search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒடிசா குழந்தைகள்"

    ஒடிசா மாநிலத்தில் டிட்லி புயல் கரைகடந்தபோது பிறந்த குழந்தைகளில் பலருக்கு அந்த புயலின் பெயரை சூட்டியுள்ளனர். #TitliCyclone #OdishaNewbornBabies
    புவனேஸ்வர்:

    வங்கக் கடலில் உருவான டிட்லி புயல், ஒடிசாவின் கோபால்பூருக்கும் ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்துக்கும் இடையே கடந்த வியாழக்கிழமை காலையில் கரை கடந்தது. இதையடுத்து பலத்த காற்றுடன் ஒடிசாவில் பலத்த மழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த டிட்லி புயல் உருவானதில் இருந்தே அந்த பெயர் பொதுமக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வந்தது. டிட்லி என்றால் பட்டாம்பூச்சி என்று அர்த்தம். எனவே அனைவருக்கும் பரிச்சயமான இந்தப் பெயரை குழந்தைகளுக்கு சூட்டுவதற்கு ஒடிசா மக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டினர்.



    அதன்படி டிட்லி புயல் கடற்கரையை நெருங்கிய சமயத்திலும், புயல் கரைகடந்த பிறகும் பிறந்த பல குழந்தைகளுக்கு டிட்லி என பெயர் வைத்துள்ளனர். குறிப்பாக கஞ்சம், ஜகத்சிங்பூர், நயாகர் ஆகிய பகுதிகளில் ஏராளமான குடும்பத்தினர் இந்த பெயரை குழந்தைகளுக்கு சூட்டியுள்ளனர்.

    வியாழக்கிழமை காலையில் ஒடிசா கடற்கரையை புயல் கடந்து சென்றபோது சத்தர்பூர் அரசு மருத்துவமனையில் அலெமா என்ற பெண்ணுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. அந்த இரண்டு குழந்தைகளுக்கும் டிட்லி என பெயர் வைக்க உள்ளதாக தாய் கூறினார். அதே மருத்துவமனையில் பிம்லா தாஸ் என்ற பெண்ணுக்கு காலை 7 மணியளவில் பிறந்த பெண் குழந்தைக்கும் டிட்லி என பெயரிட உள்ளார்.

    அஸ்காவில் உள்ள அரசு மருத்துவமனையில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை 11 மணி வரையில் பிறந்த 9 குழந்தைகளும் பெண் குழந்தைகள் தான். இந்த குழந்தைகள் அனைவருக்கும் டிட்லி என பெயரிட மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது. இதனை பெற்றோரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஹிஞ்சிலி, போல்சரா மருத்துவமனையில் பிறந்த இரண்டு குழந்தைகளுக்கும் டிட்லி பெயர் சூட்ட உள்ளனர்.

    கஞ்சம் மாவட்டத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் புதன்கிழமை நள்ளிரவு தொடங்கி வியாழன் காலை வரை சுமார் 64 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், ஜகத்சிங்பூர் மருத்துவமனைகளில் 6 குழந்தைகள் பிறந்ததாகவும் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    குழந்தைகளுக்கு புயலின் பெயரை வைப்பது ஒடிசாவில் இது முதல் முறையல்ல. இதற்குமுன் 1999ல் பேரழிவை ஏற்படுத்தி 10000 உயிர்களை காவு வாங்கிய சூப்பர் புயலின் பெயரையும் ஏராளமான குழந்தைகளுக்கு சூட்டியது குறிப்பிடத்தக்கது. #TitliCyclone #OdishaNewbornBabies
    ×