search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐகோர்ட்டு உத்தரவு"

    தமிழகம் முழுவதும் கொடி கம்பங்களை அகற்றி விட்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #MadrasHC
    சென்னை:

    சேலம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘கோடிக்கணக்கான ரூபாய் செலவில் மக்கள் வரிப்பணத்தில் அமைக்கப்படும் சாலைகளை தோண்டி அரசியல் கட்சியினர் கொடி கம்பங்களை நடுகின்றனர். இது, தமிழ்நாடு பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றமாகும். கொடி கம்பங்கள் நடுவதற்காக சாலைகள் தோண்டப்படுவதை கட்டுப்படுத்துவதற்கு எந்த ஒரு விதிமுறையும் இல்லை. கொடி கம்பங்கள் நடுவதால் அரசியல் கட்சிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது. எனவே, பொது இடங்களில் கட்சி கொடி கம்பங்களை அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடி கம்பங்களை அகற்றி அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

    இந்த நிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் மணிக் குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது 21 மாவட்டங்களில் ஊரக பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 58,172 கொடி கம்பங்கள் அகற்றப்பட்டு விட்டதாகவும், மீதமுள்ள 799 கொடி கம்பங்களை அப்புறப்படுத்த ஊரக வளர்ச்சித்துறை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம பஞ்சாயத்து ஆகியவற்றில் கொடி கம்பங்களை அகற்றியது குறித்து 21 மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (மாவட்ட கலெக்டர்கள்) தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளித்துள்ளதாக தேர்தல் கமிஷன் தரப்பில் ஆஜரான வக்கீல் தெரிவித்தார்.

    இதையடுத்து, தமிழகம் முழுவதும் சென்னை உள்பட மீதமுள்ள 11 மாவட்டங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடி கம்பங்களை அகற்றி ஏப்ரல் 1-ந் தேதி அறிக்கை அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர். #MadrasHC

    தமிழகம் முழுவதும் விவசாய நிலங்களில் எத்தனை மதுபானக்கடைகள் உள்ளன? என்று அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #Agriculturallands #Tasmac
    சென்னை:

    ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் நல்லசாமி நாச்சிமுத்து. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘ஈரோடு மாவட்டத்தில், மயிலம்பாடி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடையை அகற்றும்படி மாவட்ட கலெக்டருக்கு கடந்த ஜனவரி 21-ந்தேதி மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த டாஸ்மாக் கடை உள்ள இடத்துக்கு அருகே விவசாயம் நடைபெறுகிறது. இந்த இடம் வழியாக செல்லும் சாலையைதான் மாணவர்கள் பயன்படுத்துகின்றனர்.

    இந்த நிலையில், வேறு ஒரு இடத்தில் செயல்பட்டு வந்த இந்த மதுபானக்கடையை திடீரென கடந்த டிசம்பர் மாதம் விவசாய நிலத்தில் அமைத்துள்ளனர். விவசாய நிலத்தில் உள்ள இந்த டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்ற உத்தரவிட வேண்டும்‘ என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் விசாரித்தனர். பின்னர் நீதிபதிகள், ‘மனுதாரர் குற்றம் சாட்டும் டாஸ்மாக் மதுபானக்கடையை விவசாய நிலத்தில் இருந்து உடனடியாக அகற்றி, அது குறித்த அறிக்கையை இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்யவேண்டும். அதேநேரம், தமிழகம் முழுவதும் எத்தனை டாஸ்மாக் மதுபானக்கடைகள், பார்கள் விவசாய நிலங்களில் உள்ளது? என்ற விரிவான அறிக்கையையும் வருகிற 20-ந்தேதி டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தாக்கல் செய்யவேண்டும்‘ என்று உத்தரவிட்டனர். #Agriculturallands #Tasmac
    ஊருக்குள் சுற்றித்திரியும் சின்னதம்பி யானையை துன்புறுத்தாமல் பிடித்து முகாமில் அடைக்கும்படி, தலைமை வனப் பாதுகாவலருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #Chinnathambielephant
    சென்னை:

