search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அலஸ்டைர் குக்"

    ஓவல் டெஸ்டில் சதம் அடித்த அலஸ்டைர் குக் ‘ஓவர் த்ரோ’ மூலம் ஐந்து ரன்கள் பெறுவதற்கு காரணமாக இருந்த பும்ராவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். #AlastairCook
    இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், தொடக்க பேட்ஸ்மேனும் ஆன அலஸ்டைர் குக் இன்றுடன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார். நேற்று இந்தியாவிற்கு எதிரான ஓவல் டெஸ்டில் தனது கடைசி இன்னிங்சை விளையாடினார்.

    ஒரு கட்டத்தில் 96 ரன்கள் அடித்திருந்தார். இன்னும் நான்கு ரன்கள் அடித்தால் சதத்துடன் விடைபெறலாம் என்ற நெருக்கடியில் குக் களத்தில் நின்றிருந்தார். அப்போது ஜடேஜா வீசிய பந்தை ஆஃப் சைடு அடித்தார். அது பும்ரா கைக்கு சென்றது. அப்போது குக் ஒரு ரன்னிற்காக மெதுவாக நடந்து வந்தார். ஏறக்குறைய க்ரீஸை நெருங்கி விட்டார்.

    அந்த சமயத்தில் மின்னல் வேகத்தில் பும்ரா ஸ்டம்பை நோக்கி பந்தை எறிந்தார். இதை ஜடேஜா சற்றும் எதிர்பார்க்கவில்லை. பந்து அவரை நின்றிருந்த இடத்தை விட்டு வெகு தொலையில் சென்றது. இதனால் ஓவர் த்ரோ மூலம் பந்து பவுண்டரியை அடைந்தது.

    97 ரன்னில் நின்றிருந்த குக் எந்தவித சிரமமின்றி சதம் (101) அடித்தார். நேற்றைய ஆட்ட நேரம் முடிந்த பின்னர் அலஸ்டைர் குக் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது சதம் அடிக்க வேண்டும் என்ற தலைவலியை பும்ரா குறைத்துவிட்டார். அவருக்கு நன்றி என்று தெரிவித்தார்.



    இதுகுறித்து அலஸ்டைர் குக் கூறுகையில் ‘‘நான் 97 ரன்களுக்காக ஒரு ரன் அடித்துவிட்டு வரும்போது, மேலும் மூன்று ரன்கள் அடிக்க வேண்டியிருந்தது. பும்ரா கைக்கு பந்து சென்றதும், அவர் கீப்பரிடம் த்ரோ செய்வார் என்று நினைத்தேன். ஆனால் பந்தை வேகமாக வீசினார். அப்போது நான் ஜடேஜாவை பார்த்தேன். அவர் பந்து செல்லும் திசைக்கு அருகில் இல்லை. அப்போது சதம் நெருங்குகிறது என்று நினைத்துக் கொண்டேன்.

    ஓவர் த்ரோ என்னுடைய தலைவலியை தீர்த்துவிட்டது. இந்த தொடர் முழுவதும் பும்ரா ஏராளமான தலைவலி தந்தார். தற்போது ஓவர் த்ரோ மூலம் ஒரு வாய்ப்பு தந்தார். இதற்கான நான் அவருக்கு நன்றி சொல்கிறேன்’’ என்றார்.
    லண்டன் ஓவல் டெஸ்டில் சதம் அடித்த அலஸ்டைர் குக்கிற்கு ஊடகத்துறையைச் சேர்ந்தவர்கள் 33 பீர் பாட்டில்களை பரிசாக அளித்தனர். #AlastairCook
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியோடு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், தொடக்க பேட்ஸ்மேனும் ஆன அலஸ்டைர் குக் ஓய்வு பெறுகிறார்.

    தனது கடைசி இன்னிங்சில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 147 ரன்கள் குவித்தார். இந்தியாவிற்கு எதிராக 2006-ல் அறிமுகமான குக் முதல் இன்னிங்சில் அரைசதமும், 2-வது இன்னிங்சில் சதமும் அடித்தார். தற்போது கடைசி டெஸ்டிலும் அதேபோல் அரைசதம் மற்றும் சதம் அடித்துள்ளார்.

