search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இமைக்கா நொடிகள் விமர்சனம்"

    நயன்தாரா, அனுராக் காஷ்யப், அதர்வா, ராஷி கன்னா நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் விமர்சனம். #ImaikkaNodigal #ImaikkaNodigalReview
    பெங்களூருவில் ஒரு பெண்ணை கடத்தி வைத்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டுகிறார் அனுராக் காஷ்யப். இந்த விஷயம் சிபிஐ அதிகாரியாக இருக்கும் நயன்தாராவிற்கு தெரிய, அதை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். ஆனால், அனுராக் பணம் பெற்றுக் கொண்டு அந்த பெண்ணை கொடூரமாக கொலை செய்து விடுகிறார்.

    மேலும் இதுபோன்று கொலைகள் அடிக்கடி நடக்கும் என்று நயன்தாராவிற்கு போனில் மிரட்டல் விடுகிறார். இதனையடுத்து தொடர்ந்து கொலைகள் நடக்கிறது. ஆனால், நயன்தாரா அனுராக்கை கண்டுபிடிக்க முடியாமல் தவிக்கிறார். 

    இது ஒருபுறம் நடக்க, மற்றொரு புறம் சென்னையில் நயன்தாராவின் தம்பியான அதர்வா டாக்டராக இருக்கிறார். அதே பகுதியில் இருக்கும் மாடலிங் பெண்ணான ராஷி கன்னாவிற்கும் இவருக்கும் நட்பு ஏற்படுகிறது. இவர்களின் நட்பு காதலாக மாறுகிறது. இருவரும் சொல்லிக் கொள்ளாத நிலையில், சிறு பிரச்சனையில் பிரிகிறார்கள்.

    இவர்கள் இருவரும் பெங்களூருவில் சந்திக்கிறார்கள். அப்போது ராஷி கன்னாவை அனுராக் கடத்துகிறார். இந்த கடத்தலில் அதர்வாவை சிபிஐயிடம் சிக்க வைத்து விடுகிறார். தம்பி சிபிஐயிடம் மாட்டிக் கொண்டதால் நயன்தாராவிற்கு வேலையில் பிரச்சனை ஏற்படுகிறது.



    இறுதியில் அனுராக் காஷ்யப்பை நயன்தாரா எப்படி பிடித்தார்? சிபிஐ பிடியில் இருந்து அதர்வா தப்பித்தாரா? ராஷி கன்னா என்ன ஆனார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    சிபிஐ அதிகாரியாக படத்தில் கம்பீரமாக நடித்திருக்கிறார் நயன்தாரா. தன்னுடைய கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி, அதற்கு ஏற்றார் போல் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அனுராக்கை எப்படியாவது பிடித்தாக வேண்டும். தம்பியை காப்பாற்ற வேண்டும் என நடிப்பில் வித்தியாசம் காண்பித்திருக்கிறார்.

    வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் அனுராக் காஷ்யப். தமிழ் சினிமாவில் இன்னும் பல படங்களில் வில்லனாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கலாம். நயன்தாராவின் தம்பியாக வரும் அதர்வா, இளமை துள்ளலுடன் சுறுசுறுப்பாக நடித்திருக்கிறார். ராஷி கன்னாவுடனான காதல் காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார்.

    சிறப்பு தோற்றத்தில் சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார் விஜய் சேதுபதி. இவரின் கதாபாத்திரம் படத்தின் ஓட்டத்திற்கு துணை நிற்கிறது. அதுபோல் நயன்தாராவிற்கு குழந்தையாக நடித்திருப்பவரும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.



    கிரைம் திரில்லர் கதையை வித்தியாசமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. முந்தைய படமான டிமான்ட்டி காலனி சிறந்த வரவேற்பை பெற்றதுபோல், இப்படத்தையும் ரசிகர்களுக்கு ஏற்றார் போல் இயக்கி இருக்கிறார். சில லாஜிக் மீறல்கள் சற்று படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறார். திறமையான கதாபாத்திரங்களை தேர்வு செய்து, அவர்களிடம் சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார்.

    ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக அமைந்திருக்கிறது. குறிப்பாக விஜய்சேதுபதி, நயன்தாரா பாடல் முணுமுணுக்க வைத்திருக்கிறது. பின்னணி இசையை தேவையான அளவிற்கு கொடுத்திருக்கிறார். ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு ஒரு சில இடங்களில் பளிச்சிடுகிறது.

    மொத்தத்தில் ‘இமைக்கா நொடிகள்’ மிதமான வேகம்.

    இமைக்கா நொடிகள் வீடியோ விமர்சனம் பார்க்க: 


    ×