    கோவை வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் நுழைந்துள்ள சின்னதம்பி யானையை, பிடித்து முகாமில் அடைக்க வேண்டும். வனப்பகுதிக்கு அருகேயுள்ள சட்டவிரோத செங்கல்சூளைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று ஒரு வழக்கு ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. சின்னதம்பி யானையை கும்கியாக மாற்ற தடை கேட்டு மற்றொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்குகள் எல்லாம் நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், சின்னதம்பி யானையை பிடித்து முகாமில் அடைப்பதே சரியான முடிவாகும் என்று வனவிலங்கு ஆராய்ச்சியாளர் அஜய் தேசாய், அரசுக்கு அறிக்கை அனுப்பியிருந்தார். இதன்படி, இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, அஜய் தேசாய் ஆஜராகி, யானையை பிடித்து முகாமில் அடைப்பதே சரியான முடிவாகும் என்று விளக்கம் அளித்தார்.

    தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், ‘சின்னதம்பி யானையினால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய பயிர்களை யானை அழிக்கிறது. சின்னதம்பி யானையின் பாதுகாப்புடன், விவசாயிகள், பொதுமக்களின் பாதுகாப்பையும் அரசு உறுதி செய்யவேண்டியதுள்ளது. விவசாய நிலத்துக்குள் புகுந்து பயிர்களை சாப்பிட்டு பழகிவிட்டதால், இனி வனப்பகுதிக்குள் யானை செல்லாது. வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள முகாமில், சின்னதம்பி யானை நன்றாக பராமரிக்கப்படும். ஓரிரு மாதங்களில் பயிற்சி அளித்து, மற்ற யானைகளுடன் நெருங்கி பழக வைக்கப்படும்’ என்று கூறினார்.

    இதையடுத்து நீதிபதிகள், ‘யானை விவகாரத்தில் எந்த ஒரு அசம்பாவித சம்பவமும் நடந்து விடக்கூடாது. இந்த யானையை பிடித்து முகாமில் அடைப்பதுதான் நல்லது என்று வனத்துறையும், நிபுணர் அறிக்கையும் கூறுகிறது. அதனால், சின்னதம்பி யானையை பிடிக்க தகுந்த உத்தரவை தலைமை வனப்பாதுகாவலர் பிறப்பிக்க வேண்டும். அந்த யானையை பத்திரமாக முகாமில் அடைக்க வேண்டும். அதை பிடிக்கும்போதோ, வாகனத்தில் ஏற்றி முகாமுக்கு அழைத்து செல்லும்போதோ, உடல் ரீதியாக துன்புறுத்தக்கூடாது.

    இந்த நடவடிக்கையின்போது உயிர் சேதம் எதுவும் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அந்த யானையை முகாமில் அடைத்து பயிற்சி வழங்குவதா? அல்லது வனப்பகுதிக்குள் மீண்டும் கொண்டு செல்வதா? என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்’ என்றும் நீதிபதிகள் கூறினர். #Chinnathambielephant

    தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாகவும், அனுமதியின்றியும் செயல்படும் 3 ஆயிரத்து 326 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூடுமாறு தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #Tasmac #MadrasHC
    சென்னை:

    கோவை மாவட்டத்தை சேர்ந்த விவசாயி பிரபாகரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

    மனுவில், பிரபாகரன் கூறியிருப்பதாவது:-

    எனக்கு குடிப்பழக்கம் இல்லை. நான் அதிகாரிகள் மற்றும் டாஸ்மாக் கடை வாடிக்கையாளர்கள் மூலம் பல தகவல்களை சேகரித்தேன். டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுவுக்கு முறையான ரசீது வழங்கப்படுவது இல்லை.

    கோவை மாவட்டத்தில் பல டாஸ்மாக் பார்கள், சட்டவிரோதமாக செயல்படுகின்றன. இந்த நிலை தமிழகம் முழுவதும் நிலவுகிறது.