    சதம் அடித்த அலஸ்டைர் குக் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது 33 சதம் அடித்த அலஸ்டைர் குக்கிற்கு ஒரு மீடியா சார்பில் 33 பீர் பாட்டில்கள் வழங்கப்பட்டது.
    லண்டன் ஓவல் டெஸ்ட் போட்டியில் குக், ஜோ ரூட் சதத்தால் இந்தியாவின் வெற்றிக்கு 464 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 5-வது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 331 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 292 ரன்னில் ஆல்அவுட் ஆனது. 40 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்கை தொடங்கிய இங்கிலாந்து நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 2 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்திருந்தது. அலஸ்டைர் குக் 46 ரன்னுடனும், ஜோ ரூட் 29 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அலஸ்டைர் குக் தனது கடைசி இன்னிங்சில் சதம் அடித்தார். அவரைத் தொடர்ந்து ஜோ ரூட்டும் சதம் அடித்தார்.

    இறுதியாக ஜோ ரூட் 125 ரன்னிலும், அலஸ்டைர் குக் 147 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 259 ரன்கள் குவித்தது.



    அதன்பின் வந்த பேர்ஸ்டோவ் 18 ரன்னிலும், பென் ஸ்டோக்ஸ் 37 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்கும்போது இங்கிலாந்து 7 விக்கெட் இழந்த நிலையில் 437 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இருந்தாலும் இங்கிலாந்து டிக்ளேர் செய்யவில்லை.

    இறுதியாக 112.3 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 423 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ஒட்டுமொத்தமாக இங்கிலாந்து 463 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் இந்தியாவிற்கு 464 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. ஜடேஜா, விஹாரி தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
    அலஸ்டைர் குக் தனது கடைசி டெஸ்டின் 2-வது இன்னிங்சில் சதம் அடித்ததன் மூலம் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். #AlastairCook #ENGvIND
    இங்கிலாந்து அணியின் முன்னணி தொடக்க பேட்ஸ்மேன் அலஸ்டைர் குக். இவர் கடந்த 2006-ம் ஆண்டு இந்தியாவிற்கு எதிராக நாக்பூரில் நடைபெற்ற டெஸ்டில் அறிமுகமானார். தொடக்க வீரராக களம் இறங்கிய குக் முதல் இன்னிங்சில் 60 ரன்களும், 2-வது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 104 ரன்களும் விளாசி சாதனைப்படைத்தார்.

    தற்போது லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தோடு அலஸ்டைர் குக் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார். முதல் இன்னிங்சில் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 2-வது இன்னிங்சில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். 210 பந்தில் 8 பவுண்டரியுடன் சதம் அடித்த குக், 4-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.



    அறிமுக போட்டியில் சதம் அடித்த அலஸ்டைர் குக் விடைபெறும் டெஸ்டில் சதம் அடித்து பல்வேறு சாதனைகளுடன் விடைபெறுகிறார்.

    1. டெஸ்டின் 3-வது இன்னிங்சில் 13 சதம் அடித்து அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.

    2. ஒரு அணியின் 2-வது இன்னிங்சில் 15 சதம் அடித்து முதல் இடத்தில் உள்ளார். சங்ககரா 14 சதங்களுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

    3. இந்தியாவிற்கு எதிராக 7 சதங்கள் அடித்து, இந்தியாவிற்கு எதிராக அதிக சதங்கள் அடித்த இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கெவின் பீட்டர்சன் 6 சதங்களுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

    4. அறிமுகம் மற்றும் கடைசி டெஸ்டில் சதம் அடித்த ஐந்தாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கிரேக் சேப்பல், முகமது அசாருதீன், பில் போன்ஸ்ஃபோர்டு, ரெஹ்கி டஃப் ஆகியோர் இதற்கு முன் சதம் அடித்துள்ளனர்.



    5. அத்துடன் இந்தியாவிற்கு எதிராக அதிக ரன்கள் குவித்த 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ரிக்கி பாண்டிங் 2555 ரன்கள் அடித்துள்ளார். குக் 2362 ரன்கள் அடித்துள்ளார்.

    6. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இடது கை பேட்ஸ்மேன் என்ற பெருமைய பெற்றுள்ளார். சங்ககரா 12400 ரன்கள் அடித்துள்ளார். அலஸ்டைர் குக் அதை தாண்டியுள்ளார்.

