search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியை தாக்குதல்"

    காடையாம்பட்டி அருகே உள்ள பொட்டியபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவர் ஒருவர் ஆங்கில ஆசிரியை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள பொட்டியபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 135 மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். இங்கு 8 ஆசிரியை, ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    நேற்று முன்தினம் மதியம் பள்ளியில் உணவு இடைவேளையின்போது, 8-ம் வகுப்பு மாணவர் ஒருவர், வழக்கம்போல் வீட்டிற்கு உணவு சாப்பிட சென்றுவிட்டு மதியம் தாமதமாக பள்ளிக்கு வந்தார்.

    இதனால் வகுப்பு ஆங்கில ஆசிரியை கிரிஜா, அந்த மாணவரை ஏன் தாமதமாக வந்தாய் என கேட்டு கண்டித்துள்ளார். மேலும் பெஞ்ச் மீது ஏறி நிற்குமாறு கூறினார். இதனால் ஆவேசம் அடைந்த அந்த மாணவர் தான் கையில் வைத்திருந்த பிளாஸ்டிக் பொம்மைகளை சுவரில் எறிந்தார். இதில் ஒரு பொம்மை சுவரில் பட்டு எகிறி ஆசிரியை கிரிஜா மீது விழுந்தது. உடனே அவர், பள்ளியில் மற்ற மாணவர்களை போல் ஒழுங்காக இருக்குமாறு கூறி சத்தம் போட்டார்.

    இதனால் கோபம் அடைந்த அந்த மாணவர் தேர்வு அட்டை, தன்னுடைய புத்தகப்பை மற்றும் கையில் கிடைத்த பொருட்களை ஆசிரியை மீது வீசியெறிந்து தாக்குதல் நடத்தினார். மேலும் ஆசிரியையை ஆபாசமாக திட்டியதாகவும் கூறப்படுகிறது.

    இது குறித்து கிரிஜா, தலைமை ஆசிரியை புவனேஸ்வரியிடம் சென்று மாணவர் இப்படி செய்வதற்கு எல்லாம் நீங்கள் தான் காரணம் எனக் கூறி குற்றம் சாட்டினார்.

    இதற்கிடையே மாணவர் பள்ளியில் நடந்த வி‌ஷயத்தை தனது பெற்றோரிடம் தெரிவித்தார். பெற்றோரும் பள்ளிக்கு வந்து எங்களது மகனை நீங்கள் எப்படி? பெஞ்ச் மீது ஏறி நிற்க சொல்லலாம் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அதற்கு ஆங்கில ஆசிரியை கிரிஜா எல்லா பிள்ளைகளும் முன் கூட்டியே வகுப்பறைக்கு வந்து விடுகிறார்கள். உங்கள் மகன் மட்டும்தான் தினமும் தாமதமாக வருகிறான் என்று கூறினார். அதன் பிறகு தான் பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த வி‌ஷயம் நேற்று மாலையில் தான் வெளியே தெரியவந்தது. உடனடியாக வட்டார கல்வி அலுவலர் அன்புலி பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அங்கு ஊர் மக்களும் திரண்டனர். அவர்கள் பள்ளி தலைமை ஆசிரியை புவனேஸ்வரியையும், ஆங்கில ஆசிரியை கிரிஜாவையும் இடமாறுதல் செய்ய வேண்டும். இந்த 2 ஆசிரியைகளின் பனிப்போர் தான் பிரச்சினைக்கு காரணம். இவர்களின் மோதலால் தங்களது குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாக கூறி கல்வி அதிகாரியிடம் முறையிட்டனர்.

    அப்போது கல்வி அதிகாரி கூறுகையில், இப்போதைக்கு இடமாறுதல் எதுவும் அளிக்க முடியாது. சம்பந்தப்பட்ட மாணவர், தனது வகுப்பு ஆசிரியை மீது தாக்குதல் நடத்தியிருக்கக் கூடாது. இனிமேல் இவ்வாறு செயல்பட்டால் மாணவன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

    பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து ஓமலூர் போலீசாரிடம் கேட்டபோது, தலைமை ஆசிரியை புவனேஸ்வரிக்கும், ஆங்கில ஆசிரியை கிரிஜாவுக்கும் இடையே வகுப்புகள் நடத்துவது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. அதுமட்டுமின்றி ஆசிரியர்கள் இரு கோஷ்டிகளாக செயல்பட்டு வருகின்றனர். அவ்வப்போது 2 பேரும் மோதிக் கொள்வார்கள். அதன் எதிரொலியாக மாணவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக விசாரணையில் எங்களுக்கு தெரியவந்தது. சம்பந்தப்பட்டவர்கள் மீது கல்விதுறை தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு இதில் சம்பந்தமில்லை என கூறி கைவிரித்து விட்டனர்.

    ×