    எந்த ஒரு உரிமமும் இல்லாமலும், கட்டணம் செலுத்தாமலும் பார்கள் செயல்படுவதால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. டாஸ்மாக் கடைகளிலும், பார்களிலும் விலைப்பட்டியல் வைக்கவில்லை. அதனால், மதுபாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.



    மேலும், பார்களில் சுகாதாரமற்ற முறையில் தின்பண்டங்கள் விற்பனை செய்யப் படுவது குறித்து கோவை மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தேன். இதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள பார்களில், சோதனை செய்த உணவு தர கட்டுப்பாட்டு அதிகாரிகள், அங்கு தரமற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுவதாக அறிக்கை தாக்கல் செய்தனர்.

    இந்த பார்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. மேலும் சில டாஸ்மாக் கடைகளில் கலப்பட மதுக்களும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே, இதுபோன்ற செயல்களினால் அரசுக்கு ஏற்படும் இழப்பை தடுக்கவேண்டும்.

    அதனால், டாஸ்மாக் மதுபான கடைகளில், மோசடிகளை தடுக்கும் மற்றும் கண்டறியும் சட்ட விதிகளை அமலுக்கு கொண்டுவந்து, மதுபாட்டில்கள் மற்றும் தின்பண்ட விற்பனைக்கு ரசீது வழங்க வேண்டும் என்றும், பார்களில் தரமான உணவு தின்பண்டங்கள் விற்பனை செய்யவும், அதிக விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதை தடுக்கவும் நான் கொடுத்த கோரிக்கை மனுவை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    இந்த வழக்கிற்கு தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரை 3,326 சட்டவிரோத பார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    அதாவது, மூத்த மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் நடத்திய சோதனையில் 2,505 பார்களும், தலைமை அலுவலக அதிரடிப்படையினர் நடத்திய சோதனையில் 20 பார்களும், துணை கலெக்டர் மற்றும் அதிரடிப்படையினர் நடத்திய சோதனையில் 801 பார்களும் சட்ட விரோதமாக செயல்பட்டது கண்டறியப்பட்டு, போலீசார் மூலம் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரியவருகிறது.

    எனவே, தமிழக உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை செயலாளர், அனைத்து மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட டாஸ்மாக் மேலாளர்கள் ஆகியோர் மூலம் தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக, அனுமதியின்றி செயல்படும் பார்களை உடனடியாக இழுத்து மூட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    அதன்பின்னர், அதுகுறித்த அறிக்கையை வருகிற 20-ந் தேதி ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். #Tasmac #MadrasHC
    சட்டவிரோத கட்டிடங்களுக்கு வழங்கப்பட்டுள்ள குடிநீர்-மின் இணைப்பை துண்டித்து, அதை பிறருக்கு வழங்கவேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #HighCourt #DrinkingWater
    சென்னை:

    திருவள்ளூர் மாவட்டம், சென்னீர்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ரவிக்குமார் உள்பட சிலர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தங்களின் நிலங்களுக்கு பட்டா வழங்க மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

    இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கூடுதல் அட்வகேட் ஜெனரல் நர்மதா சம்பத் ஆஜராகி, ‘மனுதாரர்களின் அரசு நிலத்தை ஆக்கிரமித்துக்கொண்டு பட்டா கேட்பதால், அவர்களது கோரிக்கையை நிராகரித்து கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 28-ந் தேதி இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று வாதிட்டார்.

    இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக வழக்கில் ஐகோர்ட்டு தடை எதுவும் விதிக்காத பட்சத்தில், தங்கள் முன்புள்ள கோரிக்கை புகார் மனுவை அதிகாரிகள், வழக்கு நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி முடித்து வைக்கக்கூடாது.

