search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி"

    ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #AsianHockey
    மஸ்கட்:

    5-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பைக்கான ஆண்கள் ஹாக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, மலேசியா, பாகிஸ்தான், தென்கொரியா, ஜப்பான், ஓமன் ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன. ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

    தொடக்க நாளான நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஓமனை எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 11-0 என்ற கோல் கணக்கில் ஓமனை ஊதி தள்ளியது. இந்திய அணி தரப்பில் தில்பிரீத்சிங் 3 கோலும், லலித் உபாத்யாய், ஹர்மன்பிரீத் சிங், நீலகண்ட ஷர்மா, கேப்டன் மன்தீப்சிங், குர்ஜந்த் சிங், ஆகாஷ்தீப் சிங், வருண்குமார், சிங்லென்சனா ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.

    மற்றொரு லீக் ஆட்டத்தில் மலேசியா அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஆசிய விளையாட்டு சாம்பியனான ஜப்பானை வீழ்த்தி முதல் வெற்றியை தனதாக்கியது.

    இன்று (சனிக்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டங்களில் தென்கொரியா-ஜப்பான் (இரவு 8.25 மணி), இந்தியா-பாகிஸ்தான் (இரவு 10.40 மணி) அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்-2 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

    போட்டி குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ஹரேந்திரசிங் கருத்து தெரிவிக்கையில், ‘பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இருந்து தான் எங்களுக்கு உண்மையான போட்டி தொடங்குகிறது. ஆசிய விளையாட்டு போட்டியில் அரைஇறுதியில் தோல்வி கண்ட பிறகு சில நாட்கள் எங்கள் அணியினர் கவலையுடன் இருந்தனர். ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கத்தை வெல்ல முடியாமல் போன ஏமாற்றம் நமது வீரர்கள் மனதில் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் கடந்த காலத்தில் நடந்ததை அதிகம் நினைக்கக்கூடாது. ஓமனுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் எங்கள் அணியை சேர்ந்த 9 வீரர்கள் கோல் அடித்தனர். இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெறுவது அடுத்த ஒரு மாதத்தில் நடக்க இருக்கும் உலக கோப்பை போட்டிக்கு நன்றாக தயாராகுவதற்கு உறுதுணையாக இருக்கும்’ என்றார். #AsianHockey

    ×