தி.மு.க.வின் வெற்றிக்காக எம்.ஜி.ஆர். கழக தொண்டர்கள் பாடுபடுவார்கள். ஆனால் எம்.ஜி.ஆர். கழகத்தின் சார்பில் யாராவது போட்டியிடுவர்களா? என்பதை இப்போது சொல்ல முடியாது.

    ரஜினிகாந்த் எனக்கு மிக வேண்டிய, நெருங்கிய நண்பர். பாட்ஷா திரைப்பட வெற்றி விழாவில் ரஜினி பேசியதில் ஜெயலலிதா கோபப்பட்டு என்னை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கினார். இன்றைக்கும் ரஜினிகாந்த் மிகப்பெரிய படங்களில் நடித்தாலும், பாட்ஷா என்று சொன்னால் அவருக்கு தனி புகழ் இருக்கிறது.



    அப்போது தான் ரஜினி என்னோடு சேர்ந்து அரசியல் கட்சி ஆரம்பிக்க போகிறார் என்றெல்லாம் கூறினார்கள். அப்போது அவரை அரசியலுக்குள் வரவிடாமல் தடுத்தவர்களும் இருக்கிறார்கள். ரஜினிகாந்த் மிகச் சிறந்த நடிகர். பொதுமக்களின் நன்மைக்காக பாடுபடுபவர். ஆனால், ஒரு நிலையான அரசியல் கட்சியை நடத்துவது அவரால் முடியுமா? என்றால் எனக்கு சந்தேகம். ஏன் என்றால் நான் பல நேரம் அவரோடு விவாதித்து இருக்கிறேன். அவர் மிகச்சிறந்த மனிதர். சிந்தனையாளர். ஆன்மிக உணர்வு மிகுந்தவர். எதிர்பாராத வகையில் இயற்கையாகவே தமிழகத்துக்கு கிடைத்த மாபெரும் நடிகர். அவரது அரசியல் நிலைமைகளை பற்றி கூற தயாராக இல்லை.

    எம்.ஜி.ஆர். போன்று அரசியல் உலகத்திலும், கலை உலகத்திலும் புகழ் பெற்ற மனிதரை இந்தியா கண்டது இல்லை. இப்போது இருப்பது அ.தி.மு.க.வே இல்லை. அ.தி.மு.க. என்று எம்.ஜி.ஆர். ஆரம்பித்த கட்சியை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்கிற ஒரு பெரிய கூட்டுக்கம்பெனி தான் இருக்கிறது. அவர்களுக்கு அரசியலை பற்றி கவலை இல்லை. மக்களை பற்றி கவலை இல்லை. தனது பதவி காப்பாற்றப்பட வேண்டும். தன் பதவியின் மூலம் பொருள் ஈட்ட வேண்டும் என்பது தான் அவர்களின் நோக்கம்.

    இவ்வாறு அவர் கூறினார். #RajiniKanth
    தேர்தல் ஆதாயத்துக்காக அரசியல் கட்சிகள் மதத்தை பயன்படுத்துவதை தடுக்க உத்தர விடகோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டு உள்ளது. #SupremCourt #Religion
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டு வக்கீலும், பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவருமான அஸ்வினி உபாத்யாய் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார்.

    அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-

    தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தங்கள் ஆதாயத்துக்காக மதத்தை தவறாக பயன்படுத்துகின்றன. இதேபோல் வேட்பாளர்களும் மதத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். இந்த போக்கு அதிகரித்து வருகிறது. இதனால் மதசார்பின்மை, நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு பாதிக்கப்படுகிறது. மேலும் தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாக நடைபெறுவதையும் இது பாதிக்கிறது.

    இது தொடர்பான திருத்த மசோதா கடந்த 1994-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் 1996-ம் ஆண்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால் அந்த மசோதா காலாவதியாகி விட்டது. ஆனால் அதன்பிறகு அந்த மசோதாவை கொண்டு வர தேர்தல் கமிஷன் யோசனை தெரிவித்த போதிலும், அரசாங்கத்தின் தரப்பில் அதுதொடர்பான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.

    எனவே தேர்தலில் போட்டியிடும் கட்சிகளும், வேட்பாளர்களும் மதத்தை தவறாக பயன்படுத்துவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கும், தேர்தல் கமிஷனுக்கும் உத்தரவிடவேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

    இந்த மனு அடுத்த மாதம் (ஜூலை) 4-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது.  #SupremCourt #Religion #Tamilnews
    ×