    ஆக்கிரமிப்பாளர்களுக்கு வழங்கப்படும் மின் இணைப்பையும், குடிநீர் இணைப்பையும் துண்டிக்க வேண்டும். விரைவில் தண்ணீர் பஞ்சம் வரப்போகிறது. எனவே, இதுபோன்ற ஆக்கிரமிப்பாளர்களுக்கும், சட்டவிரோத கட்டிடங்களுக்கும் வழங்கப்படும் குடிநீர் இணைப்பை துண்டித்து, அந்த குடிநீரை வேறு நபர்களுக்கு வழங்கலாம். இந்த வழக்கை முடித்துவைக்கிறோம்.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
    மெரினா கடற்கரையை தூய்மையாக பராமரிக்கும் வகையில் திட்டம் வகுக்க டிசம்பர் 17-ந்தேதி வரை மாநகராட்சிக்கு கெடு விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Marinabeach #ChennaiCorporation
    சென்னை:

    ஆழ்கடலில் மீன்பிடிக்க மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும் என்ற புதிய விதிமுறையை எதிர்த்து மீனவர்கள் நல அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் அடங்கிய பெஞ்ச் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, உலக புகழ் பெற்ற மெரினா கடற்கரை குப்பை கூளங்களாக காட்சி அளிக்கிறது. இதை சுத்தமாக வைத்திருக்க மீனவர்களும் உதவி செய்யவேண்டும். அவர்களை மீனவர் அமைப்புகள் ஊக்கப்படுத்த வேண்டும்’ என்று கருத்து தெரிவித்தனர்.

    மற்றொரு வழக்கின் விசாரணையின்போது, மெரினா கடற்கரையை சுத்தமாக வைக்க மாநகராட்சி ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.



    இந்த நிலையில், பீட்டர் ராயன் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் அருகே சாலைகளை ஆக்கிரமித்து மீன் கடைகள் பலர் வைத்துள்ளதற்கு’ நீதிபதிகள் கடும் அதிருப்தியை தெரிவித்தனர்.

    மெரினா கடற்கரையை சுத்தம் செய்வதற்கு என்று ஒதுக்கப்படும் நிதியை கொண்டு மீனவர்களுக்கு மீன் சந்தை அமைத்துக் கொடுக்காதது ஏன்? மெரினா கடற்கரையில் மீன் கடை வைத்துள்ளவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கப்பட்டுள்ளதா? இதுவரை எத்தனை மீனவர்களுக்கு மாற்று இடம் கொடுக்கப்பட்டுள்ளது? என்றும் நீதிபதிகள் சரமாரியாக கேள்வி கேட்டனர். இதற்கு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

    பின்னர், ‘மெரினா கடற்கரையை தூய்மையாக பராமரிக்கும் வகையில் திட்டம் ஒன்றை மாநகராட்சி நிர்வாகம் வருகிற 17-ந்தேதிக்குள் உருவாக்க வேண்டும். அந்த திட்டத்தை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். பின்னர், இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம், மாநகராட்சி ஆணையர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். #Marinabeach #ChennaiCorporation
    திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு பாஸ்போர்ட்டு வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #ChennaiHC #DuraiMurugan
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், திமுக பொருளாளர் துரைமுருகன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

    ‘மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து பாஸ்போர்ட் பெற்றேன். இந்த பாஸ்போர்ட்டு வருகிற 2023-ம் ஆண்டு வரை செல்லுபடியாகும்.

    ஆனால், பாஸ்போர்ட் புத்தகத்தில் உள்ள பக்கங்கள் காலியாகி விட்டதால், புது பாஸ்போர்ட் வழங்க கோரி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தேன். ஆனால், எனக்கு பாஸ்போர்ட் வழங்க மறுத்து விட்டனர்.

    என் மீது ரூ.1.40 கோடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது என்று காரணமும் கூறுகின்றனர். ஆனால், என்னை இந்த வழக்கில் இருந்து கீழ் கோர்ட்டு விடுவித்து விட் டது.

    இதை எதிர்த்து ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே, இந்த வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறி பாஸ்போர்ட் வழங்க மறுப்பது சட்டப்படி சரியானது இல்லை. பாஸ்போர்ட்டு அதிகாரி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’.