    7. சக வீரர்களுடன் இணைந்து 77 முறை 100 பார்ட்னர்ஷிப் கொடுத்துள்ளார்.
    அலஸ்டைர் குக் அறிமுகம் மற்றும் கடைசி டெஸ்டின் இரண்டு இன்னிங்சிலும் 50 ரன்களுக்கும் மேல் அடித்து அசத்தல் சாதனையை படைத்துள்ளார். #ENGvIND #AlastairCook
    இங்கிலாந்து அணியின் முன்னணி தொடக்க பேட்ஸ்மேன் அலஸ்டைர் குக். இவர் கடந்த 2006-ம் ஆண்டு இந்தியாவிற்கு எதிராக நாக்பூரில் நடைபெற்ற டெஸ்டில் அறிமுகமானார். தொடக்க வீரராக களம் இறங்கிய குக் முதல் இன்னிங்சில் 60 ரன்களும், 2-வது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 104 ரன்களும் விளாசி சாதனைப் படைத்தார்.

    தற்போது லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தோடு அலஸ்டைர் குக் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார். முதல் இன்னிங்சில் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 2-வது இன்னிங்சிலும் அரைசதம் கடந்து விளையாடி வருகிறார்.


    2006-ல் சதம் அடித்த சந்தோசத்தில் அலஸ்டைர் குக்

    இதன்மூலம் அறிமுக டெஸ்டின் இரண்டு இன்னிங்சிலும், கடைசி டெஸ்டின் இரண்டு இன்னிங்சிலும் அரைசதம் அடித்த 2-வது வீரர் என்ற அசத்தல் சாதனையை பெற்றுள்ளார். இதற்கு முன் தென்ஆப்பிரிக்காவின் ப்ரூஸ் மிட்செல் இந்த அரிய சாதனையைப் படைத்துள்ளார்.
    இந்தியாவிற்கு எதிராக அலஸ்டைர் குக் 294 ரன்கள் அடித்ததே எனக்கு மிகவும் பிடித்தமான இன்னிங்ஸ் என ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்துள்ளார். #AlastairCook
    இங்கிலாந்து அணியின் தொடக்க பேட்ஸ்மேன் அலஸ்டைர் குக் ஓவல் டெஸ்டோடு ஓய்வு பெற இருக்கிறார். கடந்த 2006-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் அடியெடுத்து வைத்த குக், 12 வருட ஆட்டத்திற்குப் பிறகு ஓய்வு பெறுகிறார்.

    குக் அறிமுகமான ஓராண்டிற்குப் பிறகு அறிமுகமானவர் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட். குக் 161 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், பிராட் 123 போட்டிகளில் விளையாடியுள்ளார். 123 போட்டிகளிலும் குக் உடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

    அலஸ்டைர் குக் அடித்த சதத்திலேயே இந்தியாவிற்கு எதிராக 294 ரன்கள் அடித்ததுடன் எனக்கு மிகவும் பிடித்தமான ஆட்டம் என்று ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து பிராட் கூறுகையில் ‘‘எனக்கு மிகவும் பிடித்தமான சதம் எட்ஜ்பாஸ்டனில் இந்தியாவிற்கு எதிராக 2011-ல் அடித்த 294 ரன்களாகும். ஏனென்றால், அவரது சதம் எங்களுடைய பந்து வீச்சாளர்களுக்கு இரண்டரை நாட்கள் ஓய்வை கொடுத்தது.

    ஆனால் பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த வருடம் ஓவலில் நடைபெற்ற போட்டியில் அவர் பேட்டிங் செய்ததை மிகவும் ரசித்து பார்த்தேன்’’ என்றார்.
    அலஸ்டைர் குக் தனது கடைசி டெஸ்டில் ரகானே கேட்ச் விட்டதால் அரைசதம் அடித்து 71 ரன்னில் ஆட்டமிழந்தார். #ENGvIND #AlastairCook
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

    இந்த டெஸ்டோடு அலஸ்டைர் குக் ஓய்வு பெறுகிறார். இந்த தொடரில் அலஸ்டைர் குக் நான்கு டெஸ்டில் 7 இன்னிங்சில் பேட்டிங் செய்துள்ளார். ஆனால் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கும் அலஸ்டைர் குக் சதம் அடித்து பெருமிதத்துடன் விடைபெற வேண்டும் என்று இங்கிலாந்து வீரர்கள் மற்றும் ரசிகர்கள் விரும்பினார்கள்.



