search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம தர்மர்"

    தனது சகோதரனை போல யாரும் இறந்துவிடக்கூடாது என கருதி எமதர்மன் வேடமிட்டு, சிக்னல்களில் நின்று கொண்டு ஹெல்மட் அணியாமல் வருபவர்களை எச்சரித்து வருகிறார் வீரேஷ் முட்டினாமாத்.
    பெங்களூர்:

    பெங்களூரை சேர்ந்த மேடை நாடக கலைஞரான வீரேஷ் முட்டினாமாத் பல டிவி சீரியல்களில் நடித்துள்ளார். ஆனால், தற்போது நாடகங்களில் நடிப்பதை விட்டுவிட்டு சாலைகளில் அவர் தனது பணியை செய்து வருகிறார். பெங்களூரில் இருக்கும் முக்கிய சிக்னல்களில் எமதர்மன் வேடத்தில் நிற்கும் வீரேஷை நீங்கள் பார்க்கலாம்.

    ஹெல்மெட் அணியாதவர்கள், சாலை விதிகளை மீறி வருபவர்களை பிடித்து அவர் எச்சரிக்கை விடுத்து வருகிறார். போலீசார்தான் வீரேஷை பணியமர்த்தியுள்ளதாக பலர் நினைக்கின்றனர். ஆனால், நிஜம் வேறு. கடந்த மாதம் வீரேஷின் மூத்த சகோதரர் சாலை விபத்தில் பலியானார்.

    ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற அவர் விபத்துக்குள்ளாகி, இரண்டு நாட்கள் கோமாவில் இருந்து பின்னர் உயிரிழந்தார். ஹெல்மெட் அணிந்திருந்தால் அவர் உயிர் பிழைத்திருப்பார் என டாக்டர்கள் வீரேஷிடம் கூறியுள்ளனர். இதனை அடுத்து, தனது சகோதரர் விபத்துக்குள்ளான சாலையில் சில நாட்களாக வீரேஷ் சுற்றி வந்துள்ளார்.



    அப்போது, பலர் ஹெல்மெட் அணியாமலும், சாலை விதிகளை மதிக்காமலும் சென்று வந்ததை பார்த்து வேதனை அடைந்த வீரேஷ், தன்னால் முடிந்த அளவு விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்துள்ளார். தனக்கு தெரிந்த மேடை நாடகத்தில் வேஷம் கட்டும் திறமையை வைத்தே அந்த பணியை வீரேஷ் செய்து வருகிறார்.

    ‘ஹெல்மெட் அணியாமல் பைக்கில் வருபவர்களை நான் எச்சரிக்கும் போது பலர் என் மீது கோபப்படுவார்கள். அவர்களிடம் பொறுமையாக எனது சகோதரனுக்கு நடந்த நிலையை கூறுவேன். அதில் ஒருவராவது திருந்தி ஹெல்மெட் அணிவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது’ என வீரேஷ் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
    ×