search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய போர்கப்பல்"

    இந்திய போர்கப்பல்களை தகர்க்க ஆழ்கடலில் தீவிரவாதிகள் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக மத்திய அரசுக்கு உளவுத்துறை தகவல் கொடுத்து எச்சரித்துள்ளது. #IndianNavy
    புதுடெல்லி:

    பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகம்மது ஆகிய இரு தீவிரவாத இயக்கங்களும் இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

    கடந்த 2008-ம் ஆண்டு மும்பைக்குள் ஊடுருவிய 10 பாகிஸ்தான் தீவிரவாதிகள் 166 பேரை கொன்று குவித்தனர். அதே போன்று பெரிய தாக்குதலை நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த சில ஆண்டுகளாக முயற்சி செய்தனர்.

    தீவிரவாதிகளின் சதி திட்டங்கள் அனைத்தையும் உளவுத்துறை தகவல்கள் உதவியுடன் இந்திய பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாக முறியடித்தப்படி உள்ளனர். கடந்த 6 மாதங்களில் மட்டும் காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற சுமார் 200 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். என்றாலும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்தியாவுக்குள் ஊடுருவும் நோக்கத்துடன் சுமார் 300 தீவிரவாதிகள் காத்து இருக்கின்றனர்.

    தரை வழியாக இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவுவதை எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் தடுப்பதில் ஓரளவு வெற்றி கண்டுள்ளனர். இதன் காரணமாக பாகிஸ்தான் தீவிரவாதிகள், வேறு வழிகளில் இந்திய ராணுவ நிலைகளை தகர்க்க திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் தீவிரவாதிகளின் பார்வை இந்திய கடற்படை மீது திரும்பியுள்ளது.

    இந்திய கடற்படை சமீப ஆண்டுகளில் மிகவும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நீர் மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணைகளை செலுத்தி தாக்குதல் நடத்தும் தொழில் நுட்பத்தில் இந்திய கடற்படை மிகுந்த முன்னேற்றம் கண்டுள்ளது. இந்தியாவிடம் தற்போது ஐ.என்.எஸ். அரிகண்ட், ஐ.என்.எஸ். அகாட், ஐ.என்.எஸ். சக்ரா எனும் 3 நீர் மூழ்கி கப்பல்கள் உள்ளன.

    இவற்றை பாகிஸ்தான் ராணுவம் மிகப்பெரும் அச்சுறுத்தலாக கருதுகிறது. எனவே இந்திய போர் கப்பல்களை குறி வைத்து தாக்குதல் நடத்தும்படி தீவிரவாதிகளுக்கு, பாகிஸ்தான் ராணுவம் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்திய போர் கப்பல்களை தகர்க்க, பாகிஸ்தான் கடல் பகுதியில் உள்ள ஆழ்கடலில் தீவிரவாதிகள் ரகசிய பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    ஜெய்ஷ்-இ-முகம்மது தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த தற்கொலைப்படை தீவிரவாதிகள் கடந்த 6 மாதமாக இந்த பயிற்சியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. நீண்ட தொலைவுக்கு கடலுக்கு அடியில் நீந்தி சென்று, கப்பல்களை குண்டு வைத்து தகர்க்கும் வகையில் அவர்கள் பயிற்சி பெறுவதை உளவுத்துறை மோப்பம் பிடித்துள்ளது.

    டெல்லியில் உள்ள உளவுத்துறை பல்முனை ஒருங்கிணைப்பு மையரிம் இதை உறுதி செய்தது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய கடற்படை தளங்களை தாக்கும் வகையிலும் ஒத்திகை நடத்தி இருப்பதையும் உளவுத்துறை கண்டறிந்துள்ளது. இதுபற்றி மத்திய அரசுக்கு தகவல் கொடுத்து உளவுத்துறை எச்சரித்துள்ளது.



    இதையடுத்து இந்திய கடற்படை போர் கப்பல்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக நீர் முழ்கி கப்பல்களுக்கும், விமானம் தாங்கி கப்பல்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    அதுபோல விசாகப்பட்டினம், கொச்சி, மும்பை உள்ளிட்ட கடற்படை தளங்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. #IndianNavy
    ×