search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா மலேசியா"

    ஆசிய விளையாட்டு ஆண்கள் ஹாக்கி போட்டியின் அரையிறுதியில் இந்திய அணி பெனால்டி ‘ஷூட்-அவுட்’டில் மலேசியாவிடம் வீழ்ந்து இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது. #AshianGames2018 #INDvsMALAYSIA
    ஜகர்தா:

    இந்தோனேஷியாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு தொடரில், ஆண்கள் ஹாக்கி போட்டியில் நேற்று நடந்த அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, மலேசியாவை எதிர்கொண்டது.

    லீக் ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காமல் 76 கோல்கள் அடித்து அசத்திய இந்திய அணியின் தடுப்பு ஆட்டம் இந்த முக்கிய போட்டியில் தவறுகள் அதிகம் நிறைந்ததாக இருந்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2 முறை முன்னிலை பெற்றாலும் அதனை தக்க வைத்து கொள்ள முடியவில்லை. வழக்கமான நேரம் முடிவில் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன.

    முதல் 5 பெனால்டி கார்னர் வாய்ப்புகளை இந்திய அணி வீணடித்தது. 6-வது பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி இந்திய அணி வீரர் ஹர்மன்பிரீத் சிங்கும், கடைசி பெனால்டி கார்னர் வாய்ப்பில் இந்திய அணி வீரர் வருண்குமாரும் கோல் அடித்தனர். மலேசிய அணி தரப்பில் பைசல் சாரி 39-வது நிமிடத்திலும், பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி முகமது ராஸி 58-வது நிமிடத்திலும் பதில் கோல் திருப்பினார்கள்.


    வழக்கமான ஆட்ட நேரம் முடிவில் இரு அணிகளும் சமநிலை பெற்றதால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ‘ஷூட்-அவுட்’ முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் அளிக்கப்பட்ட 5 வாய்ப்புகளில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்தன. 3 வாய்ப்புகளை கோட்டை விட்டன.

    மீண்டும் சமநிலை நீடித்ததால் வெற்றியை நிர்ணயிக்க ‘சடன் டெத்’ முறை அமல்படுத்தப்பட்டது. இதில் இரு அணிகளும் தொடர்ச்சியாக 4 பெனால்டி வாய்ப்புகளை அடுத்தடுத்து கோலாக மாற்றியதால் பரபரப்பு மேலும் எகிறியது. 5-வது வாய்ப்பை மலேசியா கோலாக்கி முன்னிலை பெற்றது. இதன் பிறகு இந்தியாவுக்குரிய 5-வது வாய்ப்பில் சுனில் பந்தை வெளியில் அடித்ததுடன், இந்திய அணியின் தோல்விக்கும் வித்திட்டார்.

    ‘ஷூட்-அவுட்’ முடிவில் இந்திய அணி 6-7 என்ற கோல் கணக்கில் மலேசியாவிடம் தோற்று இறுதிசுற்று வாய்ப்பை இழந்தது. ஆசிய போட்டியில் வாகை சூடும் அணிக்கு அடுத்த (2020) ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பு கிட்டும். அந்த பொன்னான வாய்ப்பையும் இந்திய அணி தவறவிட்டது. மற்றொரு அரையிறுதியில் பாகிஸ்தான் அணி 0-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானிடம் தோல் கண்டது.

    நாளை நடைபெறும் தங்கப் பதக்கத்துக்கான இறுதிப்போட்டியில் மலேசியா-ஜப்பான் அணிகள் மோதுகின்றன. முன்னதாக நடைபெறும் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தானை சந்திக்கிறது.

    பெண்கள் ஹாக்கி போட்டியில் இன்று நடைபெறும் தங்கப் பதக்கத்துக்கான இறுதிப்போட்டியில் இந்தியா-ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 1982-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய பெண்கள் ஹாக்கி அணி ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #AshianGames2018 #INDvsMALAYSIA
    ×