    மதிய உணவு இடைவேளை வரை அலஸ்டைர் குக் ஆட்டமிழக்காமல் 77 பந்தில் 37 ரன்கள் எடுத்திருந்தார். மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. இஷாந்த் ஷர்மா வீசிய ஆட்டம் தொடங்கிய 3-வது ஓவரில் (30.5) 5-வது பந்தை குக் எதிர்கொண்டார். குக் அடித்த பந்து கல்லி திசையில் நின்றிருந்த ரகானே கைக்கு நேராக சென்றது. ஆனால் ரகானே பந்தை பிடிக்க தவறினார்.

    இதனால் அலஸ்டைர் குக் 37 ரன்னில் அவுட்டாவதில் இருந்து தப்பினார். அதன்பின் 139 பந்தில் 4 பவுண்டரியுடன் அரைசதம் அடித்த அலஸ்டைர் குக், இறுதியாக 190 பந்தில் 71 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார்.
    ஓய்வு பெறப்போகும் அலஸ்டைர் குக்கை கவுரவிக்கும் வகையில் இந்திய வீரர்கள் மைதானத்திற்குள் வந்த அவரை கைதட்டி வரவேற்றனர். #ENGvIND #ThankYouChef
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்தாவது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்த டெஸ்ட் போட்டியோடு இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் அலஸ்டைர் குக் ஓய்வு பெறுகிறார்.

    இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி இந்தியா பீல்டிங் செய்ய, அலஸ்டைர் குக் பேட்டிங் செய்ய மைதானத்திற்குள் நுழைந்தார். அப்போது இந்திய வீரர்கள் அவரை கவுரவிக்கும் வகையில் கைதட்டி வரவேற்றனர்.
    டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள அலஸ்டைர் குக்கின் 11 பேர் கொண்ட அணியில் இந்திய வீரர்கள் யாருக்கும் இடம் கிடைக்கவில்லை. #alastaircook
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்து அணியின் அலஸ்டர் குக், நாளை தொடங்கும் கடைசி டெஸ்ட் போட்டிக்குப் பிறகு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனைப் படைத்திருக்கும் அலஸ்டைர் குக், தனக்கு பிடித்தமான 11 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளார். அதில் ஒரு இந்திய வீரருக்குக் கூட அவர் இடம் கொடுக்கவில்லை.



    அலஸ்டைர் குக் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. கிரஹாம் கூச் (கேப்டன்), 2. மேத்யூ ஹெய்டன், 3. பிரையன் லாரா, 4. ரிக்கி பாண்டிங், 5. ஏபி டி வில்லியர்ஸ், 6. குமார் சங்ககரா, 7. கல்லீஸ், 8. முத்தையா முரளீதரன், 9. ஷேர்ன் வார்ன், 10.0 ஜேம்ஸ் ஆண்டர்சன், 11. மெக்ராத்.

    இதுவரை 160 டெஸ்ட் போட்டிகளில், 32 சதங்கள், 46 அரை சதங்களுடன் 12554 ரன்கள் அடித்துள்ளார். அதிகபட்சமாக ஒரு இன்னிங்சில் 294 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 44.88 ஆகும்.
    சக வீரர்களிடம் ஓய்வு முடிவை தெரிவிக்கும்போது அழுது விட்டோன். அழுகையை அடக்க சில பீர்கள் தேவைப்பட்டது என குக் தெரிவித்துள்ளார். #AlastairCook
    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி தொடக்க பேட்ஸ்மேன் ஆக திகழ்பவர் அலஸ்டைர் குக். இவர் நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்கும் இந்தியாவிற்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியோடு சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெருகிறார்.

    ஓய்வு குறித்து சக வீரர்களிடம் அறிவிக்கும்போது ஆழுகையை அடக்குவதற்கு சில பீர்கள் தேவைப்பட்டது என்று குக் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து அலஸ்டைர் குக் கூறுகையில் ‘‘எனக்கு அங்கு சில பீர்கள் தேவைப்பட்டது. இல்லாவிடில், நான் ஏற்கனவே அழுததைவிட கூடுதலாக அழுதிருப்பேன். கடந்த 6 மாதங்களாக எனது மனத்திற்குள் ஓய்வு பெற வேண்டும் என்ற முடிவு ஓடிக்கொண்டே இருந்தது. மனதளவில் எனக்கு கடினமாக இருந்தது’’ என்றார்.
    சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள இங்கிலாந்து தொடக்க வீரர் அலஸ்டைர் குக்கிற்கு சச்சின் தெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார். #AlastairCook #Sachin
    இங்கிலாந்து அணியின் முன்னணி தொடக்க வீரர் அலஸ்டைர் குக். 33 வயதாகும் இவர், கடந்த 2006-ம் ஆண்டு தனது 21 வயதில் இந்தியாவிற்கு எதிரான நாக்பூர் டெஸ்டில் அறிமுகமானார். அறிமுக டெஸ்டிலேயே சதம் அடித்து அசத்தினார்.

