search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்"

    21-ந் தேதி காங்கிரஸ் சார்பில் நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுக்கு பிறகே எதிர்க் கட்சிகள் கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    விஜயவாடா:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல் முடிந்து விட்டது.

    7-வது மற்றும் இறுதி கட்ட வாக்குபதிவு 59 தொகுதிகளுக்கு வருகிற 19-ந்தேதி நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை மே 23-ந்தேதி நடக்கிறது.

    இதற்கிடையே ஓட்டு எண்ணிக்கைக்கு முன்பு வருகிற 21-ந்தேதி டெல்லியில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முயற்சிகளை ஆந்திர பிரதேச முதல்-மந்திரியும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு மேற் கொண்டு வருகிறார்.

    இந்த நிலையில் 21-ந் தேதி காங்கிரஸ் சார்பில் நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுக்கு பிறகே எதிர்க் கட்சிகள் கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஓட்டு எண்ணிக்கைக்கு முன்பு நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தாபானர்ஜி, பகுஜன்சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் புறக்கணிக்க திட்டமிட்டு இருந்தனர். இந்த மூன்று கட்சிகளும் முக்கிய எதிர்க்கட்சிகளாகும்.

    இந்த புறக்கணிப்பு திட்டம் காரணமாகவே 21-ந்தேதி நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    கடந்த வாரம் மம்தாவுடன் சந்திரபாபு நாயுடு பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது தேர்தல் முடிவு வருவதற்கு முன்பு எந்த ஒரு கூட்டமும் தேவையில்லை என்று எதிர்மறையான பதிலை தெரிவித்து உள்ளார். இதன் காரணமாகவே எதிர்க்கட்சிகள் கூட்டம் தேர்தல் முடிவுக்கு பிறகு நடத்தப்படுகிறது.

    தேர்தல் முடிவுக்கு பிறகே எந்த கட்சிக்கு எவ்வளவு இடம் கிடைக்கும் என்பது தெரியவரும். அதற்கு பிறகு கூட்டம் நடத்தினால் தான் பயனாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதன் காரணமாகவே எதிர்க்கட்சி கள் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டு தேர்தல் முடிவுக்கு பிறகு நடக்கிறது.

    ×