    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா, ‘மண்டல பாஸ்போர்ட் அதிகாரியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

    துரைமுருகன் பாஸ்போர்ட் கேட்டு கொடுக்கும் புதிய விண்ணப்பத்தை 4 வாரத்துக்குள் பரிசீலித்து, அவருக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும்’ என்று நீதிபதி உத்தரவிட்டார். #ChennaiHC #DuraiMurugan
    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை நினைவிடமாக மாற்றுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிற்கு பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #PoesGarden #HC
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பெங்களூரு சிறப்பு கோர்ட்டு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்தது.

    இந்த தீர்ப்பு, சுப்ரீம் கோர்ட்டில் உறுதி செய்யப்பட்டது. தீர்ப்பின் அடிப்படையில், வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்த நிலையில், சிறப்பு கோர்ட்டு விதித்த அபராத தொகையை, ஜெயலலிதாவுக்கு சொந்தமான சொத்துகளை விற்று செலுத்த வேண்டும். அந்த வகையில் ஜெயலலிதா பெயரில் உள்ள சொத்துகளில், போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லமும் ஒன்றாக உள்ளது.

    எனவே, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் கோர்ட்டு கட்டுப்பாட்டில் உள்ள வேதா இல்லத்தை ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்ற முடியாது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், ஜெயலலிதாவின் சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளில் கர்நாடக அரசும் இறங்கவில்லை.

    ஜெயலலிதாவின் வாரிசுகள் என்று தீபா, தீபக் மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்த அம்ருதா ஆகியோர் உரிமை கொண்டாடி வருகிறார்கள். ஜெயலலிதா உயில் எழுதி வைத்துள்ளாரா?, இல்லையா? என்பது குறித்து தகவல் எதுவும் இல்லை. தமிழக அரசும் இதுகுறித்து தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.

    போயஸ் கார்டனில் வருமான வரித்துறை சோதனை நடத்தியபோது, 2 அறைகள் பூட்டி வைக்கப்பட்டன. அந்த அறைகளில் உள்ள ‘சீல்’ இன்னும் அகற்றப்படவில்லை. வருமான வரித்துறையும் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்காமல் உள்ளது.

    இப்படி பல்வேறு குழப்பங்கள், கேள்விகள் எழுந்துள்ள நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள போயஸ் கார்டன் வேதா நிலையத்தை அரசு செலவில் ஜெயலலிதா நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தமிழக அரசு எடுத்துள்ள முடிவு, விதிமுறைகளுக்கு முரணாக உள்ளது.

    சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு அரசு சார்பில் நினைவு இல்லம் அமைப்பது ஏற்கக்கூடியது அல்ல. எனவே போயஸ் கார்டன் வீட்டை நினைவகமாக மாற்றும் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வினித் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர், இந்த மனுவுக்கு 2 வாரத்துக்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். #PoesGarden #HC

    குட்கா முறைகேடு வழக்கில் தூத்துக்குடி இன்ஸ்பெக்டரின் பெயர் இல்லாததால், அவருக்கு முன்ஜாமீன் தேவையில்லை என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #GutkhaCase #HighCourt
    சென்னை:

    தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக ஆலை உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, மத்திய கலால்துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செந்தில்முருகன், சிவக்குமார் ஆகியோரை சி.பி.ஐ., போலீசார் கைது செய்துள்ளனர்.

    இதில் அதிகாரிகள் செந்தில்முருகன், நவநீதகிருஷ்ண பாண்டியன் ஆகியோர் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனுக்கள் நீதிபதி எம்.தண்டபாணி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார்கள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், ‘அதிகாரிகள் இருவரும் கடந்த 45 நாட்களாக சிறையில் இருந்து வருகின்றனர். இவர்கள் இருவர் மீதும் சி.பி.ஐ., சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. எனவே, இருவருக்கும் ஜாமீன் வழங்க வேண்டும்’ என வாதிட்டனர்.

    அப்போது சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வக்கீல் சீனிவாசன், ‘இந்த வழக்கின் புலன் விசாரணை முடிவடையவில்லை. இந்த சூழ்நிலையில் அதிகாரிகள் இருவருக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது’ என்று ஆட்சேபனை தெரிவித்து வாதிட்டார்.

    இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தற்போதைய சூழ்நிலையில், அதிகாரிகள் இருவருக்கும் ஜாமீன் வழங்க முடியாது என்று கருத்து தெரிவித்தார். இதையடுத்து, ஜாமீன் மனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பு வக்கீல்கள் கூறினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுக்களை வாபஸ் பெற அனுமதித்து, அதை தள்ளுபடி செய்தார்.

    இதேபோல இந்த குட்கா வழக்கில் தூத்துக்குடி, சிப்காட் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சம்பத், முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    தேவையில்லை

    இந்த மனுவும் நீதிபதி எம்.தண்டபாணி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.ஐ., தரப்பில் ஆஜரான வக்கீல் சீனிவாசன், ‘குட்கா வழக்கில் இன்ஸ்பெக்டர் சம்பத்தை குற்றவாளியாக சேர்க்கவில்லை. ஆரம்பக்கட்ட விசாரணை மட்டுமே அவரிடம் நடத்தப்பட்டது’ என்றார்.ஃ

    அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதி, ‘மனுதாரர் மீது வழக்கே இல்லாதபோது, முன்ஜாமீன் தேவையற்றது. அவரது முன்ஜாமீன் மனுவை முடித்து வைக்கிறேன்’ என்று உத்தரவிட்டார். #GutkhaCase #HighCourt
     
    உயர் அதிகாரிகளின் அறைகளை போன்று ரெயில் பெட்டிகளையும், ரெயில் நிலையங்களையும் சுத்தமாக பராமரிக்க நடவடிக்கை எடுப்பது பற்றி ரெயில்வே நிர்வாகம் 12 வாரத்தில் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. #HighCourt #Train
    சென்னை:

    ரெயில்களில் குளிர் சாதன பெட்டிகளில் பயணிகளுக்கு வழங்கப்படும் தலையணை, தலையணை உறை, படுக்கை விரிப்பு ஆகியவற்றை துவைக்கும் ஒப்பந்த பணியை ரத்து செய்து ரெயில்வே நிர்வாகம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தனியார் ஒப்பந்த நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். ஒப்பந்தத்தை ரத்து செய்தது சரிதான் என்றும், புதிய அறிவிப்பை வெளியிட்டு, காலதாமதம் இல்லாமல், ஒப்பந்த பணியை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    மேலும், ரெயில்களில் அசுத்தம் இருப்பதற்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    ரெயில்வே பொதுமேலாளர் மற்றும் உயர் அதிகாரிகளின் அலுவலகங்கள் எல்லாம் மிகவும் சுத்தமாகவும், நன்றாகவும் பராமரிக்கப்படுகிறது. அதுபோல, பணம் தரும் பயணிகளுக்கு, குறைந்தபட்சம் சுத்தத்தையும், சுகாதாரத்தையும் ரெயில் பயணத்தின்போது வழங்கவேண்டும்.

    பயணிகள் தரும் பணத்தை கொண்டுதான், அதிகாரிகளுக்கு சம்பளம் தரப்படுகிறது. அந்த பணத்தை கொண்டுதான் ரெயில்வே துறையும் இயங்குகிறது. எனவே, அசுத்தம் குறித்து பயணிகள் செய்யும் புகாருக்கு மதிப்பு அளிக்கவேண்டும். தங்களது பொறுப்பை அதிகாரிகள் தட்டிக்கழிக்க முடியாது.

    ஒவ்வொரு பயணிகளும் சுத்தமான சூழ்நிலையில் பயணத்தை மேற்கொள்ள உரிமை உள்ளது. அசுத்தம் குறித்து புகார் செய்யவும் அவர்களுக்கு உரிமை உள்ளது. குறைந்தபட்சம் இந்திய ரெயில்வே துறை நிர்ணயம் செய்துள்ள தரத்துக்காவது ரெயில் பெட்டிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

    அவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட தரத்துடன் பராமரிக்கப்படவில்லை என்றால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும். குளிர்சாதன பெட்டியில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கொடுக்கப்படும், படுக்கை விரிப்பு முறையாக துவைக்கப்படுவது இல்லை. பயணிகளுக்கு வழங்கப்படும் தலையணையில் இருந்தும், படுக்கை விரிப்பில் இருந்தும் துர்நாற்றம் வீசுகிறது.

