search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எஸ்பி பாலசுப்பிரமணியம்"

    நண்பனுக்கு வக்கீல் நோட்டீஸ் கொடுப்பது சரியல்ல என்று பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வேதனையுடன் கூறியுள்ளார். #SPB
    இசையமைப்பாளர் இளையராஜா சில மாதங்களுக்கு முன்பு தனது பாடல்களை இசை நிகழ்ச்சிகளில் எஸ்.பி.பால சுப்பிரமணியம் பாடக்கூடாது என்று எதிர்த்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். இது திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு இளையராஜா பாடல்களை மேடையில் பாடுவதை தவிர்த்து வந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இப்போது மீண்டும் அந்த பாடல்களை பாட தொடங்கி உள்ளார்.

    இதற்காக இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பினால் அதை எதிர்கொள்ள தயார் என்றும் அறிவித்து உள்ளார். இதுகுறித்து ஐதராபாத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

    “இளையராஜா, தனது பாடல்களை பாடக்கூடாது என்று சொன்னாலும் நான் பாடுவேன். பாடிக்கொண்டுதான் இருப்பேன். அவர் இசையமைத்த பாடல்களை பாடுவதற்கு நேரடியாக எனக்கு தடை விதிக்கவில்லை. என் பையன் நடத்திய ஒரு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

    அமெரிக்காவில் ‘எஸ்.பி.பி 50’ என்ற பெயரில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது எனது பாடல்களை யார் பாடினாலும் அதற்கு ராயல்டி கொடுக்க வேண்டும். இல்லையேல் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அந்த பிரச்சினை இன்னும் ஓயவில்லை. அவர் ஏன் அப்படி செய்தார் என்று எனக்கு தெரியாது.



    இது நடந்த பிறகு ஒரு ஆண்டுவரை அவரது பாடல்களை பாடாமல் இருந்தேன். அதன்பிறகு யோசித்தேன். நான் இளையராஜா இசையில்தான் அதிகமாக பாடினேன். எனவே அதிலும் எனக்கு அதிக பங்கு இருக்கிறது என்று தோன்றியது. அதன்பிறகு திரும்ப பாட ஆரம்பித்து விட்டேன்.

    இதற்காக சட்டப்படி அவர் நடவடிக்கை எடுத்தால் நானும் சட்டப்படியே பதில் சொல்ல முடிவு செய்து இருக்கிறேன். எனது வேதனை என்னவென்றால் ஒரு நண்பனுக்கு அவர் வக்கீல் நோட்டீஸ் கொடுப்பது சரியல்ல. அவர் எப்படி அந்த பணத்தை வசூலிக்கிறார் என்று சொல்ல வேண்டும். எந்த பாடல்மீது அவருக்கு உரிமை இருக்கிறது என்பதையும் தெளிவாக கூற வேண்டும்.

    அப்போதுதான் இந்த பிரச்சினைக்கு ஒரு தெளிவு கிடைக்கும். அவரது பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் பாடுவேன். நிறுத்தவே மாட்டேன். இந்தமாதிரி செய்துவிட்டாரே என்பதற்காக அவர் மீது இம்மியளவும் கவுரவம் குறையவில்லை. ஒரு இசையமைப்பாளராக இப்போதும் சரி எப்போதும் சரி அவரது காலை தொட்டு கும்பிடுவதற்கு தயங்கவே மாட்டேன்.” இவ்வாறு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கூறினார்.
    ×