search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ள ஓட்டுகள்"

    கேரளாவில் மேலும் 13 கள்ள ஓட்டுகள் பதிவானது தெரிய வந்துள்ளதையடுத்து, இதற்கு உடந்தையாக இருந்த வாக்குச்சாவடி தேர்தல் அதிகாரிகள் மீது சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள 20 பாராளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த மாதம் 23-ந் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது.

    இந்த தேர்தலில் கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் கள்ள ஓட்டுகள் பதிவானதாக புகார்கள் எழுந்தன. மேலும் இங்கு உள்ள சில ஓட்டுச்சாவடிகளில் சிலர் ஓட்டுப்போடும்போது அடையாள மையை அழித்துவிட்டு மீண்டும் வந்து கள்ள ஓட்டு போட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. ஓட்டுப்பதிவின்போது வெப் கேமராவில் பதிவான காட்சிகள் வெளியானதன் மூலம் இது வெட்டவெளிச்சமானது.

    இதுதொடர்பாக மாநில தேர்தல் கமி‌ஷன் விசாரணை நடத்தியது. அதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பெண் கவுன்சிலர் உள்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் மேலும் 13 கள்ள ஓட்டுகள் பதிவானது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கண்ணூர் மாவட்டம் பாம்புருட்டியில் உள்ள 166-வது வாக்குச்சாவடியில் 12 கள்ள ஓட்டுகளும், தர்ம மடம் பகுதியில் 52-வது பூத்தில் ஒரு கள்ள ஓட்டு பதிவானதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் முஸ்லிம்லீக்கை சேர்ந்தவர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்களும் கள்ள ஓட்டுப் போட்டது தெரியவந்துள்ளது. இதற்கு வாக்குச்சாவடி தேர்தல் அதிகாரிகள் 2 பேர் உடந்தையாக இருந்து உள்ளனர்.

    இதுபற்றி கேரள தலைமை தேர்தல் அதிகாரி டிக்காராம் மீனா கூறுகையில், கண்ணூர் மாவட்டம் பாம்புருட்டி, தர்மமடம் வாக்குச்சாவடிகளில் 13 கள்ள ஓட்டுகள் பதிவானதாக புகார்கள் வந்துள்ளது. கள்ள ஓட்டுப் போட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. கள்ள ஓட்டு புகார்களில் யாரையும் நாங்கள் விடமாட்டோம். பாரபட்சம் இல்லாமல் சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இதற்கிடையில் கேரள முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான உம்மன்சாண்டி கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து 10 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் முறைகேடாக நீக்கப்பட்டு உள்ளதாக புதிய புகாரை கூறி உள்ளார்.

    இதற்கு பதிலளித்து தேர்தல் அதிகாரி டிக்காரம் மீனா கூறியதாவது:-

    கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து வாக்காளர் பட்டியலை திருத்தும் பணி நடைபெற்றது. அப்போது வாக்காளர்களிடம் இருந்து 6 லட்சம் மனுக்கள் புதிதாக பெயர் சேர்க்க கொடுக்கப்பட்டது. அந்த மனுக்களை பரிசீலனை செய்து தகுதியான 4 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க பல முறை சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டது. அனைத்து கட்சியினரை கூட்டியும் ஆலோசனை நடத்தப்பட்டது.

    எனவே வாக்காளர் பட்டியலில் முறைகேடாக பெயர்கள் எதுவும் நீக்கப்படவில்லை. இதுதொடர்பாக உம்மன்சாண்டி பெரிதுபடுத்தி புகார் கூறி உள்ளார். அவர் தனது புகார் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக எங்களுக்கு எதுவும் கொடுக்கவில்லை. ஆனாலும் அதுபற்றி விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.


    ×