    இதுமட்டுமல்ல, ரெயில் பெட்டிகளில் கரப்பான் பூச்சியும், எலியும் ஓடுவதால், இரவு முழுவதும் பயணிகள் அச்சத்துடனே பயணம் செய்கின்றனர். இந்த குறைபாடுகள் குறித்து பயணிகள் புகார் செய்தால், அதற்கு ரெயில்வே ஊழியர்கள் மதிப்பு அளித்து முறையாக பரிசீலிப்பதும் இல்லை.

    இந்த குறைபாடுகள் எல்லாம் பல ஆண்டுகளாக ரெயில் பயணிகள் அனுபவித்து வருகின்றனர். அதேபோல பல ஆண்டுகளாக, இதுகுறித்து ரெயில்வே நிர்வாகமும் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகிறது. எனவே, அதிகாரிகளும், ஊழியர்களும் பயணிகள் தெரிவிக்கும் புகாரை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்.

    ரெயில் பயணிகளின் உரிமைகள் மறுக்கப்படும்போது, அதுகுறித்து இந்த ஐகோர்ட்டு தீவிரமாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும். ரெயில்வே துறையில் பல தொழிற்சங்கங்கள் தங்களது உறுப்பினர்களுக்காக போராடுகின்றன. அதேநேரம், அந்த தொழிற்சங்கம், தங்களது உறுப்பினர்களான ரெயில்வே ஊழியர்கள், தங்களது பணிகளை அர்ப்பணிப்புடன் செய்கின்றனரா? என்பதையும் உறுதி செய்யவேண்டும்.

    எனவே, ரெயில் பெட்டிகள் மற்றும் ரெயில் நிலையங்களையும் சுகாதாரத்துடனும் பராமரிக்கப்பட வேண்டும். அந்த பணிகளை செய்யும் அதிகாரி யார்? என்பதை நிர்ணயம் செய்து, அந்த அதிகாரியிடம் அந்த பொறுப்பை, ரெயில்வே பொதுமேலாளர் ஒப்படைக்க வேண்டும்.

    சுத்தத்தை பராமரிக்காமல், அஜாக்கிரதையுடன், அலட்சியமாக செயல்படும் அந்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும். ரெயில் பெட்டிகளுக்கு உள்ளேயும், ரெயில் நிலையங்களிலும் உள்ள அசுத்தம் குறித்து பயணிகள் புகார் தெரிவிக்க பிரத்யேகமாக தொலைபேசி நம்பரை ரெயில்வே நிர்வாகம் அறிவிக்க வேண்டும்.

    இந்த தொலைபேசி எண் ரெயில் நிலையங்களிலும், ரெயில் பெட்டிகளிலும் பொதுமக்களுக்கு தெரியும் விதமாக விளம்பரம் செய்யவேண்டும். இந்த உத்தரவின்படி அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து, அதுகுறித்து அறிக்கையை 12 வாரத்துக்குள் ரெயில்வே நிர்வாகம் தாக்கல் செய்யவேண்டும்.

    இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.  #HighCourt #Train
    ஜெயலலிதாவுக்கு சட்டப்படியான வாரிசுகள் யாரும் உள்ளனரா? என்பது குறித்து வருமான வரித்துறை தெரிவிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #Jayalalithaa #HC
    சென்னை:

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா 1997-1998-ம் ஆண்டு தனக்கு 4.67 கோடி ரூபாய் மதிப்புக்கு அசையும், அசையா சொத்துகள் இருப்பதாக வருமான வரித்துறையிடம் கணக்கு தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் 7.27 லட்சம் ரூபாய் சொத்து வரியாக நிர்ணயித்து வருமான வரித்துறை உத்தரவிட்டது.

