search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருவை கலைப்பு"

    ஆட்டோ டிரைவர் காதல் வலையில் சிக்கி கர்ப்பமடைந்த சிறுமியின் கருவை கலைப்பது தொடர்பாக மருத்துவ பரிசோதனை செய்யும்படி கோவை அரசு ஆஸ்பத்திரி டீனுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #MadrasHighCourt
    சென்னை:

    திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவில் கூறியிருப்பதாவது:-

    என்னுடைய மகள் 2001-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிறந்தார். பிளஸ் 2 படித்துள்ளார். பள்ளியில் படிக்கும்போது, அவர் தினமும் ஆட்டோவில் சென்று வந்தார். அந்த ஆட்டோவை ஓட்டிய டிரைவர் சந்தோஷ்குமார், ஏற்கனவே திருமணமானவர். ஆனால், தனக்கு திருமணம் ஆகவில்லை என்று பொய் சொல்லி, என் மகளை காதல் வலையில் சிக்க வைத்துள்ளார். இதை நம்பி, அவருடன் கடந்த மே மாதம் என் மகள் சென்று விட்டார்.

    இதுகுறித்து போலீசில் புகார் செய்தேன். போலீசார் என் மகளை மீட்டு, மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிய போது, அவர் கர்ப்பமாகி இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து சந்தோஷ் குமார் கைது செய்யப்பட்டார். என்னுடைய மகள் தற்போது காப்பகத்தில் அடைக்கப்பட்டுள்ளார்.

    என் மகளுக்கு இன்று 17 வயது கூட ஆகவில்லை. அதனால், மைனர் பெண்ணான என் மகளது வயிற்றில் உள்ள கருவை கலைக்க வேண்டும் என்று குழந்தைகள் நல கமிட்டி, மாவட்ட மருத்துவ அதிகாரி உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும். என் மகளை, இந்த ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தி, என்னிடம் ஒப்படைக்க திருப்பூர் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதிகள் செல்வம், நிர்மல்குமார் ஆகியோர் விசாரித்தனர். அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் சிலம்புச்செல்வன் ஆஜராகி வாதிட்டார்.

    இதையடுத்து நீதிபதிகள், ‘சிறுமியின் வயிற்றில் உள்ள கருவை கலைப்பது குறித்து மருத்துவ பரிசோதனை செய்யவேண்டும். இதற்காக, அந்த சிறுமியை கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் முன்பு போலீசார் ஆஜர்படுத்த வேண்டும்.

    இதற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர், குழந்தைகள் நல கமிட்டியின் தலைவர் உள்ளிட்டோர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். விசாரணையை வருகிற செப்டம்பர் 4-ந்தேதிக்கு தள்ளி வைக்கிறோம். கோவை அரசு ஆஸ்பத்திரி டீன், பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளனர்.  #MadrasHighCourt

    ×