search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆலந்தூர் பகுதி"

    ஆலந்தூரில் மிக அதிகமாக உள்ள சொத்து வரியை குறைக்ககோரி ஐகோர்ட்டில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. #DMK #ChennaiHighCourt
    சென்னை:

    சென்னையில் சொத்து வரி போயஸ்கார்டன், தி.நகர், கோபாலபுரம் பகுதியில் மிக குறைவாகவும், அம்பத்தூர், ஆலந்தூர், முகப்பேர், மாதவரம் பகுதிகளில் 3 மடங்கு அதிகமாகவும் உள்ளது.

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரே சீரான வரி விதிக்க வேண்டும் என்று புறநகர் பகுதி மக்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    கடந்தவாரம் முகப்பேர் பகுதியில் முன்னாள் கவுன்சிலர் பி.வி. தமிழ்ச் செல்வன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

    இப்போது ஆலந்தூர் பகுதியில் 3 மடங்கு வரி உயர்த்தப்பட்டதை கண்டித்து அங்குள்ள மக்கள் ஆவேசத்துடன் மாநகராட்சிக்கு மனு அனுப்பி வருகின்றனர்.

    ஆலந்தூரில் மிக அதிகமாக உள்ள சொத்து வரியை குறைக்ககோரி தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ். பாரதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    ஆலந்தூர் நகராட்சி தலைவராக 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்டேன். அப்போது ஏராளமான நலத்திட்டங்களை அமல் படுத்தினேன். ஆலந்தூர்பல்லாவரம் ஒருங்கிணைந்த குடிநீர் திட்டம், பாதாள சாக்காடை திட்டம் என்று பல திட்டங்களை அமல்படுத்தினேன்.

    இந்த நிலையில், ஆலந்தூர் நகராட்சியை, சென்னை மாநகராட்சியுடன் கடந்த 2011ம் ஆண்டு தமிழக அரசு இணைத்தது. இந்த பகுதி, சென்னை மாநகராட்சியின் 160 முதல் 167வது வார்டுகளாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஜூலை 19ந்தேதி சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

    இதன்படி, சென்னை மாநகராட்சியும் சொத்து வரியை உயர்த்தியுள்ளது. அதாவது ஆலந்தூர் நகராட்சியாக முன்பு இருந்த வார்டு 160 முதல் 167 வரையிலான பகுதியில், முக்கிய சாலைக்கு அருகேயுள்ள சொத்துக்களுக்கு, ஒரு சதுர அடிக்கு ரூ.3.75 என்றும் தெருக்களில் அமைந்துள்ள சொத்துக்களுக்கு ஒரு சதுர அடிக்கு ரூ.2.50 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் சென்னை மாநகரத்தின் முக்கிய பகுதிகளான மயிலாப்பூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, லஸ் சர்ச் சாலை, ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலை, தி.நகர் வெங்கட் நாராயணா சாலை ஆகிய முக்கிய சாலையோரம் உள்ள சொத்துக்களுக்கு சதுர அடிக்கு ரூ.1.50 என்று குறைந்த தொகையை சொத்துவரியாக நிர்ணயம் செய்துள்ளனர்.

    எனவே, ஆலந்தூர் பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட சொத்து வரியை திரும்ப பெறவேண்டும் சொத்து வரியை குறைத்து நிர்ணயம் செய்யவேண்டும் என்று கடந்த 1ந்தேதி தமிழக அரசுக்கு கோரிக்கை மனு கொடுத்தும், இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே, ஆலந்தூர் பகுதியில் சொத்து வரியை மறுநிர்ணயம் செய்ய உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் விசாரித்தனர். மாநகராட்சி சார்பில் வக்கீல் டி.சி.கோபாலகிருஷ்ணன், மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி வாதிட்டனர்.

    அப்போது நீதிபதிகள், ‘மனுதாரர் வீடு ஆலந்தூரில் இருக்கும்போது, சொத்து வரி குறித்து பொதுநல வழக்கு எப்படி தொடர முடியும்? வரியை உயர்த்துவதற்கு முன்பு, பழைய சொத்து வரியை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ள வணி ரீதியான கட்டிடம் எத்தனை ? என்பது உள்ளிட்ட புள்ளிவிவரங்கள் மனுதாரரிடம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினர். பின்னர், இந்த புள்ளி விவரங்களை சேகரித்து தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வருகிற டிசம்பர் 4-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர். #DMK #ChennaiHighCourt
    ×