    இந்தநிலையில் ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை, ஜெயலலிதாவுக்கு ரூ.3.83 கோடி மதிப்புக்கு தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இருப்பதாகவும், செல்வ வரி கணக்கை ஜெயலலிதா முறையாக காண்பிக்கவில்லை என்றும் வருமான வரித்துறைக்கு அறிக்கை அளித்தது. அதன் அடிப்படையில், வருமான வரித்துறை அதிகாரிகள் மறு மதிப்பீடு செய்து குறிப்பிட்ட தொகையை செல்வ வரியாக செலுத்த ஜெயலலிதாவுக்கு உத்தரவிட்டனர்.

    இதை எதிர்த்து, ஜெயலலிதா வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை ஏற்றுக்கொண்ட தீர்ப்பாயம், வருமான வரித்துறை அதிகாரிகளின் திருத்திய மதிப்பீட்டை ரத்து செய்தது.



    தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்து வருமான வரித்துறை சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஹுலுவாடி ஜி.ரமேஷ், கே.கல்யாணசுந்தரம், ‘ஜெயலலிதாவுக்கு சட்டப்படியான வாரிசுகள் யாரும் உள்ளனரா? அல்லது அவர் தனது சொத்துகள் தொடர்பாக உயில் எதுவும் எழுதி வைத்துள்ளாரா? என்பது குறித்து வருமான வரித்துறை தெரிவிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

    பின்னர், விசாரணையை 26-ந் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.  #Jayalalithaa #HC
    மைனர் பெண்ணின் வயிற்றில் வளரும் கருவை கலைக்க உத்தரவிட்ட ஐகோர்ட்டு நீதிபதிகள், வருகிற 11-ந்தேதி கரு கலைத்தது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். #MadrasHighCourt
    சென்னை:

    திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவில் கூறியிருப்பதாவது:-

    என்னுடைய மகள் 2001-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிறந்தார். பிளஸ்-2 படித்துள்ளார். பள்ளியில் படிக்கும்போது, அவர் தினமும் ஆட்டோவில் சென்று வந்தார். அந்த ஆட்டோவை ஓட்டிய டிரைவர் சந்தோஷ்குமார், ஏற்கனவே திருமணமானவர். ஆனால், தனக்கு திருமணம் ஆகவில்லை என்று பொய் சொல்லி, என் மகளை காதல் வலையில் சிக்க வைத்துள்ளார்.

    இதை நம்பி, அவருடன் கடந்த மே மாதம் என் மகள் சென்று விட்டார். இதுகுறித்து போலீசில் புகார் செய்தேன். போலீசார் என் மகளை மீட்டு, மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பியபோது, அவர் கர்ப்பமாகி இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து சந்தோஷ் குமார் கைது செய்யப்பட்டார். என்னுடைய மகள் தற்போது காப்பகத்தில் அடைக்கப்பட்டுள்ளார். என் மகளுக்கு இன்னும் 17 வயது கூட ஆகவில்லை. அதனால், மைனர் பெண்ணான என் மகளது வயிற்றில் உள்ள கருவை கலைக்க வேண்டும் என்று குழந்தைகள் நல கமிட்டி, மாவட்ட மருத்துவ அதிகாரி உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும்.

    என் மகளை, இந்த ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தி, என்னிடம் ஒப்படைக்க திருப்பூர் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள் சி.டி.செல்வம், எம்.நிர்மல்குமார் ஆகியோர், சிறுமியின் கருவை கலைப்பது குறித்து பரிசோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்ய கோவை அரசு மருத்துவ கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரி டீனுக்கு உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல், சிறுமியின் உடல் நலம் குறித்து அறிக்கையை தாக்கல் செய்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் எஸ். சிலம்புச்செல்வன் ஆஜராகி வாதிட்டார்.

    மருத்துவ அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், சிறுமியின் வயிற்றில் உள்ள கருவை இன்றே கலைக்க வேண்டும். இதற்கான நடவடிக்கையை கோவை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் குழு உடனே மேற்கொள்ள வேண்டும். அதன்பின்னர் வருகிற 11-ந்தேதி கரு கலைத்தது தொடர்பான அறிக்கையை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். #MadrasHighCourt

    ×