    டெஸ்ட் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அலஸ்டைர் குக் இங்கிலாந்து அணியின் கேப்டனாகவும் பொறுப்பேற்றார். இவர் இதுவரை 160 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 32 சதங்கள், 56 அரைசதங்களுடன் 12254 ரன்கள் குவித்துள்ளார்.



    ஆனால் கடந்த ஒரு வருடமாக இவரது ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டது. தற்போது நடைபெற்று வரும் இந்தியாவிற்கு எதிரான முதல் நான்கு டெஸ்டிலும் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இந்நிலையில் இந்தியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் வருகிற 7-ந்தேதி லண்டன், கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டியோடு சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    இங்கிலாந்து அணிக்காக 160 போட்டிகளிலும், அபாரமான ஆட்டத்தையும் வெளிப்படுத்திய அலஸ்டைர் குக்கிற்கு சச்சின் தெண்டுல்கர் டுவிட்டர் மூலம் புகழாரம் சூட்டியுள்ளார். சச்சின் தனது டுவிட்டரில் ‘‘இங்கிலாந்துக்கு அணிக்காக விளையாடிய தலைசிறந்த வீரர்களில் ஒருவர். கிரிக்கெட் மைதானத்திற்கும், வெளியேயும் இவரது செயல்பாடு அப்பழுக்கற்றது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    அலஸ்டைர் குக்கின் ஓய்வு முடிவால் சச்சின் தெண்டுல்கரின் சாதனையை துரத்திக் கொண்டிருந்த அச்சுறுத்தல் முடிவிற்கு வந்துள்ளது. #Sachin #ThankYouChef #CookRetires
    இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்றும், லிட்டில் மாஸ்டர் என்றும் அழைக்கப்படுபவர் சச்சின் தெண்டுல்கர். இவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 100 சதங்கள் விளாசியுள்ளார். தனது 24 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் (1989 முதல் 2013 வரை) 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 51 சதம், 68 அரைசதங்களுடன் 15921 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 248 ரன்கள் சேர்த்துள்ளார்.

    டெஸ்ட் போட்டியில் ஒரு தனிநபர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இந்த சாதனையை முறியடிக்க எவராலும் முடியாது என்று கருதப்படுகிறது. இந்த வேளையில்தான் இங்கிலாந்து வீரரான அலஸ்டைர் குக் விஸ்வரூபம் எடுத்தார். டெஸ்ட் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.



    150 டெஸ்ட் போட்டியிலேயே 11 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்திருந்தார். அலஸ்டைர் குக் 160 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 32 சதங்கள், 56 அரைசதங்களுடன் 12254 ரன்கள் குவித்துள்ளார். அவருக்கு தற்போது 33 வயதே ஆவதால் 37 வயது வரை விளையாடினால் சச்சின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்பட்டது.

    ஆனால் கடந்த ஒரு வருடமாக அவரது ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டது. இந்தியாவிற்கு எதிரான நான்கு டெஸ்டில் 7 இன்னிங்சில் பேட்டிங் செய்துள்ளார். ஆனால் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இந்நிலையில் இந்தியாவிற்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனால் சச்சின் தெண்டுல்கரின் சாதனையை துரத்திக் கொண்டிருந்த அச்சுறுத்தல் முடிவிற்கு வந்துள்ளது.



    ரிக்கி பாண்டிங் 13378 ரன்களுடன் 2-வது இடத்திலும், கல்லீஸ் 13289 ரன்களுடன் 3-வது இடத்திலும், ராகுல் டிராவிட் 13288 ரன்களுடன் 4-வது இடத்திலும், சங்ககரா 12400 ரன்களுடன் 5-வது இடத்திலும் உள்ளனர். கடைசி டெஸ்டில் 147 ரன்கள் அடித்தால் சங்ககராவை பின்னுக்குத் தள்ளி 5-வது இடத்தை பிடிப்பார்.
    ×